Monday, August 7, 2017

நானா கருத்தரித்தேன்?

மோசே ஆண்டவரிடம் கூறியது: 'உம் அடியானுக்கு ஏன் இந்தக் கேடு? நீர் எனக்கு கருணை காட்டாமல் இம்மக்களின் எல்லாப் பளுவையும் என்மேல் சுமத்தியது ஏன்? இம்மக்களையெல்லாம் நானா கருத்தரித்தேன்? நானா இவர்களைப் பெற்றெடுத்தேன்' (காண். எண்ணிக்கை 11:4-15)

இன்று மாலை குருப்பட்ட திருப்பலிக்குச் சென்றிருந்தேன்.

குருப்பட்ட நிகழ்வின் இறுதியில் பேசிய பேராயர் அவர்கள், 'குருப்பட்டம் பெறும் அன்று இருக்கும் ஆடம்பரம், ஆரவாரம், கூட்டம், ஆடல், பாடல், விருந்து, வெளிச்சம் நாள்கள் கடக்க கடக்க கொஞ்சம் கொஞ்சமாக மாறும். இன்று இலகுவாகத் தொடங்கும் வாழ்க்கை அன்று கடினமாகவும் பளுவாகவும் இருக்கும். அருள்பணியாளர் அதையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும்' என்றார்.

இனிமையாகத் தெரிந்தது சுமையாகத் தெரிகின்ற ஒரு நிகழ்வைத்தான் நாளைய முதல் வாசகத்தில் வாசிக்கின்றோம். இன்றைய குருப்பட்ட திருப்பலியில் வாசிக்கப்பட்ட முதல் வாசகமும் இதுவே.

மோசே ஆண்டவரிடம் முறையிடுகின்றார்.

கடவுள் இஸ்ரயேல் மக்களை 'வணங்கா கழுத்துள்ள மக்கள்' என்று சொன்னபோது அவர்களுக்காக வரிந்து கட்டிக்கொண்டு வக்காலத்து வாங்கிய மோசே (விப 32), சிறிது ஆண்டுகளில், 'இம்மக்களின் எல்லாப் பளுவையும் என்மேல் சுமத்தியது ஏன்? இம்மக்களை நானா கருத்தரித்தேன்? நானா இவர்களைப் பெற்றெடுத்தேன்?' என தன்னை மற்ற மக்களிடமிருந்து ஒதுக்கிக்கொள்கின்றார்.

'அன்பில்லாமல் செய்யும் எந்த வேலையும் பளுவே' என்பார் என்னுடைய ஆன்மீக குரு.

மோசேக்கு மக்கள் மேல் இருந்த அன்பு குறைந்துவிட்டதா?

அல்லது அவர்கள் அவரிடம் அதிகம் இறைச்சி, உணவு கேட்டு தொந்தரவு செய்தார்களா?

அல்லது இது இயல்பாகவே மனிதர்களுக்கு, அருள்பணியாளர்களுக்கு வருகின்ற ஒரு ...ஆ?

அல்லது மோசேக்கு வயதாகிவிட்டதா?

கடவுள் மோசேயைக் கடிந்துகொள்ளவில்லை. உடனடியாக 1 உதவியாளரை அல்ல, 70 உதவியாளர்களைத் தருகின்றார்.

1 comment:

  1. குருப்பட்ட நிகழ்வின் வாசகத்தோடு ஆயரின் மறையுரையையும் இணைத்திருப்பது அருட்பணியாளர்களின் எதார்த்த வாழ்க்கையைக் காட்டுகிறது." பழகப்பழக பாலே புளிக்கும் போது" ஆரம்பத்தில் ஒரு அருட்பணியாளரின் வாழ்க்கையில் இருக்கும் வெளிச்சம்,ஆடம்பரம்,ஆடல்,பாடல் போன்ற விஷயங்கள் மறைந்நு வாழ்க்கை பளுவாக மாறுவதில் வியப்பில்லை. இதற்குக்காரணம் ஆரம்பத்தில் இருக்கும் அன்பும்,அர்ப்பணிப்பும் காலப்போக்கில் காணாமல் போவதுதான்."இம்மக்களின் எல்லா பளுவையும் என்மேல் சுமத்தியது ஏன்? இவர்களை நானா கருத்தரித்தேன்? இவர்களை நானா பெற்றெடுத்தேன்? " போன்ற வார்த்தைகள் மோசேயின் இயலாமையின் வெளிப்பாடேயன்றி, இதயத்தின் வெளிப்பாடு அல்ல.அதனால் தான் அவரின் இயலாமையைப்புரிந்து கொண்ட இறைவன் அவருக்கு 70 உதவியாளர்களைத் தருகிறார்.நம்மையும் கூட வாழ்வின் பாரமும்,சோர்வும் ஒன்று சேர்ந்து அழுத்தும்போது இறைவனிடம் உரிமையோடு நம் உள்ளத்திலிருந்து முறையிட்டால் அவர் நமக்கு உதவிக்கரம் நீட்டுவார் எனும் நம்பிக்கை விதைகளைத் தூவிய பதிவிற்காகத் தந்தைக்கு நன்றியும்! வாழ்த்தும்!!!

    ReplyDelete