Friday, January 1, 2021

தாய் மூவர்

புத்தாண்டுப் பெருவிழா - மரியா இறைவனின் தாய்

I. எண்ணிக்கை 6:22-27 II. கலாத்தியர் 4:4-7 III. லூக்கா 2:16-21

தாய் மூவர்

இன்றைய நாள் நான்கு நிலைகளில் முக்கியத்துவம் பெறுகிறது: (அ) கிரகோரியன் காலண்டர் படி இன்று ஆண்டின் முதல் நாள் - புத்தாண்டுப் பெருநாள், (ஆ) கன்னி மரியாள் இறைவனின் தாய் - திருஅவைத் திருநாள், (இ) கிறிஸ்து பிறப்பின் எட்டாம் திருவிழா - கிறிஸ்து பிறப்பின் எண்கிழமை நிறையும் நாள், (ஈ) மரியாளும் யோசேப்பும் தங்களுடைய குழந்தைக்கு 'இயேசு' என்று பெயரிட்ட நாள் - இயேசுவின் பெயர் விழா.

புதியது எதுவும் ஒருசேர நமக்கு வியப்பையும் பயத்தையும் தருகிறது என்பது நம் வாழ்வியல் அனுபவம். புதிய உறவு, புதிய உடை, புதிய உறைவிடம், புதிய பணி, புதிய முயற்சி என அன்றாடம் பல புதியவற்றை, புதியவர்களைக் கடந்து வருகின்றோம். புதிய ஆண்டுக்குள் நாம் நுழைகின்றோம் இன்று. புதிய நாள்காட்டி, புதிய டைரி, புதிய காலக்கட்டகம் என நாம் உற்சாகமாக புதிய ஆண்டைத் தொடங்குகின்றோம். கடந்த ஆண்டு நமக்கு இனிய ஆண்டாக இருந்திருக்கலாம், அல்லது சோகமான ஆண்டாக இருந்திருக்கலாம். நாம் போற்றிப் பாதுகாத்த உறவு நம்மை விட்டுப் போயிருக்கலாம். அல்லது புதிய உறவு உற்சாகம் தந்துகொண்டிருக்கலாம். ஒவ்வொன்றும் நம் தனிப்பட்ட அனுபவமே.

ஆனால், இன்று நாம் இந்தப் புதிய ஆண்டுக்குள் நுழைவதே மகிழ்ச்சி.

ஏனெனில், 'காலங்கள் அவருடையன. யுகங்களும் அவருடையன' என்பது நம் திருவழிபாட்டில் நாம் கற்கும் பாடம். 'என் வாழ்வின் ஒவ்வொரு கட்டமும் உம் கையில் உள்ளன' எனத் திருப்பாடல் ஆசிரியர் ஆண்டவரிடம் சரணாகதி அடைகின்றார். இன்று நாம் இந்த நாளில் இருப்பது இறைவனின் கொடை. இன்று நான் எங்கே இருக்க வேண்டும் என்பதை நான் முடிவு செய்யலாம். ஆனால், இன்று நான் இருக்க முடியுமா என்பதை முடிவுசெய்வது அவரே. ஆகவே, 'காலம் என்றும் அவருடையது.' அவரே, 'ஒவ்வொன்றையும் அதனதன் காலத்தில் செம்மையாகச் செய்துமுடிக்கின்றார்' (காண். சஉ 3:11).

காலத்தைப் பற்றி அதிகம் பேசும் விவிலிய நூல் 'சபை உரையாளர்.' 'ஒன்றின் தொடக்கமல்ல. அதன் முடிவே கவனிக்கத்தக்கது' (காண். சஉ 8:7) என்ற அழகிய வாக்கியத்தை நாம் இந்நூலில் பார்க்கிறோம். ஆக, சபை உரையாளரைப் பொருத்தவரையில், 'ஜனவரி' அல்ல, மாறாக 'டிசம்பர்' தான் முக்கியம் என்று பொருளா? இல்லை. அப்புறம்? 'உன் ஜனவரி நன்றாக இருக்க வேண்டுமென்றால், உன் டிசம்பரை மனத்தில் வைத்துத் தொடங்கு' என்கிறார் சபை உரையாளர். 'உன் இளமைக்காலம் நன்றாக இருக்க வேண்டுமென்றால் உன் முதுமைக்காலத்தை மனத்தில் வைத்துத் தொடங்கு!' முடிவை மனத்தில் வைத்துத் தொடங்குவதே நல்ல தொடக்கம். இதையே, ஸ்டீபன் கோவே என்ற மேலாண்மையியல் ஆசிரியர், 'முடிவை மனத்தில் வைத்துத் தொடங்குவது' ('begin with the end in mind') மேன்மையான மக்களின் இரண்டாவது பண்பு என்கிறார்.

மரியாவை இறைவனின் தாயாகக் கொண்டாடுதல் இன்று மிகவும் பொருத்தமாக இருக்கிறது. 

மரியா இறைவனின் தாயாக எப்படி இருக்கிறார் என்றும், அவருடைய இந்தத் தாய்மையின் பிறப்பிடம் எது என்றும், அவரின் தாய்மை நமது புத்தாண்டுப் பயணத்திற்கு எப்படித் தூண்டுதலாக இருக்கிறது என்றும் சிந்திப்போம்.

விவிலியம் எண்ணற்ற தாய்மார்களின் பெயர்களைத் தாங்கியுள்ளது. எனினும், அவர்களில் மூன்று தாய்மார்கள் நம் கவனத்தை ஈர்க்கிறார்கள். முதலில், 'உயிருள்ளோர் அனைவருக்கும் தாய்' என்று விவிலியம் வர்ணிக்கின்ற ஏவா. இரண்டாவதாக, 'விடுதலைப்பயணத்தின் தாய்' என்று யூத ரபி மித்ராஷ் இலக்கியங்கள் வர்ணிக்கின்ற மிரியம், மூன்றாவதாக, 'இறைவனின் தாய்' என்று நம் திருஅவை அழைத்து மகிழ்கின்ற மரியா.

முதலில், ஏவா என்னும் தாயை நம் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்.

படைப்பின் முதற்பெண்ணாகிய இவருக்கு விவிலியம் இரு பெயர்களைத் தருகிறது. முதலில், 'ஆணிடமிருந்து (ஈஷ்) இவள் எடுக்கப்பட்டதால் இவள் பெண் (ஈஷா)' என்கிறது விவிலியம். தொடர்ந்து, முதற்பெற்றோர் விலக்கப்பட்ட கனியை உண்டு, கண்கள் திறக்கப்பட்டு, கடவுளின் சாபத்துக்கு ஆளானபின், 'மனிதன் தன் மனைவிக்கு 'ஏவாள்' என்று பெயரிட்டான். ஏனெனில், உயிருள்ளோர் அனைவருக்கும் அவளே தாய்' என்று மொழிவது போல, அவர் 'ஏவாள்' (தாய்) என அழைக்கப்படுகின்றார். பெண்ணாக இருந்த அவர் தாயாக மாற அவர் ஒரு நீண்ட பயணம் செய்ய வேண்டியிருந்தது. அந்தப் பயணம், அவரது கணவனிடமிருந்து தொடங்கி, விலக்கப்பட்ட மரம் நோக்கி நகர்ந்து, மீண்டும் கணவரிடம் வந்து, இறுதியாகக் கடவுள் முன் முடிகிறது. 

ஏவாளின் மேல்வரிச்சட்டம் என்ன?

'நான் தலைவர். என் சொற்படி நீ செய்யும்!' என்ற மனநிலையில் வாழ்கிறார். அதாவது, தான் ஏற்கெனவே கடவுளைப் போல இருந்தாலும், 'கடவுளைப் போல ஆக வேண்டும்' என்ற ஒரு எண்ணம் கொண்டிருக்கிறார். அந்த எண்ணத்தில் அவருடைய துணைவரும் பங்கேற்கிறார்.

இப்படி வாழ்கின்ற மனநிலை நம்மில் தூண்டுகின்ற உணர்வின் பெயர், 'என் வாழ்வு என் உரிமை' என்ற மனநிலை ('sense of entitlement'). இந்த உணர்வில் ஒருவர் தனக்கு எல்லாம் தான் நினைப்பது போலக் கிடைக்க வேண்டும் என்று தன்முனைப்புடன் செயல்பட்டு விரக்திக்கு ஆளாவார். இந்த உணர்வு நாம் பெற்றிருக்கின்ற நல்லது அனைத்தையும் நம் கண்களிலிருந்து மறைத்துவிட்டு, நம் குறையை மட்டுமே பெரிதாகக் காட்டும். 'நான் ஒரு பங்குத்தந்தை. நான் வரும்போது கேட் திறக்கின்ற வாட்ச்மேன் எனக்கு சல்யூட் அடிக்கவில்லை! என்று மனம் சலனப்படும். 'நான் வந்தவுடன் கேட் திறக்க ஒருவர் இருக்கிறாரே என்று மகிழ்வதற்குப் பதிலாக, கேட் திறந்தவர் சல்யூட் அடிக்கவில்லையே என்று நாம் வருந்தக் காரணம், 'என் சல்யூட் என் உரிமை' என்று நாம் நினைப்பதால்தான்.

'என் கனி, என் உரிமை!' என நினைத்தார் நம் முதல் தாய்.

இரண்டாவதாக, மிரியம்.இவர் ஆரோன் மற்றும் மோசேயின் சகோதரி. மோசேயின் அம்மா பார்வோனுக்குப் பயந்து, தன் ஆண்குழந்தையை ஒரு பேழையில் வைத்து நைல் ஆற்றில் விட, அந்த ஆற்றின் குளிர்நீரில் கால்கடுக்க நின்று பேழைக்குக் காவல் காத்தவரும், பேழை பார்வோனின் மகளை அடைந்தவுடன் அவளிடம் துணிச்சலாகச் சென்று உரையாடியவரும் இவரே. இஸ்ரயேல் மக்கள் செங்கடலைக் கடந்தவுடன், வெற்றிப்பாடல் இசைக்கும் மிரியம் அங்கே இறைவாக்கினர் என அறியப்படுகின்றார். ஆனால், மோசே வேற்றினத்துப் பெண்ணை மனைவியாக்கிக் கொண்டதைப் பற்றி இடறல்படுகின்ற மிரியம் ஆரோனுடன் இணைந்து, மோசேக்கு எதிராக முணுமுணுக்கின்றார். 'ஆண்டவர் மோசே வழியாகத்தான் பேசினாரா? எங்கள் வழியாகப் பேசவில்லையா?' என்று அவருடைய முணுமுணுப்பு கடவுளுக்கு கோபத்தை வரவழைக்க, மிரியாமுக்கு தொழுநோய் பிடிக்கின்றது (காண். எண் 12:1-16). 

விடுதலைப் பயணத்தின் தாயாக உடன்வந்த மிரியம் ஏன் ஆண்டவருக்கு எதிராக முணுமுணுத்தார்?

'நான் பயனர். நீர் எனக்குப் பரிசளிப்பவர்' என்ற மனநிலையில் வாழ்ந்தார் மிரியம் ('sense of business'). அதாவது, தான் செய்த செயல் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று நினைத்ததோடு மட்டுமல்லாமல், தன்னை ஒரு 'வாடிக்கையாளர்' என நினைத்து, இறைவனின் முன் தனக்குக் கிடைக்க வேண்டியது கிடைக்கவில்லை என்றவுடன் கிளர்ச்சி செய்கின்றார். இது ஒரு வியாபார மனநிலை. வியாபாரத்தில்தான் நாம் ஒன்றை மற்றொன்றோடு பண்டமாற்றம் செய்வோம் அல்லது மதிப்பை பரிமாறிக்கொள்வோம். 

கடவுள் மிரியமை மகள்போல நடத்த, மிரியம் என்னவோ ஒரு வியாபாரியாகவே இருக்க நினைத்தார்.

மூன்றாவது, அன்னை கன்னி மரியா.

இவருடைய மிஷன் ஸ்டேட்மெண்ட் (mission statement) ரொம்ப சிம்ப்பிள்: 'நான் அடிமை. உம் சொற்படியே ஆகட்டும்'. அவ்வளவுதான்! அடிமை தனக்கென்று எந்தவொரு திட்டமும் வைத்துக்கொள்வதில்லை. தலைவரின் திட்டமே அடிமையின் திட்டம். தலைவரின் கைகளை நோக்கியே இருக்கும் அடிமையின் கண்கள். 

இந்த வகை உணர்வில் 'பிளவுபடாத அர்ப்பணம்' இருக்கும் ('sense of commitment'). மரியாவால் இப்படிச் சொல்ல இயன்றது எப்படி? 'கடவுளால் ஆகாதது ஒன்றுமில்லை' என்று வானதூதர் கபிரியேல் சொன்னவுடன் அப்படியே சரணாகதி அடைகின்றார் மரியா. அவரால் எல்லாம் ஆகும் என்றால், அவருடைய கரம் பிடித்தால் என்னாலும் எல்லாம் ஆகும் என்பது அவருடைய எளிமையான நம்பிக்கையாக இருந்தது.

மேற்காணும் மூன்று நபர்களையும் நம் புத்தாண்டு வாழ்க்கைப் பயணத்திற்குப் பொருத்திப் பார்ப்போம்.

ஏவா, 'மாஸ்டர் ப்ளான்' (Master Plan) கொண்டு வாழ்கின்றார். கடவுளைப் போல ஆக வேண்டும் என்ற மாஸ்டர் ப்ளானால் அவரும், அவருடைய கணவரும் மிகப் பெரிய தோல்வியைத் தழுவுகின்றனர்.

மிரியம், 'மர்மர் ப்ளான்' (Murmer Plan) கொண்டு வாழ்கின்றார். மோசேயைப் போலத் தானும் இருப்பதாகச் சொல்லி முணுமுணுக்கின்றார். 

மரியா, 'மாஸ்டர்ஸ் ப்ளான்' (Master's Plan) என்ன என்று உணர்ந்து, அதற்குச் சரணாகதி அடைகின்றார்.

முதல் பெண், தனக்கு அனைத்தும் கிடைக்க வேண்டும் என்பது தன் உரிமை என நினைக்கிறார். இரண்டாம் பெண், தன் வாழ்க்கையை ஒரு வியாபாரம் போல எண்ணி வாழ்கின்றார். மூன்றாம் பெண், தன் தலைவரே தனக்கு எல்லாம் எனச் சரணாகதி அடைகின்றார்.

முதல் பெண்ணின் மனநிலையில் (sense of entitlement) நாம் புத்தாண்டை எதிர்கொண்டால், நம் வாழ்வில் வரும் துன்பங்கள் கண்டு சோர்ந்து போவோம். இரண்டாம் பெண்ணின் மனநிலையில் (sense of business) எதிர்கொண்டால், மற்றவரோடு நம்மை ஒப்பீடு செய்து வருந்திக்கொண்டிருப்போம். மூன்றாம் பெண்ணின் மனநிலையில் (sense of commitment) எதிர்கொண்டால், அகச்சுதந்திரத்துடன், வருவது அனைத்திற்கும், 'அப்படியே ஆகட்டும்!' என்று பதிலிறுப்பு செய்வோம்.

மூன்றாவது பெண்ணின் மனநிலையே மேன்மையான மனநிலை. இந்த மனநிலையே நம் முடிவாக இருக்க வேண்டும்.

இரண்டாம் வாசகத்தில், தன் மகனைக் கடவுள் பெண்ணிடம் பிறக்கச் செய்தார் என்று சொல்வதன் வழியாக, காலத்தைக் கடந்த கடவுள், காலத்திற்கு உட்படுவதைச் சுட்டிக்காட்டுகின்றார் புனித பவுல். காலத்திற்குள் நுழைந்த கடவுள் காலத்தைப் புனிதப்படுத்தினார். காலத்திற்கு உட்பட்டுள்ள நாம் அவரால் புனிதம் அடைகின்றோம். முதல் வாசகத்தில் தலைமைக்குருவாகிய ஆரோன், ஆசி, அருள், மற்றும் அமைதியை இஸ்ரயேல் மக்களுக்கு அளிக்கின்றார். இந்த மூன்றின் ஊற்று கடவுளே. இந்த மூன்றும் இந்த ஆண்டு முழுவதும் நம்உடன் வரட்டும்.

இறுதியாக,

இத்தாலிய மொழியில் விநோதமான பழமொழி ஒன்று உண்டு: 'உங்கள் கவலைகள் எல்லாம் உங்கள் புத்தாண்டு வாக்குறுதிகள் போல மறைந்து போவதாக!'

நிறைய வாக்குறுதிகள் எடுத்து, அவற்றைக் கடைப்பிடிக்க முயன்று சோர்ந்து போக வேண்டாம். ஏனெனில், 'நல்லவனாய் இருக்க வேண்டும் என உன்னை நீயே வருத்திக்கொள்வதேன்?' என்று கேட்கிறார் சபை உரையாளர். வாக்குறுதிகள் எடுத்தால் மீறுவோம், மீறினால் குற்றவுணர்வு வரும், குற்றவுணர்வு தன்னிரக்கமாக மாறும், அது பயத்திற்கு இட்டுச் செல்லும். எதற்கு இதெல்லாம்?

நம் கவலைகளும் மறையட்டும்! நம் வாக்குறுதிகளும் மறையட்டும்!

ஏனெனில், நம்மைப் பற்றிக் கவலைப்படுபவரும், வாக்குறுதிகளுக்குப் பிரமாணிக்கமானவரும் நம் கடவுளாக இருக்கிறார்! அந்தக் கடவுளின் தாய் நமக்கு முன்மாதிரி!

2 comments:

  1. தனக்கு அனைத்தும் கிடைக்க வேண்டுமென்று நினைத்த முதல் பெண்ணுமல்ல....தன் வாழ்க்கையை வியாபாரம் போல் பார்த்த இரண்டாவது பெண்ணுமல்ல....” அப்படியே ஆகட்டும்” என்று சொல்லி அர்ப்பண வாழ்வு வாழ்ந்த அன்னைமரியே இன்று நாம் முன்மாதிரியாக வைத்துக்கொண்டாடப்பட வேண்டியவள்.

    புதுவருடம்லகுறித்த தன் கருத்து....” கவலைகளும் மறையட்டும்; நம் வாக்குறுதிகளும் மறையட்டும்” என்கிறார் தந்தை.அவர் வழியில் வாழ்ந்துதான் பார்ப்போமே! ஏனெனில் நம்மைப்பற்றிக் கவலைப்படுபவர் நம் கடவுளாக இருக்கிறார்...அருமை!

    தந்தைக்கும்...அனைவருக்கும் புலர்ந்துள்ள புதுவருடம் பொலிவைத் தந்திட வாழ்த்துக்கள்!

    நம்மைப்படைத்தவரின் “ இயேசு” எனும் நாமத்தை “ யேசு” வாக வாழும் தந்தைக்கும் திருநாள் வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete