Sunday, August 13, 2017

கோல்பே

நாளை புனித மாக்ஸிமிலியன் மரிய கோல்பே திருநாளைக் கொண்டாடுகிறோம்.

சிறையிலிருந்த இவர் தன் சக கைதி ஒருவருக்குப் பதிலாக இறப்பைத் தழுவிக்கொள்ள முன்வருகின்றார்.

பேராயர் ஃபுல்டன் ஷீன் அவர்கள் குருக்களைப் பற்றி எழுதிய நூல்களில் ஒன்று, 'தெ ப்ரீஸ்ட் இஸ் நாட் ஹிஸ் ஓன்' ('குருவானவர் தனக்கென உரியவர் அல்லர்') என்பது.

தன் குருத்துவ திருநிலைப்பாட்டு நாளில், 'இதோ வருகிறேன்' என்று சொல்லி அவர் ஒரு அடி எடுத்துவைத்து முன்வரும் பொழுதே அவர் தனக்கென உரியது அனைத்தையும் துறந்துவிடுகின்றார்.

கோல்பே ஒரு அருள்பணியாளர் என்ற நிலையில் தன்னையே கையளிப்பதற்குப் பதிலாக நிறைய காரணங்கள் சொல்லி தப்பியிருக்கலாம்:

அ. 'நான் யூதன் இல்லை. நான் போலந்துக்காரன். நான் ஏன் ஒரு யூதனுக்காக இறக்க வேண்டும்' என நினைத்திருக்கலாம்.

ஆ. இறப்பதற்கு என தெரிவு செய்யப்பட்டவர்களைப் பார்த்து, 'கவலைப்படாதீர்கள். நீங்கள் மறுவாழ்வு பெறுவீர்கள். உங்களுக்காக நான் திருப்பலி ஒப்புக்கொடுக்கிறேன்' என்று சொல்லியிருக்கலாம்.

இ. 'நம் எதிரிகளை எல்லாம் பழி தீர்க்க கடவுள் வருவார். விவிலியத்தில் எல்லாம் எழுதப்பட்டுள்ளது. அதன்படி எல்லாம் நடக்கும்' என்று சொல்லியிருக்கலாம்.

இப்படி எதுவும் சொல்லாமல், 'இதோ வருகிறேன்' என முன்வருகிறார் கோல்பே.

தன் குருத்துவ அருள்பொழிவின்போது இவர் சொன்னதைவிட இன்று அவர் சொல்லும்போது நிறைய தைரியம் வேண்டும் இவருக்கு.

இவரின் இந்தச் செயல் நமக்கு மூன்று பாடங்களைச் சொல்கின்றது:

அ. நாம் தினமும் காலையிலிருந்து மாலை வரை நிறைய வேலைகளைச் செய்கின்றோம். இத்தனை வேலைகளைச் செய்ய வேண்டும் என பட்டியலிடுகின்றோம். ஆனால், மாலையில் அந்த லிஸ்டை பார்த்தால் சோர்வு வந்துவிடுகிறது. இப்படி அடுத்தடுத்த நாள் லிஸ்டில் வேலை சேர்ந்து கொண்டே போகிறது. ஆனால், நாம் எவ்வளவு வேலைகள் செய்கிறோம் என்பது முக்கியமல்ல. மாறாக, இந்த வேலைகளின் வழியே நான் எப்படி மாறுகிறேன் என்பதுதான் முக்கியம். கோல்பே நிறைய வேலைகளைச் செய்யவில்லை. மாறாக, தான் செய்கின்ற ஒரே வேலையின் வழியாக தான் எப்படி மாறுவோம் என நினைத்துச் செய்கின்றார்.

ஆ. இன்றில் வாழ்வது. இன்றில் அல்லது இப்பொழுதில் வாழும் ஒருவர்தான் தியாகம் செய்ய முடியும். மற்றவர்கள் எல்லாம், 'நாளை பார்த்துக்கொள்ளலாம்' என்று தள்ளிப்போடுவர். ஆக, தியாகம் என்று வரும்போது நாளை என்பது மறந்துவிட வேண்டும்.

இ. தியாகம் என்பதை ஆங்கிலத்தில் 'ஸேக்ரிஃபைஸ்' (sacrifice) என்கிறோம். இது 'ஸாக்ரும்' (sacrum), 'ஃபாச்சரே' (facere) என்னும் இரண்டு இலத்தீன் வார்த்தைகளின் சேர்க்கை. ஆக, ஒன்றைக் கடவுளுக்கு நேர்ந்தளிப்பது, அல்லது கடவுளுக்காக ஒதுக்கி வைப்பது. அல்லது கடவுளாக மாறுவது அல்லது மாற்றுவது. தியாகம் செய்யும் போது நாம் தன்னிலை மறக்கின்றோம். தன்னிலை மறப்பதுதானே இறைமை.

என் நண்பனுக்காக கொஞ்ச நேரம் என் ஃபோன் சார்ஜரைத் தரவும் கணக்குப் பார்க்கும் எனக்கு கோல்பேயின் உயிர் துறத்தல் பெரிய சவாலாக இருக்கிறது.


2 comments:

  1. ' மாக்ஸிமிலியன் மரிய கோல்பே'.... இவர் மற்றபுனிதர்களைப்போல அடிக்கடி பேசப்படுபவரல்ல.நான் சிறிது காலமாகத்தான் இவரைப்பற்றிக்கேள்விப்படுகிறேன்.இத்தனை விரிவாக,விவரமாக இவரைப்பற்றிய தகவல் தந்த தந்தைக்கு என் நன்றிகள்!கண்டிப்பாக இவர் செய்த மகத்தான காரியத்திற்கு பக்க பலமாயிருந்தது ' இறைவனுக்குள்ளே இவருக்கிருந்த கையளிப்பே!'இவரின் வாழ்வுப்பாடமாகத் தந்தை வைக்கும் 1.தியாகம் என்று வரும்பொழுது நாளை என்பதை மறந்து விட வேண்டும்;2.தன்னிலை மறப்பது( இது இறைமையும் கூட என்பது கூடுதல் அழகு சேர்க்கிறது) சிறிது முயன்றால் என்னாலும் வாழக்கூடிய விஷயங்களே!' குருத்துவம்' பற்றித் தந்தை குறிப்பிடும் அந்த ஆரம்ப வரி...." இதோ வருகிறேன" என்று சொல்லி ஒரு குருவானவர் ஒரு அடி எடுத்து வைக்க முன்வரும்பொழுதே அவர் தனக்கென உள்ளது அனைத்தையும் துறந்து விடுகிறார்,' குருத்துவத்திற்கே அழகு சேர்க்கும் வரிகள்' குருத்துவத்தின் மகத்துவத்தை அழகுற எடுத்தியம்பியுள்ள தந்தையையும்,அவரின் குருத்துவ வாழ்வையும் இறைவன் ஆசீர்வதிப்பாராக!!!

    ReplyDelete
  2. பிறர் அன்பின் தூய மனிதர்...
    நன்றி உங்கள் கருத்து பாடங்களுக்கு...

    ReplyDelete