இன்றைய (7 டிசம்பர் 2020) நற்செய்தி (லூக் 5:17-26)
புதுமையானவற்றைக் கண்டோம்
தங்கள் ஊரில் நீண்ட நாள்களாக முடக்கவாதமுற்றுக் கிடந்த தங்கள் நண்பர் ஒருவரைத் தூக்கிக் கொண்டு வருகின்ற நால்வர், எப்படியாவது தங்கள் நண்பர் நலம் பெற வேண்டும் என்ற நல்லெண்ணம் மட்டும் கொள்ளாமல், கூரையைப் பிரித்து அவரை இறக்கி நலம் பெற்றுத் தருகின்றனர்.
கூரையைப் பிய்த்துக் கொடுக்கும் கடவுள் முன் கூரையைப் பிரித்து இறக்குகின்றனர்.
இயேசு நலம் தந்த இந்தச் செயல் ஒரு சிலருக்கு நெருடலை ஏற்படுத்தினாலும், 'பாவங்களை மன்னிக்க இவர் யார்?' என்ற கேள்வியை எழுப்பினாலும், இறுதியில், 'இதைக் கண்ட யாவரும் மெய்ம்மறந்தவராய்க் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தனர். அவர்கள் அச்சம் நிறைந்தவராய், 'இன்று புதுமையானவற்றைக் கண்டோம்' என்று பேசிக்கொண்டார்கள்' என லூக்கா பதிவு செய்கிறார்.
நிறைய விடயங்கள் அன்று அந்த ஊராருக்குப் புதுமையாக இருந்தன.
தங்கள் ஊருக்குள் இயேசு வந்தது ...
வீடு நிரம்பி வழியும் அளவுக்கு கூட்டம் ஓர் இல்லத்தைச் சூழ்ந்தது ...
யாரும் கண்டுகொள்ளாத ஒருவரை நால்வர் கட்டிலோடு தூக்கி வந்தது ...
கூரையைப் பிய்த்தாலும் பரவாயில்லை அவர் நலம் பெற வேண்டும் என்று மக்கள் நினைத்தது ...
உடல் நலம் பெற வந்தவருக்கு பாவம் போக்கப்பட்டது ...
பார்த்துக் கொண்டிருந்தவர்கள் முணுமுணுத்தாலும் இயேசு யாரையும் பொருட்படுத்தாமல் நலம் நல்கியது ...
இயேசுவின் வாயிலிருந்து வந்த வார்த்தைகள் அவருக்கு நலம் தந்தது ...
என்று
அன்று பல அவர்களுக்குப் புதுமையாக இருந்தன.
இன்றைய முதல் வாசகமும் இப்படிப்பட்ட ஒரு பட்டியலைக் கொடுக்கிறது.
இன்று நாம் திருவிழா கொண்டாடும் புனித அம்புரோஸ் திருஅவை வரலாற்றில் மிக முக்கியமானவர். புனித அகுஸ்தினார் தன் இறையறிதல் பாதையில் புனித அம்புரோஸின் விரல் பிடித்தே நடந்தார். மிகச் சிறந்த போதகராகவும், ஆசிரியராகவும், நல் மேய்ப்பவராகும் திகழ்ந்த புனித அம்புரோஸின் ஒரு வாக்கியத்தோடு சிந்தனையை நிறைவு செய்வோம்: 'நல்லதை நினைத்தல் மட்டுமல்ல, செய்யவும் வேண்டும்!'
இயேசு, முடக்குவாதமுற்றவரின் நலம் நினைத்தார், நலம் தந்தார்.
ஊரார் அவரின் நலம் வேண்டினர், கூரையைப் பிரித்தனர்.
நாமும் அப்படியே செய்தல் நலம்.
நம் செயல் கண்டு மற்றவர்களும், 'இன்று புதுமையானவற்றைக் கண்டோம்!' என்று வியத்தல் நலம்.
பார்த்துக்கொண்டிருந்தவர்கள் முணுமுணுத்தாலும் நல்லது செய்வதே தன் தர்மமென முடக்குவாதமுற்றவனுக்கு நலம் தருகிறார் இயேசு. நாமும் கூட ஒரு நல்லது செய்ய வேண்டுமென நினைக்க ஆரம்பிக்கும்போதே பல நூறு தடைகள் பல திசைகளிலிருந்து கூத்தாட ஆரம்பிக்கும். அதைக் கண்டு அசராமல் “ இன்று புதுமையானவற்றைக் கண்டோம்!” என்று பார்ப்பவர் வியக்குமளவிற்கு நம் சொல்லும்,செயலும் இருக்க வேண்டுமென சொல்ல வருகிறது இன்றையப் பதிவு.
ReplyDeleteகூடவே இன்றைய விழா நாயகர் புனித அம்புரோஸின் விரல் பிடித்து நடந்த அகுஸ்தினார். இவர்களின் “ நல்லதை நினைத்தல் மட்டுமல்ல,செய்ய வேண்டும்” எனும் வார்த்தைகளை நமது வேதவாக்காகவும் ஆக்க அழைப்பு விடுக்கும் தந்தைக்கு நன்றிகள்!!!