Wednesday, August 2, 2017

விண்ணரசு

'இவற்றையெல்லாம் புரிந்துகொண்டீர்களா?' என்று இயேசு கேட்க, அவர்கள் 'ஆம்' என்றார்கள்.

பின்பு அவர், 'ஆகையால், விண்ணரசு பற்றிக் கற்றுக்கொண்ட எல்லா மறைநூல் அறிஞரும் தம் கருவூலத்திலிருந்து புதியவற்றையும் பழையவற்றையும் வெளிக்கொணரும் வீட்டு உரிமையாளரைப் போல் இருக்கின்றனர்' என்றார்.

(மத்தேயு 13:51-52)

நாளைய நற்செய்தி வாசகத்தில் வரும் மேற்காணும் இரண்டு வசனங்கள் எனக்குப் பிடித்திருக்கின்றன.

அ. புரிந்துகொண்டீர்களா?

நாம் நம் அன்றாட உரையாடல்களில் ஒருவர் மற்றவரை நோக்கி கேட்கும் வார்த்தை 'புரிந்துகொண்டீர்களா?' என்பது. வழக்கமாக இது மேலிருந்து கீழ் நோக்கி வரும் கேள்வி. எடுத்துக்காட்டாக, ஆசிரியர் மாணவரைப் பார்த்து, 'புரிந்துகொண்டீர்களா?' என்று கேட்கலாம். அதே கேள்வியை மாணவர் ஆசிரியரை நோக்கிக் கேட்டால் அந்த மாணவரின் கதி அதோகதிதான்.

தான் ஒரு நல்ல ஆசிரியராக இருக்க நினைக்கும் இயேசு தன் சீடர்களைப் பார்த்து, 'புரிந்துகொண்டீர்களா?' எனக் கேட்கிறார்.

அவர்கள் வேகமாக, 'ஆம்' என்கின்றனர். 'இல்லை' என்று சொன்னால் இன்னும் இவர் பேசிக்கொண்டே இருப்பார் என நினைத்து 'ஆம்' என்றார்களா? அல்லது உண்மையிலேயே 'ஆம்' என்றார்களா என்பது தெரியவில்லை.

இயேசுவின் கேள்வி நாம் மியுசிக் பிளேயரில் வைத்திருக்கும் 'சிறுநிறுத்தம்' (pause) என்ற பட்டனைப் போன்றது. வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் பாடல், காணொளி, அல்லது உரைவீச்சு ஆகியவற்றை சில நேரங்களில் நாம் 'சிறுநிறுத்தம்' செய்கிறோம். சிறுநிறுத்தம் இசையின் ஓட்டத்தைத் தடை செய்கிறது. அதே நேரத்தில் அந்த சிறுநிறுத்தம் இசையை நம் உள்ளத்தில் பதிய வைக்கிறது.

ஓடிக்கொண்டே இருக்கும் நம் வாழ்க்கைக்கும் இந்த சிறுநிறுத்தம் பட்டன் அவசியம்.

'புரிந்துகொண்டாயா?' அல்லது 'புரிந்துகொண்டேனா?' என்ற கேள்வி எனக்கு அவசியம்.

அதாவது, வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் சிறுநிறுத்தம் செய்து, 'இந்த நிகழ்வின் பொருள் என்ன?' 'இந்த உறவின் பொருள் என்ன?' 'இந்த தோல்வியின் பொருள் என்ன?' 'இந்த பயணத்தின் பொருள் என்ன?' என நம்மையும், நம்மைச்சுற்றி நடப்பவைகளையும் புரிந்துகொள்வது அவசியம்.

ஆ. கருவூலத்திலிருந்து

அப்படி 'சிறுநிறுத்தம்' செய்பவர் யாரைப் போல இருக்கிறார்?

வீட்டு உரிமையாளரைப் போல.

அவர் என்ன செய்கிறார்? தன் இரும்புப் பெட்டி அல்லது இரும்பு அறையாகிய கருவூலத்தைத் திறந்து புதியவற்றையும், பழையவற்றையும் வெளிக்கொணர்கிறார். கருவூலத்தில் புதியதும், பழையதும் ஒருங்கே இருப்பது வீட்டு உரிமையாளரின் நிறைவைக் காட்டுகிறது. அதாவது, செலவழிக்க முடியாத அல்லது செலவழிக்கத் தேவையில்லாத ஒருவரின் கருவூலத்தில் பழையதும் இருக்கும், புதிதாக அவர் சம்பாதித்த பொருளும் இருக்கும்.

காற்று நுழையாத அந்த இடத்திலிருந்து அவர் வெளியே கொண்டுவருகிறார்.

எதற்காக?

பயன்பாட்டிற்காக.

ஆக, வாழ்வின் அர்த்தம் புரிய வேண்டும். அப்படி புரிந்தவுடன் நம் உள்ளத்தில் இருக்கும் புதிய மற்றும் பழைய முத்துக்களும், சொத்துக்களும் வெளியே சென்று பயன்தர வேண்டும்.

1 comment:

  1. ஒரு ஆசிரியை என்ற முறையில் பல நேரங்களில் நானும் என் மாணவரைப்பார்த்துப் " புரிந்து கொண்டீர்களா" எனக்கேட்கும்போது ஒரு சிலரைத்தவிர மற்றவரிடமிருந்து பதில் வராதது கண்டு கோப்ப்பட்டுள்ளேன்.இப்பொழுது புரிகிறது என்னுடைய விளக்கங்கள் அவர்களுக்குப் புரியாமல் போனது கூட காரணமாயிருந்திருக்காலாமோ என்று.நிற்க... தந்தை அறிமுகப்படுத்தும் இந்த " சிறு நிறுத்தம் பட்டன்" புதியது எனினும் பொருள் செறிந்தது.ஆம்...ஆசிரியரானாலும்,மாணாக்கரானாலும் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் சிறுநிறுத்தம் செய்து " இந்நிகழ்வின்...இந்த உறவின்...இந்தத்தோல்வியின்...இந்த பயணத்தின் பொருள் என்ன?" என்பதை நாம் அலசிப்பார்ப்பது அவசியம் என்பதை உணரமுடிகிறது.இலையெனில் மூச்சிறைக்க ஓடி,ஒரு ஓரம் கண்டவுடன் படுத்துத்தூங்கும் முயலாகிவிடுவோம். நாம் வாழும் வாழ்க்கையின் அர்த்தம் நமக்குப்புரியும் போது மட்டுமே நம் உள்ளத்திலிருக்கும் புதிய,மற்றும் பழைய முத்துக்களும்,சொத்துக்களும் வெளியே சென்று பயன்தர முடியும் என்பதன் அழகையும்,அர்த்தத்தையும் ஒருங்கே புரிய வைத்த தந்தை நிச்சயமாக ஒரு நல்ல ஆசிரியர் என்பதில் ஐயமில்லை.வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete