Tuesday, August 29, 2017

வினை வைப்பான் விநாயகன்

இன்றைய பதிவு இணைவுப்பக்கம். இணைந்து படைப்பவர் என் நண்பர் அகஸ்டின் அவர்கள்.

எம்.ஆர். ராதா அவர்கள் நடித்த 'ரத்தக் கண்ணீர்' திரைப்படத்தின் ஒரு காட்சி இது. 'பசி, பசி' என அலறித்துடிக்கும் மோகன் (கதாபாத்திரம்) ஒரு வீட்டுத் திண்ணையில் அமர்ந்து அங்கிருக்கும் முதியவரிடம், 'பசி, பசி, ஐயா ரொம்ப பசிக்கிறது. ஏதாவது சோறு போடுங்களேன்' என்பார். அந்த முதியவர், 'சோறு போடுறேன். ஒரு பாட்டுப் பாடு!' என்பார். 'தீராத வினையெல்லாம் தீர்த்து வைப்பான் கோவிந்தன்' என்று பாடத் தொடங்குவார் மோகன். வேகமாக குறுக்கிடும் அந்த முதியவர், 'அப்புறம் ஏன்டா அந்த கோவிந்தன் உன் க(கு)ஷ்டத்தை தீர்க்கவில்லை?' எனக் கேட்பார். 'அறிவு வந்துருச்சுடா. அப்பா எல்லாருக்கும் அறிவு வந்துருச்சு. அது சும்மா சாப்பாட்டுக்காக நான் படிச்ச டூப் பாட்டு' என்பார் மோகன்.

நிற்க.

நேற்று மாலை மேலூரில் உள்ள என் வீட்டிற்குச் சென்றேன். நான் புறப்படும்போது மணி 5. நான்கு வழிச்சாலை வந்துவிட்டதால் வேகமாகச் சென்றுவிடலாம் என நினைத்து புறப்பட்ட எனக்கு நான்கு வழிச்சாலையின் சேவைச் சாலை தொடங்கும் இடத்திலேயே பேருந்து நிறுத்தபட்டது ஷாக்காக இருந்தது. 'விநாயகர் சதூர்த்தி ஊர்வலம் நடக்க போகுது. பஸ் ஊருக்குள்ள போகாது. மேலூரு இறங்கிக்கோங்க!' என்றார் நடத்துனர். மூன்று ஆண்டுகளில் வேகமாக பலுகிப்பெருகி வரும் கடவுளர்களில் ஒருவர் விநாயகர்.

முணுமுணுத்துக்கொண்டே இறங்கிய பலரோடு இணைந்து நானும் இறங்கினேன். இறங்கிய இடத்திலிருந்து மேலூர் பேருந்து நிலையம் ஏறக்குறைய 3 கிமீ. நிறைய ஆட்டோக்களும், ஷேர் ஆட்டோக்களும் நின்றிருந்தன. ஷேர் ஆட்டோவில் ஏறி அமர்ந்தேன். கல்லூரி படிக்கும் அல்லது படிக்கும் நிலையில் இருக்கும் ஒரு இளவலும் அவளது அம்மாவும் கையில் பெரிய பையுடன் ஏறினார்கள். துணிக்கடையில் துணி வாங்கிவிட்டு வந்திருக்கிறார்கள் என்பது அவர்களின் கைகளில் இருந்த பைகளிலும், அவர்களது முகத்திலும் ஒரே நேரத்தில் தெரிந்தது.

ஷேர் ஆட்டோவில் ஏறினார்கள். ஏறியும் ஏறாமல் அந்த அம்மா ஆட்டோக்காரரிடம், 'தம்பி, மேலூருக்கு எவ்வளவு?' எனக் கேட்டார். 'பத்து ரூபாய்' என்றார். 'பத்து ரூபாயா?' என்ற வியந்தவர் வேகமாக ஆட்டோவை விட்டு இறங்கினார். ஏன் இறங்கினார்கள்? என ஆச்சர்யப்பட்ட நேரம் அந்த அம்மா தன் மகளிடம் சொல்லிக்கொண்டிருந்தார்: 'கையில் 14 ரூபாய்தான் இருக்கிறது. மேலூரில் இறங்கி நம் கிராமத்துக்குச் செல்லும் பஸ்சுக்குத்தான் அது சரியாக இருக்கும். நீ ஒரு டிரஸ் கம்மியா எடுத்திருந்தா இப்படி கஷ்டப்பட வேண்டியிருக்காதே. வா நடந்தே போவோம்!' நடந்தே போவோம் என்ற சொன்னவர் நடக்கவும் தொடங்கினார். 3 கீமிக்கு முன்னே இறக்கி விட்ட பேருந்து நடத்துனர் ஏன் அந்த 3 கிமீக்கான பணத்தை திருப்பி தரவில்லை? இது அநீதியில்லையா? என என் மனம் கேட்டது.

நடக்கத் தொடங்கிய அவர்களை ஆட்டோக்காரர் விட்டபாடில்லை. அவர்கள் பின்னாலேயே நெருக்கி ஓட்டிக்கொண்டு போனார், 'கையில் இருப்பதைக் கொடுமா!' எனச் சொல்லி அவர்களை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டார். மேலூர் வந்தது. கையில் இருந்த மொத்தக் காசு 14 ரூபாயையும் கொடுத்துவிட்டு, தங்கள் கைகளில் பைகளோடு தங்கள் ஊர் நோக்கி நடக்கத் தொடங்கினர்.

அப்போது மணி ஏறக்குறைய 7.

மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை விநாயகருக்காக சாலை அடைக்கப்பட்டிருந்தது.

பேருந்து நிலையத்தின்முன் வரிசையாக நின்றிருந்த எந்த விநாயகருக்கும் இந்த இளவலையும், அவரின் அம்மாவையும் பற்றிக் கவலைப்படவில்லை. தன் பக்தர்களின் வினைகளைத் தீர்க்க, 'வினை தீர்ப்பான் விநாயகன்' வழிதெரியாமல் நின்றிருந்தார்.

இந்த விநாயகர் தனக்கு சப்பரம் கேட்டாரா? ஊர்வலத்திற்காக பேருந்துகளை நிறுத்தச் சொன்னாரா?

கையிலிருந்த கடைசிக் காசையும் உருவிவிட்டு கால் வலிக்க நடக்க வைத்த விநாயகருக்கு வானளாவிய சப்பரங்களும், வான வேடிக்கைகளும்.

நிற்க.

இது விநாயகருக்கு மட்டுமல்ல. எல்லா கடவுளர்களுக்கும் பொருந்தும்.

கடவுள், கடவுள் நம்பிக்கை எல்லாம் நமக்கு நாமே கொண்டிருக்கும் ஒரு இன்ஃபன்டைல் இன்ஃபேசு;சுவேஷன். சின்ன வயதில நம்மேல் புகுத்தப்பட்ட ஒரு காதல் இது. ஆகையால்தான் வேறு எந்தக் கடவுளையும் பற்றி நினைக்க மனம் மறுக்கிறது.

கடவுள் நம்மைக் காயப்படுத்துவதும் இல்லை. அவர் நம்மை குணப்படுத்துவதும் இல்லை.

தீதும் நன்றும் பிறர்தர வாரா.

ஆம், அவற்றைக் கடவுளர்களும் நமக்குத் தருவதில்லை.

வருவதெல்லாம் தானாகவே வருகிறது.

வினை தீர்க்கும் கடவுளர்கள் வினை வைக்காமல் இருந்தால் நலம்!

3 comments:

  1. சுகமில்லாத ஒரு குழந்தைக்குத் தேனில் குழைத்துக் கொடுக்கப்படும் மருந்து போல நக்கல்,நையாண்டியுடன் இந்த சமூகத்தின் சில அவலங்களைச் சாடும் ஒரு பதிவு." One man's flesh is another man's meat".... கேள்விப்பட்டிருப்போம்.அந்தத்தாயும்,மகளும் கால்கடுக்க நடந்த அதே நேரத்தில் கணக்கற்ற மக்கள் விநாயகருடன் விளையாடிக்கொண்டிருந்திருப்பர் என்பது மகிழ்ச்சியான விஷயம் தானே! ஒரு வேளை சாலை அடைக்கப்படாமல் போயிருந்திருந்தால் அது அவர்களுக்கு சாத்தியப்பட்டிருக்காதே! என்னதான் "தீதும் நன்றும் பிறர்தர வாரா" என்பது ஒப்புக்கொள்ள வேண்டிய விஷயமெனினும் "கடவுள் நம்மைக்காயப்படுத்துவதும் இல்லை; குணப்படுத்துவதும் இல்லை". கொஞ்சம் நெருடலாக உள்ளது. இது மெத்தப்படித்தவர்களுக்கு வேண்டுமெனில் பொருந்தும்; சாமான்யனுக்கு அல்ல,வருவதெல்லாம் தானாக வருவதுபோல் தெரியலாம்; ஆனாலும் எல்லாவற்றிற்கும் ஒரு " நதிமூலம்,,ரிஷிமூலம் இருக்கத்தானே ' செய்கிறது? வினை விதைக்க ஒருவர் இருப்பின் வினை தீர்க்கவும் ஒருவர் தேவை தானே! தந்தையருக்கு என்மேல் கோபம் வரலாம்.நாங்கள் எல்லாம் சாமான்யர்கள் தானே! இப்படித்தான் யோசிக்க முடியும்.ஆனாலும் இரசிக்கத்தக்க ஒரு படைப்புக்காகத் தந்தை அகஸ்டின் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  2. Dear Sago,

    Every time you narrate an experience, we feel one with you..

    This is a touchy experience...

    Well titled... Sago...

    Thank you so much for your generosity to grant me a place in your blog..

    Always grateful to you Sago...


    ReplyDelete
  3. கடவுளர்கள் மனிதரால் உண்டாக்க பட்டவர்கள்..
    கடவுள் மனிதனை உண்டாக்கியவர்...
    இதன் பிரிவை சரியாய் எப்போதும் வைத்து இருப்பது சால சிறந்தது..
    ஒன்றை விளக்க மறையின் உண்மையை சற்றே நிழலில் மூழ்க வைப்பது நன்றன்று...

    ReplyDelete