Thursday, August 10, 2017

அனுப்பாத மணி ஆர்டர்

இன்று மாலை தமிழ்நாடு இறையியல் கல்லூரியின் கருத்தமர்வுக்குச் செல்ல தயாராகிக்கொண்டிருந்தேன்.

இன்று காலையிலேயே என் மனதில் ஒரு மனிதரின் முகம் ஓடிக்கொண்டிருந்தது. மதுரையின் ஏதோ ஓரிடத்திலிருந்து எங்கள் இல்லம் நோக்கி வருபவர் அவர். கடந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் அவர் இங்கே வருவதாக இங்குள்ள அருள்தந்தையர்கள் குறிப்பிட்டனர். அவரைப் பார்க்க எனக்குப் பிடிக்கும். ஒரே காரணம். அவர் என் அப்பாவைப் போல இருப்பார்.

என் அப்பாவுக்கும் இவருக்கும் இருக்கும் நிறைய ஒற்றுமைகளில் ஒன்று ஆஸ்துமா.

இந்த நோய்க்கான மருந்து மற்றும் இன்ஹேலர் வாங்க பணம் கேட்டு வருவார். காலியான மருந்து டப்பாவையும், இன்ஹேலரையும் சாட்சிக்காக எடுத்து வருவார். இவர் நீட்டும்போது என் அப்பாவே என்னிடம் அவற்றை நீட்டுவதுபோல இருக்கும்.

என் அப்பா இறப்பதற்குச் சில மாதங்களுக்கு முன் எனக்கு ஒரு கடிதம் அனுப்பினார். அந்தக் கடிதம் இன்னும் வீட்டில் இருக்கிறது. அவர் எனக்காக எழுதிய முதல் மற்றும் கடைசி கடிதம் இதுவே. என் அம்மா எழுதும் கடிதங்களில் முகவரி எழுதித் தருவார். மற்றபடி எனக்குக் கடிதம் எழுதவில்லை. நான் புனேயில் இருந்த நேரம் தனக்கு உடல்நிலை மிகவும் மோசமாகிவிட்டது எனவும், மருத்துவச் செலவிற்கான பணம் ரூபாய் 1000 அனுப்புமாறும் கேட்டிருந்தார். நான் புனேயில் வேலைபார்த்துக்கொண்டே படித்துக்கொண்டிருந்ததால் கையில் கொஞ்சம் பணம் இருந்தது. ஆனால் அப்பாவுக்கு மணி ஆர்டர் அனுப்புவதை நான் சீரியஸா எடுத்துக்கொள்ளவில்லை. வீட்டில் அம்மா பார்த்துக்கொள்வார்கள் என விட்டுவிட்டேன்.

அடுத்த சில மாதங்களில் அப்பா இறந்துவிட்டார்.

அவரின் அடக்கம் முடிந்து நான் குருமடத்திற்கு வந்த சில நாள்களுக்குப் பின் அவரின் கடிதம் கண்ணில்பட்டது.

'இவ்வளவு நாள்கள் என் அப்பா நான் அனுப்பும் அந்த மணியார்டருக்காக காத்திருந்திருப்பாரோ?' என்ற கேள்வியோடு குற்றவுணர்வும் பற்றி;கொண்டது.

இன்றும் மணியார்டரைப் பார்க்கும்போதெல்லாம் நான் அனுப்பாத அந்த மணியார்டர்தான் என் நினைவிற்கு வருகிறது.

ஆனால், ஒரு ஆச்சர்யம். ஒவ்வொரு வருடமும் என் அப்பாவைப் போன்ற ஒருவரை நான் சந்தித்துவிடுகிறேன்.

இன்று வந்திருந்த அந்த நபர் எவ்வளவு நேரம் உட்கார்ந்திருந்தார் எனத் தெரியாது. சவரம் செய்யாத முகம். மெலிந்த தேகம். உடலை மிஞ்சும் உடை. படிக்கட்டுக்களில் அமர்ந்திருந்தார். எப்பெல்லாம் முக்கியமான வேலையாக வெளியே செல்கிறேனோ அப்பெல்லாம் என் அப்பாவின் ஃபோட்டோவைப் பார்ப்பது வழக்கம். இன்றும் அப்படிப் பார்த்துவிட்டு வந்தபோதுதான் இவர் அமர்ந்திருக்கக் கண்டேன். இதை வெறும் தற்செயல் என்று சொல்வதா?

'மருந்து காலியா...' என வாய் திறந்தார். 'இருங்க...வர்றேன்' என்று சொல்லிவிட்டு, அறைக்குச் சென்று, மீண்டும் திரும்பி ஒரு பையை அவரிடம் கொடுத்து, 'போய்ட்டு வாங்க!' என அனுப்பினேன்.

அவர் நான் கொடுத்த பையை அப்படியே எடுத்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தார். அதில் என்ன இருக்கிறது என்று கேட்கவோ, திறந்து பார்க்கவோ இல்லை.

அந்த நொடி நான் ஒரு பாடத்தைக் கற்றேன்.

'ஒன்றுமே இல்லாத ஒருவருக்கு எதைக் கொடுத்தாலும் அது அவருக்குக் கொடையே. அதை அவர் ஆராய்ச்சி செய்வதோ, இரசிப்பதோ இல்லை. ஆக, எந்த அளவுக்கு தன் இல்லாமையை இவர் உணர்ந்திருந்தால், அல்லது அனுபவித்திருப்பார்.'

அவர் கேட்டைக் கடக்குமுன் நின்று பார்த்துக்கொண்டே இருந்தேன்.

போனவர் நின்றார்.

திரும்பி வந்தார்.

'உங்க பேரு?' என்றார்.

'யேசு க..' என நிறுத்திக்கொண்டேன்.

'உங்க பேரு?' எனக் கேட்க வாய் திறக்கப் போனேன்.

'கருணாநிதி' என்பதற்குப் பதிலாக வேறு பெயர் சொல்லிவிடுவாரோ என நினைத்து வாயை மூடிக்கொண்டேன்.

நான் அன்று அனுப்பாத மணி ஆர்டரை என் அப்பாவுக்கு இப்படி இன்று அனுப்புவதில் நான் மகிழ்கிறேன்.

2 comments:

  1. மனத்தைப்பிசைந்த ஒரு பதிவு.ஒவ்வொரு முறையும் தந்தை தன் நினைவில் வாழும் அவர் தந்தையைப் பற்றி எழுதும்போது ஒரு பக்கம் என் கண்கள குளமாகிவிடுகின்றன என்றால் மறுபக்கம் எனக்கொரு ஆறுதலும் கூடவே பிறக்கிறது....காரணம் நினைவு தெரியா வயதிலேயே என் தந்தை மறைந்து போனதால் அவர்களைப் பற்றிய நேரடி நினைவுச்சுவடுகள் எனக்கில்லை.ஒரு வகையில் இது ஆறுதலான விஷயமும் கூட. 'மருந்து காலி' என்று உதவிகேட்டு வந்தவரில் தன் ' தந்தையையே' இவர் பார்த்துள்ளார் என்பது ஒரு பக்கமெனில், பண உதவி கேட்டு வந்தவருக்கு ஒரு 'மகனே' கிடைத்துள்ளார் என்பது மறுபக்க்ம." ஒன்றுமே இல்லாத ஒருவருக்கு எதைக்கொடுத்தாலும் அது அவருக்குக் கொடையே.காரணம் அவரது இல்லாமை" ...இது தந்தைக்கு மட்டுமல்ல..நமக்குமே ஒரு பாடம் தான்.' அனுப்பாத ஒரு மணியார்டர்' இத்தனை பாடங்களைப்புகட்டியிருக்குமென்றால் நாம் நம் கண்முன்னே பார்க்கும சக மனிதர்கள் எத்தனை விஷயங்களை நமக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்! அவற்றை உணர,நம் மனம் சொல்வதைப் புரிந்து கொள்ள மனச்செவிகள் மட்டும் திறந்திருந்தால் போதும்.நல்லதொரு தந்தையைப் பற்றிய 'பாசமிகு மகனின்'பதிவு.அழகு!!!

    ReplyDelete
  2. Dear Sago,

    An inspiration...

    Something to learn...

    The ability to see in the needy someone very very close to us...

    If every priest and religious and every one feels the same,
    There dawns His Kingdom...
    There was no needy among them( Acts)
    ...

    ReplyDelete