Tuesday, August 15, 2017

தேவையானது ஒன்றே

நாளைய முதல் வாசகத்தில் (காண். இச 34:1-12) மோசேயின் இறப்பைப் பற்றி வாசிக்கின்றோம்.

என் அறையில் என் அம்மா எனக்குப் பரிசளித்த மோசேயின் சிலை ஒன்று உண்டு.

ஒட்டகம் ஒன்றைத் தன் கையில் பிடித்தவராக மறு கையில் உருவிய வாளை ஏந்தியவராய் நிற்கும் மோசேயின் குட்டி உருவம் பார்க்கும்போதே நடப்பது போல இருக்கும்.

அவர் கையில் ஏந்திய அந்த வாள், 'ஆனால் தேவையானது ஒன்றே' என்று சொல்வதுபோல இருக்கும் எனக்கு.

கதைமாந்தர்களின் பிறப்பு, இளமை, முதுமை, இறப்பு என முழுவதுமாக செய்யும் பதிவுகளில் மிக முக்கியமானவை யாக்கோபு மற்றும் மோசே. யாக்கோபு இஸ்ரயேல் இனத்தின் தந்தை. மோசே அந்த இனத்திற்கு உயிரும் உருவும் கொடுத்தவர்.

தொடக்கமுதலே கடவுளின் கரம் இவரை வழிநடத்துகிறது.

இறுதியில், இவரின் கண்களை இறைவனே மூடி, இறைவனே இவரை நல்லடக்கம் செய்கின்றார்.

'ஆண்டவர் நேருக்குநேர் இவருடன் பேசியதுபோல வேறு எவருடனும் பேசியதில்லை' என நிறைவு பெறுகிறது இவரின் கதை.

மோசே ஒரு வரலாற்றுக் கதைமாந்தர் அல்ல. மாறாக, இலக்கிய கதைமாந்தர் என்பதை உறுதி செய்ய இன்று விவிலியத்தில் நிறைய ஆய்வுகள் செய்யப்படுகின்றன.

இவர் வரலாற்று மாந்தராக இல்லாவிடினும், இவர் ஆச்சர்யத்துக்குரியவர். தன் இனத்திற்காக தன் இன்ப, துன்பங்களை ஒதுக்கி வைத்தவர். இவர் ஆற, அமர்ந்து பேசியதாக, சிரித்ததாக எந்தப் பதிவும் இல்லை. எந்நேரமும் தன் மக்களை தன் உள்ளத்திலும், கரத்திலும் சுமந்தவர். துணிச்சல்காரர். எந்தவித முணுமுணுப்பையும் பொருள்படுத்தாதவர்.

'ஆனால், தேவையானது ஒன்றே' என்று இயேசு மார்த்தாவைப் பார்த்துச் சொன்னதை சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வாழ்ந்து காட்டியவர்.

4 comments:

  1. ஏதோ காரணத்திற்காக 'விடுதலைப்பயணம்' நூலை அடிக்கடி வாசிக்கும் பழக்கம் எனக்குண்டு.ஒருவேளை அன்பு,பாசம்,பரிவு,கோபம்,கண்டிப்பு,சோகம் இத்தனையும் சேர்ந்த கலவையாக இஸ்ரேல் மக்களோடு இணைந்திருந்த இறைவனின்'உடனிருப்பு' கூட காரணமாயிருக்கலாம்.அண்மையில் நான் சென்ற 'புனிதப்பயணம்' மோசேயோடு எனக்கு ஒரு நெருக்கத்தை ஏற்படுத்திவிட்டது என்றால் மிகையில்லை.இறைவனுக்கும்,இஸ்ரேல் மக்களுக்குமிடையே இருந்த உறவை இணக்கமானதொன்றாக மாற்ற அவருக்கிருந்த மனப்போராட்டமும்,கொந்தளிப்பும் கொஞ்சநஞ்சமல்ல.இப்பேர்ப்பட்ட மாமனிதனுக்கு ' வாக்களிக்கப்பட்ட' நாட்டைக் காணும் வாய்ப்பு மறுக்கப்பட்டதும்,'இதோ' இதுதான் என்று சுட்டிக் காட்ட அவருக்கென்று ஒரு கல்லறை இல்லாமல் போனதும்,' இங்கேதான் அவர் இறந்தார்' என யாரோ சொல்வதை நம்பும் நிலையில் நாமிருப்பதும் நம் மனத்தை அப்பும் சோகம். எங்களுடன் வந்த வழிகாட்டி மோசே பற்றியும், இஸ்ரேல் மக்களையிட்டு அவரடைந்த இன்னல்கள் பற்றியும் விளக்கும் போது என் கண்கள் மட்டுமின்றி சுற்றி நின்ற அனைவரின் கண்களும் பனித்ததை உணரமுடிந்தது.இவர் காலடித்தடம் பதித்த இடங்களில் நானும் பயணித்தேன் என்பது எனக்கு இறைவனளித்த பெறும் பேறு.என் வாழ்க்கையில் நடந்த சிறப்பான விஷயங்களில் ஒன்று இந்த புனித பூமிப்பயணம் என்பதை பெருமையோடு நினைத்துப்பார்க்கிறேன். இதை எனக்கு சாத்தியமாக்கிய அனைவருக்கும்,இந்த நிகழ்வை மீண்டும் திரும்பிப்பார்த்து அசை போடக் காரணமான தந்தைக்கும் என் 'நெஞ்சம் நிறை' நன்றிகளை உரித்தாக்குகிறேன்!!!

    ReplyDelete
  2. " தேவையானது ஒன்றே" என்று இயேசு மார்த்தாவைப்பார்த்து சொன்னதை சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வாழ்ந்து காட்டியவர் மோசே" எனும் தந்தையின் வார்த்தைகள் நூற்றுக்கு நூறு உண்மையான வார்த்தைகள் மட்டுமல்ல; அவருக்குப் பெருமை சேர்க்கும் வார்த்தைகளும் கூட. வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. Anonymous8/16/2017

    Yesu very good blog. Thanks TQ

    ReplyDelete
  4. மோயீசனின் சின்ன ஒரு சிற்பம் , அதன் பாடங்கள் இனிமை...

    ReplyDelete