இன்றைய (22 டிசம்பர் 2020) முதல் வாசகம் (1 சாமு 1:24-28)
இன்னும் சிறு பையனாகவே
விவிலியத்தில் நாம் காணும் பெண்கள் சிலர் கடவுளையே கடன்பட வைத்தவர்கள். அப்படிப்பட்ட வரிசையில் முக்கியமான இடத்தைப் பிடிப்பவர் சாமுவேலின் அம்மா அன்னா.
நிறைய ஆண்டுகள் கடந்து, நிறையக் கண்ணீர் வடித்து, நிறைய அவமானங்கள் சுமந்து குழந்தை பெற்ற அன்னா, பிறந்த குழந்தை பால்குடி மறந்தவுடன் அவரை அள்ளிக்கொண்டு போகிறார் அன்னா.
அன்னா கோவிலுக்குப் போகும் ஸ்டைல் நம்மை வியக்க வைக்கிறது.
இடுப்பில் குட்டிக் குழந்தை சாமுவேல், தலையில் ஒரு மரக்கால் மாவு, தோளின் குறுக்கே தொங்கும் திராட்சை இரசம், இன்னொரு கையில் மூன்று காளை மாடுகளை இணைத்துப் பிடித்த ஒரு கயிறு. வேகமாக நடக்கிறார் அன்னா. மலையில் உள்ள ஆலயத்திற்கு ஓட்டமும் நடையுமாக, மூச்சிரைக்கப் போகிறார்.
'சாமுவேல் இன்னும் சிறு பையனாகவே இருந்தான்' - ஆனால் அன்னாவின் மனம் கழுகுபோலப் பறந்தது.
அதற்குக் காரணம், அன்னாவின் நிறைவு மனப்பாங்கு (abundance mindset or mentality).
இந்த மனப்பாங்கு வந்துவிட்டால், எல்லாமே எளிதாகிவிடும்.
கையை நீட்டி மகனைப் பெற்றுக்கொண்ட அன்னா, அப்படியே கையை விரித்துக் கொடுக்கின்றார்.
நற்செய்தி வாசகத்தில் அன்னை கன்னி மரியாளின் புகழ்ப்பாடலை வாசிக்கின்றோம்.
எலிசபெத்தம்மாள் மரியாவை வாழ்த்த, மரியாவோ கடவுளை வாழ்த்துகிறார்.
இன்று நாமும் கடவுளிடமிருந்து நிறைய அருள்கொடைகளைப் பெறுகின்றோம். நாம் அவற்றுக்காக நன்றி செலுத்துகின்றோமா? அவரைப் பாடுகின்றோமா? அவருக்கு அள்ளிக் கொடுக்கின்றோமா?
'நிறைவு மனப்பாங்கு' பெறுவது எப்படி?
1. அதிகமாக நன்றி சொல்வதை நம் வழக்கமாக்கிக் கொள்வது.
நாம் கடவுளிடம் பெற்ற நன்மைகளுக்காக, மற்றவர்களிடம் பெற்ற நன்மைகளுக்காக, நமக்கு நாமே செய்த நன்மைகளுக்காக என நன்றி சொல்லிக் கொண்டே இருந்தால், அது நாளும் நம் வழக்கமாகிவிடும்.
2. நேர்முகமான பார்வை கொண்ட மக்களை அருகில் வைத்துக்கொள்வது
நம்மைச் சுற்றி இருக்கும் நபர்கள் நம் மனப்பாங்கை நிறையவே பாதிக்கிறார்கள். நேர்முகமான பார்வை கொண்ட மனிதர்களை அருகில் வைத்துக்கொள்ள வேண்டும். அல்லது எதிர்மறையான மனிதர்களைத் தூரத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்.
3. நிறைவான வாழ்க்கை வாழ்வது
சரியான இலக்குகளை நிர்ணயத்து, அவற்றை நோக்கி விடாமுயற்சியுடன் பயணம் செய்வது. அன்றாட இலக்குகளை நிர்ணயித்து, அவற்றை நிறைவேற்றுவது. சின்னச் சின்ன வாக்குறுதிகள் கொடுத்தாலும் அதில் பிரமாணிக்கமாக இருப்பது. எடுத்துக்காட்டாக, 5 மணிக்கு வேக்-அப் டைமர் வைத்தால் சரியாக 5 மணிக்கு எழுந்துவிடுவது.
4. நம் வலிமையின்மேல் கவனம் செலுத்துவது
நம் வலுவின்மையைப் பற்றி அதிகம் கவலைப்படக்கூடாது. நம் வலிமை என்று நாம் எதை உணர்கிறோமோ அதில் கவனம் செலுத்துவது.
5. நாம் விரும்புவதை அதிகம் செய்வது
அல்லது செய்வது அனைத்தையும் விரும்பி, அல்லது முழு மனத்துடன் செய்வது.
6. புதிதாக்கிக் கொண்டே இருத்தல்
உடல், உள்ளம், ஆன்மா என அனைத்துக்கும் புத்தாக்கம் அவசியம். உடற்பயிற்சி உடலுக்கு, வாசித்தல் அல்லது நல்லோர் சொல் கேட்டல் உள்ளத்துக்கு, இறைவார்த்தை மற்றும் தியானம் ஆன்மாவுக்கு.
நிறைவு மனப்பான்மை வந்தால் நம் மனம் ஏதாவது ஒரு பாடலை முணுமுணுத்துக்கொண்டே இருக்கும் - மரியா போல!
அந்த மனப்பான்மை கடவுளையும் கடனாளியாக்கிவிடும் - அன்னா போல!
கையை நீட்டி மகனைப் பெற்றுக்கொண்ட அன்னா அப்படியே கையை விரித்துக்கொடுக்கிறார்...
ReplyDeleteஎலிசபெத்தம்மா மரியாவை வாழ்த்த, மரியாவோ கடவுளை வாழ்த்துகிறார்.
இவர்கள் இருவரும் நமக்குக் கற்றுத்தருவது “ நிறைவு மனப்பாங்கு.”
அடுக்கிக் கொண்டே போகிறார் தந்தை. இவை அத்தனையையும் நமதாக்கிக்கொள்ள இயலாமல் போனாலும் நேர்முகப்பார்வை..நிறைவான வாழ்க்கை...செய்வதனைத்தையும் விரும்பிச்செய்தல் ...போன்றவற்றை நமதாக்கிக் கொள்ளலாமே! ஆரம்பித்த சில நாட்களில் அவை நம்மை அடிமைப்படுத்திவிடும்...
உடல்,உள்ளம்,ஆன்மாவுக்கு புதிதாக்கம் அவசியம்.....புதுமையாக உள்ளது தந்தையின் சிந்தனை. ஆம்! நிறைவு மனப்பான்மை முதலில் மரியா போல் நம்மை முடுமுணுக்க
வைக்கவும், பின் அன்னா போல் கடவுளையே கடனாளியாக்கவும் நமக்குக் கைகொடுக்கும்!
“ கடவுளையே கடனாளியாக்குவது!” ...எத்தனை உயர்ந்த சிந்தனை. நாளும் பல உயர்ந்த சிந்தனைகளை நமதாக்கிக்கொள்ளத்தூண்டும் ‘சிந்தனை சிற்பி’ தந்தைக்கு வாழ்த்துக்கள்!!!
Amen
ReplyDelete