Sunday, November 29, 2020

புனித அந்திரேயா

இன்றைய (30 நவம்பர் 2020) திருநாள்

புனித அந்திரேயா

சீமோன் பேதுருவின் சகோதரரும், இயேசுவின் பன்னிரு திருத்தூதர்களுள் ஒருவருமான புனித அந்திரேயாவின் திருநாளை இன்று நாம் கொண்டாடுகிறோம். கிரேக்கத்தில் 'ஆண்ட்ரெஸ்' என்றால் 'ஆண்மை' அல்லது 'பலம்' அல்லது 'வலிமை' என்பது பொருள். எனவேதான், தமிழில் இவரது பெயரை, 'பெலவேந்திரர்' என அழைக்கின்றோம்.

இவரைப் பற்றிய குறிப்பு நான்கு நற்செய்தி நூல்களிலும் வருகிறது. ஒத்தமைவு நற்செய்திகளில் (மாற்கு, மத்தேயு, லூக்கா) இவர் பன்னிரு திருத்தூதர்களில் ஒருவர் என்றும், சீமோன் பேதுருவின் சகோதரர் என்றும், இயேசுவின் முதற்சீடர்கள் இருவரில் ஒருவர் என்றும் அறிமுகப்படுத்துகிறார். ஆனால், யோவான் நற்செய்தியில் இவரைப் பற்றிய குறிப்பு மூன்று இடங்களில் வருகிறது:

ஒன்று, திருமுழுக்கு யோவானின் சீடர்களுள் ஒருவராக இருந்த அந்திரேயா (காண். யோவா 1), 'வந்து பாருங்கள்' என்ற இயேசுவின் கட்டளை கேட்டு அவருடன் சென்று தங்குகிறார். பின், தன் சகோதரர் பேதுருவையும் அழைத்துச் சென்று, இயேசுவிடம் அறிமுகம் செய்கின்றார்.

இரண்டு, ஐந்து அப்பங்கள் ஐயாயிரம் பேருக்குப் பகிரப்படும் நிகழ்வில் (காண். யோவா 6), 'இங்கே சிறுவன் ஒருவன் இருக்கிறான்' என்று இளவல் ஒருவரை இயேசுவுக்கு அறிமுகம் செய்தது இவரே.

மூன்று, கிரேக்கர்கள் சிலர் இயேசுவைக் காண விரும்பியபோது (காண். யோவா 12), அவர்களை, பிலிப்புடன் இணைந்து, இயேசுவிடம் கூட்டிச் சென்றார்.

இவருடைய பலம் உறவு மேலாண்மையில் இருக்கிறது. காண்கின்ற அனைவருடைய ஆற்றலையும் இவரால் எடை போட முடிகிறது. எல்லாருடனும் இயல்பாகப் பேச முடிகிறது. எல்லாரையும் வெற்றிகொள்ள முடிகிறது.

இயேசுவைப் பார்த்து இவர் கேட்ட ஒற்றைக் கேள்வியை இன்றைய நம் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்:

'ரபி, நீர் எங்கே தங்கியிருக்கிறீர்?'

இந்தக் கேள்வி அந்திரேயாவின் உள்ளத்தில் எப்படி எழுந்தது?

இது பேரார்வத்தால் கேட்கப்பட்ட கேள்வியா?

அல்லது இயேசுவைப் பின்பற்ற வேண்டும் என்ற வேகத்தில் கேட்கப்பட்ட கேள்வியா?

அல்லது அந்நியர் ஒருவரின் இருப்பு பற்றி அறிந்துகொள்ளும் அறிவார்வத்தில் எழுந்த கேள்வியா?

அல்லது 'உம்மோடு நானும் தங்கிக்கொள்ளட்டுமா?' என்ற தன் ஆவலை உள்புதைத்துக் கேட்கப்பட்ட கேள்வியா?

அந்திரேயா தன் கேள்விகளோடு நிறுத்திக்கொள்ளவில்லை. 'வந்து பாருங்கள்' என்று சொன்னவுடன் இயேசுவோடு சென்று தங்குகிறார்.

லூக்கா நற்செய்தியில், எம்மாவு நிகழ்வில், 'எங்களோடு தங்கும்' என்று இயேசுவைச் சீடர் இருவர் வற்புறுத்திக் கேட்டுக்கொள்கின்றனர்.

இங்கே அந்திரேயா இயேசுவோடு என்றும் தங்கிக்கொள்ள விழைகிறார்.

'மானேய்ன்' என்ற கிரேக்கச் சொல்லுக்கு, 'தங்குதல்', 'மதிப்பீடுகள் கொண்டிருத்தல்' என்பது பொருள். ஆக, 'உம் மதிப்பீடுகள் எவை?' என இயேசுவிடம் கேட்கின்றார் அந்திரேயா.

திருவருகைக்காலத்துக்குள் அடியெடுத்து வைத்துள்ள நாம், கடவுள் நம்மோடு தங்க வந்ததை நினைவுகூர்கின்றார்.

'ஆண்டவரே, போதகரே, நீங்க எங்க இருக்குறீங்க? உங்க வீடு எங்கே?' என்று நாமும் கேட்போம். பவுலோ கோயலோ என்ற நாவலாசிரியர், 'ஒருவரின் இல்லத்தை நீங்கள் அறியாமல் அவரை நம்ப முடியாது' என்பார். ஆக, இல்லத்தை அறியும்போது ஒருவரின் உள்ளத்தை அறிகிறோம். இயேசுவின் இல்லத்தையும் உள்ளத்தையும் ஒருசேர அறிந்தார் அந்திரேயா. 

இயேசுவோடு தங்குபவர்கள் எல்லாருடனும் தங்குவர். அவரில் அனைவரையும் அன்பு செய்யும் ஒருவர் நிரந்தரத்தில் அன்பு செய்கிறார்.

4 comments:

  1. இவருடைய பலம் உறவு மேலாண்மையில் இருக்கிறது. காண்கின்ற அனைவருடைய ஆற்றலையும் இவரால் எடை போட முடிகிறது. எல்லாருடனும் இயல்பாகப் பேச முடிகிறது. எல்லாரையும் வெற்றிகொள்ள முடிகிறது.

    ரபி, நீர் எங்கே தங்கியிருக்கிறீர்?'

    உம்மோடு நானும் தங்கிக்கொள்ளட்டுமா?' என்ற தன் ஆவலை உள்புதைத்துக் கேட்கப்பட்ட கேள்வியாகவே,நான் நம்புகிறேன்.

    இயேசுவுடன் தங்குபவர்கள் எல்லாருடனும் தங்குவர். அவரில் அனைவரையும் அன்பு செய்யும் ஒருவர் நிரந்தரத்தில் அன்பு செய்கிறார்.

    Well said rev.father.🤝

    ReplyDelete
  2. “ அந்திரேயா” பேதுருவின் சகோதரர் என்பதைத் தாண்டி இயேசுவின் உள்ளத்திலும், இல்லத்திலும் இடம் பிடிக்கத் துடித்தவர். இயேசுவைத் தங்கள் இல்லத்தில் தங்க வேண்டல் செய்த ‘ எம்மாவுஸ்’ சீட்களை நினைவு படுத்துபவர்.

    எல்லோருடனும் இயல்பாகப் பேசி எல்லா மனங்களையம் கவரும் வித்தைக்குச் சொந்தக்காரர். இன்று திருவருகைக் காலத்தில் கால்பதிக்கும் நாம் நம்மைச் சுற்றியுள்ளோரின் இல்லங்களுக்குள் நுழைய முடியாவிடினும் அவர்களின் உள்ளங்களுக்குள்ளாவது நுழைய முயல்வோம். அவர்களின் உடல்- உள்ளம்
    சார்ந்த பிரச்சனைகளைக் களைவோம்.

    இயேசுவில் அன்பு செய்பவர் ‘நிரந்தரம்திற்குச் சொந்தக்காரர் என்பதை உணரவைத்த தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete