Tuesday, December 29, 2020

அமைதியுடன் போகச் செய்கிறீர்

இன்றைய (29 டிசம்பர் 2020) நற்செய்தி (லூக் 2:22-35)

அமைதியுடன் போகச் செய்கிறீர்

கிறிஸ்து பிறப்பின் எண்கிழமையில் இன்று நாம் சந்திக்கும் கதைமாந்தர் சிமியோன். தன் உள்ளுணர்வால் ஆண்டவரின் மெசியாவைக் கண்டுகொண்டவர். மெசியாவைக் கண்டவுடன் அவருடைய தேடல் நிறைவுபெறுகிறது. அவருடைய எதிர்பார்ப்பு முடிவுக்கு வருகிறது.காத்திருத்தல் நிறைவேறியவுடன் விடைபெற விழைகின்றார்.

விடைபெறுதல் ஒரு சோகமான அனுபவம்.

ஆனால், விடைபெறல்கள் இல்லாமல் வாழ்க்கை இல்லை.

நம் வாழ்வில் 'நிறைவு' என்ற ஓர் உணர்வை நாம் பெற்றுக்கொள்ள சிமியோன் நமக்கு அழைப்பு விடுக்கின்றார். 

ஒரு குழந்தையில் மெசியாவைக் கண்டார் சிமியோன்.

அந்தக் குழந்தையைக் கையில் ஏந்தினார்.

கையில் ஏந்தியவர், அந்தச் சின்னக் குழந்தையின் பிஞ்சு விரல் விலக்கி விடைபெறுகின்றார்.

மெசியாவையும் பற்றிக்கொள்ள விரும்பவில்லை சிமியோன்.

பற்றற்றான் பற்றை அவர் இறுகப் பற்றிக் கொண்டதால் மற்றப் பற்றுகள் அவருக்குப் பெரிதாகத் தெரியவில்லை.

தான் போவதற்கு முன் தனக்குக் கொடுக்கப்பட்ட பணியை நிறைவு செய்கின்றார்.

பற்றுகள் பல நேரங்களில் நம் வாழ்வின் தொற்றுகளாக மாற வாய்ப்பு உள்ளது.

பற்றுகள் தவிர்த்தல் நலம்.

ஆனால், அதற்கு அசாத்திய துணிச்சலும் மனத்திடமும் தேவை.

தன் வாழ்வில் தனியாhகக் காத்துக்கிடந்த சிமியோன் சற்று நேரம் அந்தக் குழந்தையின் பிஞ்சு விரல்களைப் பிடித்தார். விரல்களின் இறுக்கமும் நெருக்கமும் அவருக்குக் கிறக்கம் தந்தாலும், விரல்களை விட்டு விடைபெறுகின்றார்.

பற்றுகள் விடும்போது மனம் அமைதி பெறுகின்றது.

ஆனால், அவற்றை விட்டுவிட்டால் என்ன ஆகும்? என்று பதைபதைத்து மனம் அமைதியை இழக்கின்றது.

4 comments:

  1. விடைபெறுதல் ஒரு சோகமான அனுபவம்.

    ஆனால், விடைபெறல்கள் இல்லாமல் வாழ்க்கை இல்லை.

    பற்றுகள் தவிர்த்தல் நலம்.

    பற்றுகள் விடும்போது மனம் அமைதி பெறுகின்றது.( ஆனால்,அது மயான அமைதியாகவே இருக்கும்)

    Everything is okay.

    ஆனால் பற்று இருந்ததால் தான்,
    எலிசபத்தம்மாளின் வயிற்றில்,குழந்தை
    அக்களிப்பால் துள்ளியது.

    மகிழ்ந்திருக்கத்தான், இறைதந்தை,
    ஆதிப்பெற்றோருக்கு , ஏதேன் திட்டத்தை வழங்கினார்.

    விலக்கப்பட்டதை,தழுவாத வரை,பற்று மகிழ்ச்சியே!
    இது என் சொந்த கருத்து.

    நன்றி.

    தவறுதலாக,அதிகப்பிரசிங்கத்தனமாக, பதிவு செய்திருப்பின் மன்னிக்கவும்.🙏
    நன்றி.

    ReplyDelete
  2. அருமையிலும் அருமை! தந்தையின் ஒவ்வொரு எழுத்தும் உண்மைக்கு அச்சாரம்....அச்சிலிட்ட உண்மை! இதற்குப் பின்னூட்டம் எழுத எந்தத் தகுதியும் எனக்கில்லை என்று புரிகிறது. இருப்பினும் அவரின் எழுத்துக்களில் எத்தனை தூரம் எனக்கு உடன்பாடு மட்டுமில்லை......convictionம் இருக்கிறது என்பதை உணர்த்தவே இதைத் தொடருகிறேன்.....

    காத்திருத்தல் நிறைவேறியவுடன் விடைபெற விழைகிறார் சிமியோன். என் காத்திருத்தல் எது? அது நிறைவேறுமா? அப்படியானால் எப்போது? என்னிடம் பதிலில்லை.

    விடை பெறுதல் ஒரு சோகமான உணர்வு எனினும் அதை சுகமானதாக்க வழி சொல்கிறார் ‘ சிமியோன்.’ தான் காலகாலமாகக் காத்திருந்த ‘மெசியா’ வையும் பற்றிக்கொள்ள அவர் விரும்பவில்லை....காரணம் ‘ பற்றற்றான் பற்றினை’ அவர் இறுகப்பற்றிக்கொண்டதால் வேறெந்த பற்றும் பெரிதாகத் தெரியவில்லை. கூடவே என் மனத்தில் ஒரு கேள்வி.அப்படியானில் மெசியாவில் அவர் பற்றற்றானைப் பார்க்கவில்லையா?

    பற்றுக்கள் பல நேரங்களில் நம் வாழ்வின் தொற்றுக்களாக மாறுகின்றன....தந்தைக்கு வாழ்த்த வார்த்தைகளைத் தேடிக்கொண்டிருக்கிறேன்.

    பற்றுக்களை தவிர்த்தால் நலம் தான்.ஆனால் அது எத்தனை எளிதா? சிமியோன் பிடித்த பிஞ்சு விரல்களின் இறுக்கமும்,நெருக்கமும் கிறக்கத்தைத் தந்திடினும் விரல்களை விட்டு விடுகிறார்.

    பற்றுக்களை விடுகையில் அமைதி பெறும் மனம்...அதை விட்டபின் அதன் நிலை என்ன? மீண்டும் “ அமைதி தேடி அலையும் நெஞ்சமே!” என்று அலைய ஆரம்பிக்குமா? தந்தை தான் பதில் தர வேண்டும்.

    அழகான...அழுத்தமான... அனைவருக்கும் தேவையான.....அமைதிக்கான ஒரு தேடல். தேடல் பற்றிச் சொன்னவர் அது கிடைக்கும் இடத்தையும் குறிப்பிட்டிருந்தால் ஆறுதலாக இருந்திருக்கும். பரவாயில்லை...அவரின் வார்த்தைகள் தந்த உற்சாகத்தில் நானே தேட ஆரம்பிக்கிறேன் அந்த “ அமைதி” யை. தந்தைக்கு ‘ நன்றி’ என்ற சொல் கொஞ்சம் தான். மீதியை என் வேண்டுதலாகத் தருகிறேன். நன்றிகள்!!!

    .

    ReplyDelete