Saturday, December 12, 2020

ஆண்டவரில் பெருமகிழ்ச்சி

திருவருகைக்காலம் மூன்றாம் ஞாயிறு

I. எசாயா 61:1-2,10-11 II. 1 தெசலோனிக்கர் 5:16-24 III. யோவான் 1:6-8,19-28

ஆண்டவரில் பெருமகிழ்ச்சி

திருவருகைக்காலத்தின் மூன்றாம் ஞாயிறு மகிழ்ச்சியின் ஞாயிறு என அழைக்கப்பட்டு, இந்த நாளின் திருவழிபாட்டு நிறம் 'ரோஸ்' என வரையறுக்கப்பட்டுள்ளது. 

இன்றைய முதல் வாசகம் (காண். எசா 61:1-2,10-11) இரண்டு பகுதிகளாக அமைந்துள்ளது: முதல் பகுதியில், இறைவாக்கினர் எசாயா தன் பணியின் இலக்கு மற்றும் தன்மை பற்றி எடுத்துரைக்கின்றார். இரண்டாவது பகுதியில், வரவிருக்கும் நன்னிலை ஏற்கெனவே வந்துவிட்டதாகவும், தன் கடவுளின் செயலால் தான் பூரிப்படைவதாகவும் இறைவாக்கினர் துள்ளிக் குதிக்கின்றார்.

இந்த வாசகத்தின் பின்புலம், ஆண்டவரின் ஊழியன் அல்லது பணியாளன் என்னும் பாடலே (காண். எசா 42:1,48:16). ஆண்டவரின் பணியாளன் என்னும் தன்மையை ஒருவர் ஆண்டவரின் ஆவியாலேயே பெறுகின்றார். ஆண்டவரின் அருள்பொழிவு ஒருவரை, அவருடைய பணியாளர் நிலைக்கு உயர்த்துவதுடன் சமூகத்தில் அவருக்கென்று சில பணிகளையும் வரையறை செய்கிறது: நற்செய்தி அறிவித்தல், உள்ளம் உடைந்தோரைக் குணப்படுத்துதல், விடுதலையைப் பறைசாற்றுதல், விடிவைத் தெரிவித்தல், அருள்தரும் ஆண்டினை அறிவித்தல். இதே வாசகப் பகுதியையே இயேசுவும் தன் பணித்தொடக்கத்தில் தொழுகைக்கூடத்தில் வாசிப்பதாக லூக்கா பதிவு செய்கின்றார் (காண். லூக் 4).

இரண்டாவதாக, ஆண்டவராகிய கடவுள் தனக்கு, 'விடுதலை' மற்றும் 'நேர்மை' என்னும் இரண்டு ஆடைகளை அணிவிப்பதாக இறைவாக்கினர் மொழிகின்றார். நாடுகடத்தலின் பின்புலத்தில் இதைப் பார்த்தால், அடிமைகளாக நாடுகடத்தப்படுவர்கள் பெரும்பாலும் நிர்வாணமாக்கப்படுவர் அல்லது குறைவான ஆடைகள் அணிவிக்கப்படுவர். ஒருவரின் ஆடையைக் களைதல் என்பது அவர் அனைத்தையும் இழந்துவிட்டார் என்பதன் அடையாளம். ஆடைகள் களையப்பட்டுக் கிடந்த இஸ்ரயேல் மக்களுக்கு, ஆண்டவராகிய கடவுள், 'விடுதலை' மற்றும் 'நேர்மை' என்னும் இரண்டு ஆடைகளைக் கொடுக்கின்றார். 'விடுதலை' என்பது அவர்கள் விரைவில் பெறவிருக்கின்ற கட்டின்மையையும், 'நேர்மை' என்பது அவர்கள் இனிமேல் கடவுளின் உடன்படிக்கைக்குப் பிரமாணிக்கமாக இருப்பார்கள் என்பதையும் குறிக்கிறது. மேலும், 'மணமகன்' மற்றும் 'மணமகள்' என்னும் சொல்லாடல்கள் உடன்படிக்கை நிகழ்வை நினைவுறுத்தவதோடு, இஸ்ரயேல் மக்கள் பெறுகின்ற மகிழ்ச்சியையும் எடுத்துரைக்கிறது.

'ஆண்டவரின் நான் பெருமகிழ்ச்சி அடைவேன்' என உரக்கச் சொல்கிறார் இறைவாக்கினர். தன் செயல்களால் அல்ல, மாறாக, ஆண்டவரின் அருளாலேயே தனக்கு மகிழ்ச்சி என்பதை உணர்கிறார் எசாயா. ஆண்டவரில் ஒருவர் பெறும் மகிழ்ச்சி, ஒருவர் பெற்றுள்ள விடுதலை மற்றும் நேர்மையில் வெளிப்படுகிறது.

இன்றைய இரண்டாம் வாசகம் (காண். 1 தெச 5:16-24), புனித பவுல் தெசலோனிக்கருக்கு எழுதிய முதல் கடிதத்தின் இறுதிப் பகுதியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. புதிதாக கிறிஸ்தவ நம்பிக்கைக்குள் நுழைந்த மக்களுக்கு சில அறிவுரைகளை வழங்குகின்றார் பவுல். அந்த வகையில், இறைவேண்டல் பற்றிய அறிவுரைப் பகுதியாக இந்தப் பகுதி அமைந்துள்ளது. 'மகிழ்ச்சியாக இருங்கள்,' 'இறைவனிடம் வேண்டுங்கள்,' 'நன்றி கூறுங்கள்' என்னும் மூன்று சொல்லாடல்கள் வழியாக அவர்களுடைய இறைவேண்டலின் தன்மை எப்படி இருக்க வேண்டும் என்று உணர்த்துகின்றார். மேலும், இதுவே 'கிறிஸ்து இயேசு வழியாகக் கடவுள் வெளிப்படுத்திய திருவுளம்' என்று சொல்லி அதன் மேன்மையைக் கூட்டுகின்றார். 

தெசலோனிக்கத் திருஅவை ஓர் இளைய திருஅவை. அத்திருஅவையின் உறுப்பினர்கள் நாளும் நிறைய பிரச்சினைகளை எதிர்கொண்டனர். துன்பங்கள், மற்றவர்களின் வெறுப்பு, நிராகரிப்பு, கேலிப் பேச்சு, அவமானம் என தங்களுடைய அண்டை வீட்டாரிடமிருந்து நிறைய இக்கட்டுகளை எதிர்கொண்டனர். பவுல் அந்த நகரத்தில் நற்செய்தி அறிவிக்கும்போதும் துன்பத்துக்கு ஆளானார். ஆனாலும், ஒரு நல்ல தந்தையாய் அவர்கள்மேல் அக்கறை கொண்டிருந்தார். ஆகையால்தான், 'எப்போதும்,' 'இடைவிடாது,' 'எல்லாச் சூழ்நிலையிலும்' என்று உற்சாகப்படுத்துகின்றார். மேலும், 'தூய ஆவியாரின் செயல்பாட்டைத் தடுத்துவிடவோ, அந்த நெருப்பை அணைத்துவிடவோ வேண்டாம்!' என எச்சரிக்கின்றார். ஏனெனில், அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் அவர்களைச் சோர்வுக்கு உள்ளாக்கி, தங்களுடைய நம்பிக்கை வாழ்விலிருந்து அவர்களை பின்நோக்கித் தள்ளிவிடும் என அஞ்சினார். 

ஆகவே,மகிழ்ச்சி, இறைவேண்டல், நன்றி ஆகியவற்றின் வழியாக தங்கள் நம்பிக்கை வாழ்வை அவர்கள் தக்கவைக்கவும், தகவமைக்கவும் வேண்டும் எனப் பவுல் விரும்புகின்றார். ஆண்டவரை மையமாக வைத்து வாழும் வாழ்வில் மகிழ்ச்சி மேலோங்கி நிற்கிறது.

நற்செய்தி வாசகம் (காண். யோவா 1:6-8,19-28), கடந்த வார வாசகத்தின் தொடர்ச்சியாக இருக்கிறது. திருமுழுக்கு யோவான் யார் என்று அறிமுகம் செய்கின்ற நற்செய்தியாளர் யோவான், தொடர்ந்து, அவர் தன்னைப் பற்றியும், தனக்குப் பின் வரும் மெசியா பற்றியும் அறிந்த அறிவுபற்றி ஒரு நிகழ்ச்சி வழியாக விளக்குகின்றார். 'நீர் யார்?' என்று மக்கள் கேட்டபோது, 'நான் மெசியா அல்ல!' என்று வெளிப்படையாகச் சொல்லிவிடுகின்றார். மேலும், 'நான் ஒரு குரல்' என்று தன்னை அடையாளப்படுத்துகின்றார். மேலும், யோவா 3:29இல், 'மணமகள் மணமகனுக்கே உரியவர். மணமகனின் தோழரோ அருகில் நின்று அவர் சொல்வதைக் கேட்கிறார். அதில் அவர் பெருமகிழ்ச்சி அடைகிறார். என் மகிழ்ச்சியும் இது போன்றது. இம்மகிழ்ச்சி என்னுள் நிறைந்துள்ளது' என்று திருமுழுக்கு யோவான் கூறுகிறார். 

'நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்,' 'நான் மணமகனின் குரல் கேட்பதில் மகிழ்கிறேன்' என்று சொல்லும் திருமுழுக்கு யோவானின் வார்த்தைகளில் அவருடைய பெருந்தன்மை புலப்படுகிறது.

ஆண்டவரின் மெசியாவை அறிந்து, அவரைப் பற்றி அறிவித்து, அவருக்கு வழிவிடுவதில் மகிழ்கின்றார் யோவான்.

ஆக,

முதல் வாசகத்தில், ஆண்டவர் தரும் விடுதலையும் நேர்மையும் இறைவாக்கினர் எசாயாவுக்கும் இஸ்ரயேல் மக்களுக்கும் மகிழ்ச்சி தருகின்றது.

இரண்டாம் வாசகத்தில், ஆண்டவர் இயேசுமேல் கொண்டுள்ள நம்பிக்கை தெசலோனிக்க சமூகத்தின் மகிழ்ச்சிக்குக் காரணமாக இருக்கிறது.

நற்செய்தி வாசகத்தில், ஆண்டவர் பற்றிய அறிவு திருமுழுக்கு யோவானுக்கு மகிழ்ச்சி தருகிறது.

இன்றைய இறைவார்த்தை வழிபாடு நம் வாழ்வுக்குச் சொல்வது என்ன?

நம் வாழ்வின் இலக்கு மகிழ்ச்சியே. நாம் அனைவரும் இந்த ஒற்றை வார்த்தைக்காகத்தான் வாழ்கிறோம், இருக்கிறோம், இயங்குகிறோம். ஆனால், பல நேரங்களில் நம் விரல்களுக்கிடையில் நழுவும் தண்ணீர் போல மகிழ்ச்சி நம் உள்ளங்கைகளிலிருந்து நழுவி விடுகிறது. சில நேரங்களில் நாமே மகிழ்ச்சி என்னும் தண்ணீரை நம் கைகளிலிருந்து உதறி விடுகிறோம்.

ஆண்டவரில் அடையும் மகிழ்ச்சியே சிறந்த மகிழ்ச்சி. 'ஆண்டவரின் மகிழ்வே நம் வலிமை' என்கிறார் நெகேமியா (காண். நெகே 8:10).

இந்த மகிழ்ச்சியை நாம் எப்படி அடைவது?

(அ) விடுதலை மற்றும் நேர்மை வழியாக

'பாவம் செய்யும் எவரும் பாவத்திற்கு அடிமை. வீட்டில் அடிமைக்கு நிலையான இடமில்லை' என்கிறார் இயேசு (காண். யோவா 8:34). மேலும், 'உண்மை உங்களுக்கு விடுதலை அளிக்கும்' என்கிறார் (காண். யோவா 8:32). விடுதலை அல்லது கட்டின்மை உணர்வுதான் நமக்கு மகிழ்ச்சி தரும். தவறான பழக்கங்கள் அல்லது உறவுநிலைகள் அல்லது பணிகள் அல்லது எண்ணங்களுக்கு நாம் அடிமையாக இருந்தால் நம் மகிழ்ச்சியை நாம் இழக்கிறோம். தொடர்ந்து, 'நேரிய நடத்தை' நமக்கு இயல்பாகவே மகிழ்ச்சியைத் தருகிறது.

(ஆ) தெளிந்த தெரிவு (discernment)

சில நேரங்களில் நம் தெரிவுகள் நம் மகிழ்ச்சியைக் கெடுத்துவிடுகின்றன. தவறான நபரைத் தெரிவு செய்வது, தவறான பாதையைத் தெரிவு செய்வது என பல நேரங்களில் சரியான தெரிவுகளை எடுக்க நாம் தவறிவிடுகிறோம். இரண்டாம் வாசகத்தில் பவுல் ஒரு ஃபார்முலா கற்றுத்தருகிறார்: 'அனைத்தையும் சீர்தூக்கிப் பாருங்கள். நல்லதைப் பற்றிக்கொள்ளுங்கள். எல்லா வகையான தீமைகளையும் விட்டு விலகுங்கள்.' ஆக, அனைத்தையும் சீர்தூக்கிப் பார்த்து, அல்லதை விலக்கி நல்லதைப் பற்றிக்கொள்ளும் ஒருவர் சரியான தெரிவை எடுக்கிறார். அத்தெரிவு அவருக்கு மகிழ்ச்சி தருகிறது.

(இ) குரல் கேட்டல், குரலாய் இருத்தல்

மணமகனின் குரல் கேட்பதில் மகிழும் தோழராகிய யோவான், பாலைநிலத்தில் அவருடைய குரலாக நிற்கிறார். இறைவனின் குரலைக் கேட்பதும், அவரின் குரலாக நான் மாறுவதும் எனக்கு மகிழ்ச்சி தருகிறது.

இறுதியாக,

'என் மீட்பராம் கடவுளை நினைத்து எனது மனம் பேருவகை கொள்கின்றது' என இன்றைய பதிலுரைப்பாடலில் அக்களிக்கிறார் மரியாள் (காண். லூக் 1).

கடவுளை நினைத்தலே பேரின்பம். ஏனெனில், அவரே நம் மகிழ்ச்சியின் ஊற்று.

2 comments:

  1. கடவுளை நினைத்தலே பேரின்பம். ஏனெனில், அவரே நம் மகிழ்ச்சியின் ஊற்று.

    நன்றி🙏

    ReplyDelete
  2. திருவருகைக்காலத்தின் மூன்றாம் வாரம்.....அனைத்து வாசகங்களிலும் ‘ மகிழ்ச்சியின் நாதம்’ ஒலிப்பதைக் கேட்க முடிகிறது.

    முதல் வாசகத்தில் “ வரவிருக்கும் நன்னிலையும்,மகிழ்ச்சியும் ஏற்கனவே வந்துவிட்டதாக க்கூறும் ஏசாயாவின் வார்த்தைகள் நாம்2020 ல் அனுபவித்த அத்தனை சோகங்களும் மறைந்து, 2021 ல் நாம் பெறப்போகும் மகிழ்ச்சியை முன்னறிவிப்பது போல் உள்ளது.

    இரண்டாம் வாசகத்தில் பவுலடியார் தெசலோனியருக்குக் கூறும் “ எப்பொழுதும் மகிழ்ச்சியாயிருங்கள்.... ஆண்டவருக்கு எச்சூழ்நிலையிலும் நன்றிகூறுங்கள்...அவரிடம் மன்றாடுங்கள்” எனும் வார்த்தைகள் நம் உள்ள மற்றும் உடல் சோர்வைப் போக்குகின்றன.

    நற்செய்தியில் வரும் திருமுழுக்கு யோவானின் தாழ்ச்சி மிகு “நான் அவரல்ல....அவரின் தோழன்.....அவரில் நான் மகிழ்கிறேன்” எனும் வார்த்தைகள் நாம் யாரென்று புரிந்து கொள்ளவும்...நம் உண்மை நிலையைத் தோலுரித்துக் காட்டவும் நமக்கு வழி சொல்கின்றன.

    இத்தனையும் உண்மையாய் இருக்கும் பட்சத்தில் நம்மாலும் மரியாள் போல்...” என் மீட்பராம் கடவுளை நினைத்து எனது மனம் பேருவகைக் கொள்கிறது” என்று சொல்ல முடியும் என ஆரூடம் சொல்லும் தந்தைக்கு என் நன்றிகளும்! ஞாயிறு வணக்கங்களும்!!!

    “பல நேரங்களில் நம் விரல்களுக்கிடையில் நழுவும் தண்ணீர்போல மகிழ்ச்சி நம் கைகளிலிருந்து நழுவி விடுகிறது்”....... அருமையான உருவகம்! வாழ்த்துக்கள் தந்தைக்கு!

    ReplyDelete