
நாளைய முதல் வாசகத்தில் (காண். இச 6:4-13) நாம் யூதர்களின் மிக முக்கியமான விவிலியப்பகுதியை வாசிக்கின்றோம். 'ஷெமா இஸ்ரயேல்' என எபிரேயத்தில் அழைக்கப்படும் இந்தப் பகுதி இறைவன்மேல் யூதர்கள் கொண்டிருக்கின்ற அன்பு, 'முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு ஆற்றலோடும்' இருக்க வேண்டும் என எடுத்தியம்புகிறது.
நாளைய வாசகத்தின் இறுதிப்பகுதி மிகவும் கவனிக்கத்தக்கது:
'நீ கட்டி எழுப்பாத, பரந்த வசதியான நகர்களையும்,
நீ நிரப்பாத எல்லாச் செல்வங்களால் நிறைந்த வீடுகளையும்,
நீ வெட்டாத பாறைக் கிணறுகளையும்,
நீ நடாத திராட்சைத் தோட்டங்களையும், ஒலிவத் தோப்புகளையும்
அவர் உனக்குக் கொடுக்கும்போதும்,
நீ உண்டு நிறைவுகொள்ளும்போதும்...
ஆண்டவரை மறந்துவிடாதபடி கவனமாய் இரு!'
நகர்கள், வீடுகள், கிணறுகள், தோட்டங்கள் அமைக்க நிறைய நாட்களும், ஆட்களும் வேண்டும். எந்தவொரு உடல் உழைப்பும், ஆற்றல் விரயமும் இல்லாமல் இஸ்ரயேல் மக்களுக்கு இவை அனைத்தும் கொடையாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது என்கிறார் ஆண்டவராகிய கடவுள்.
இதே உணர்வை நாமும் நம் வாழ்வில் பல இடங்களில், பல நேரங்களில் அனுபவித்திருக்கிறோம்.
நிறைவு வந்தவுடன் அன்பும், நன்றியும் இருக்க வேண்டும்.
இந்த மூன்றில் ஒன்று குறைந்தால் அங்கே மகிழ்ச்சி இழப்பு வந்துவிடும்.
நாளைய வாசகம் நேர்முகமான உணர்வில் வளர நம்மைத் தூண்டுவதாக.
" நன்றி உணர்வு" என்னைப்பொறுத்த வரை உணர்வுகளிலெல்லாம் மேலான உணர்வு இதுவே. அன்றாடம் காலையில் விழிப்பதிலிருந்து நடுநிசி உறக்கம் வரை நாம் நன்றிசொல்லத்தக்க விஷயங்கள் எத்தனையோ நடக்கும் போது நாம் அவற்றுக்குத் 'தகுதியுள்ளவர்கள்' எனும் உணர்வே நம்மில் பலரில் மேலோங்கி நிற்கிறது. கடுகளவு செய்த உதவிக்கு 'நன்றி' எனும் சொல்லை எதிர்பார்க்கும் நாம் 'மலையளவு' செய்த ஆண்டவனை மறந்து போகிறோம்.அதிலும் நம் தகுதிக்கு மேல் கிடைத்த விஷயங்களுக்காக..." நாம் கட்டி எழுப்பாத வீடுகளுக்காகவும்,நாம் நிரப்பாத செல்வங்கள் நிறைந்த வீடுகளுக்காகவும்,வெட்டாத கிணறுகளுக்காகவும்,நடாத திராட்சைத்தோட்டங்களுக்காகவும், நாம் நிறைவு கொள்வது மட்டுமின்றி ஆண்டவரை மறத்தல் கூடாது" என்பதையும்,அதை நம் "சந்ததிகளிடமும் எடுத்துச்செல்ல வேண்டும்" என்பதையும் நமக்கு நினைவு படுத்துகிற இன்றைய வாசகங்கள் போதும் நம்மை நெறிப்படுத்த. நமக்குக் கொடையாகக் கிடைத்ததை நாமும் கொடையாகக் கொடுக்க வேண்டுமெனும் உணர்வோடு 'நிறைவு','அன்பு','நன்றி' என்ற மூன்றும் நம்மை ஆட்கொள்ளும்போது எதிர்மறை எண்ணங்களுக்கு இடமேது? "நல்ல செயல்களை நம்மில் தூண்டுவது நல்ல எண்ண ஓட்டங்களே!" என்பதை ஆதாரங்களுடன் கோடிகாட்டும் தந்தையை இறைவன் நிறைவாக ஆசீர்வதிப்பாராக!!!
ReplyDelete