Sunday, August 27, 2017

தூய அகுஸ்தினார்

நாளைய தூய அகுஸ்தினாரின் திருநாளைக் கொண்டாடுகிறோம்.

நான் கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழில் மொழிபெயர்த்துக்கொண்டிருக்கின்ற அகுஸ்தினாரின் 'உள்ளக்கிடக்கைகளின்' ஒரு பகுதி இது (6:6):

புகழ், பணம், திருமணம் என நான் தேடி அலைந்தேன். நீ என்னைப் பார்த்துப் புன்னகை செய்தாய். இவைகளை நான் தேடியபோது எனக்கு கசப்பும், கஷ்டமுமே மிஞ்சியது. உன்னைத் தவிர நான் வேறெந்த இனிமையையும் கண்டுவிடக்கூடாது என்பதற்காக உன் பரிவு என்றும் என்மேல் இருந்தது. என் இதயத்திற்குள் பார், ஆண்டவரே. நான் இவை எல்லாவற்றையும் நினைவுகூர்ந்து உன்னிடம் மனம் திறக்க வேண்டுமென நீயே விரும்பினாய். சாவின் பிடியிலிருந்து என்னை நீ விடுவித்ததால் என் இதயம் உன்னைப் பற்றிக் கொள்வதாக. எல்லாவற்றையும் விட்டுவிட்டு, நலம்தரும் உன்னைப் பற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்காக என் புண்ணை நீ கிள்ளி விட்டாய். நான் மகிழ்வை இழந்து நின்றேன். நான் என் மகிழ்வை இழக்க வேண்டும் என நீ விரும்பினாய். அன்றொரு நாள், நான் நீண்ட உரை ஒன்றைத் தயாரித்துக் கொண்டிருந்தேன். அரசனைப் புகழ்ந்து பேசும் அந்த உரையில் நிறையப் பொய்கள் இருந்தன. அவைகள் பொய்கள் எனத் தெரிந்தவர்கள் என் உரையைப் பாராட்டுவார்கள். நான் அதை எப்படி நிகழ்த்துவேன் என்று என் மனம் கலங்கிக் கொண்டிருந்தது. இந்த எண்ணங்களோடு மிலான் தெருவில் நான் நடந்து கொண்டிருந்தபோது, ஒரு பிச்சைக்காரரைக் கண்டேன். நன்றாகக் குடித்துக் களிப்புற்றிருந்தார் அவர். அது எனக்கு வருத்தமாக இருந்தது. நம் முட்டாள்தனத்தால் நாம் எவ்வளவு துன்பங்களை நம்மேல் வருவித்துக்கொள்கிறோம் என நான் என் நண்பர்களிடம் சொன்னேன். என் ஆசைகளால் உந்தப்பட்டு, என் மகிழ்ச்சியின்மையில் நானும் மகிழ்ச்சியைத் தேடி அலைந்து கொண்டிருந்தேன். எந்தவொரு கவலையும் இல்லாத கட்டின்மையைத் தேடினேன். எங்களுக்கு முன்பாகவே அதை இந்த பிச்சைக்காரர் அடைந்துவிட்டார். ஒருவேளை நாங்கள் இதை அடையாமலே போகலாம். தான் பிச்சையெடுத்த சில சில்லறைகளைக் கொண்டு இந்தப் பிச்சைக்காரர் அந்த நிலையை அடைந்துவிட்டார். ஆனால் நான் நிறைய சம்பாதித்தாலும், நிறைய அறிவைப் பெற்றிருந்தாலும் அதை அடைய முடியவில்லை. தற்காலிக மகிழ்ச்சி தரும் இன்பத்தைக்கூட என்னால் அடைய முடியவில்லை.

பிச்சைக்காரரின் மகிழ்ச்சி உண்மையான மகிழ்ச்சி இல்லைதான். ஆனால் அது என் தன்னார்வங்களால் நான் தேடி அலைந்த மகிழ்ச்சியைவிட மேலானது. அவர் மகிழ்ச்சியாக இருந்தார். நான் கவலையாக இருந்தேன். அவர் எந்தவொரு கலக்கமும் இல்லாமல் இருந்தார். ஆனால் நான் பயங்களால் நிரம்பி வழிந்தேன். 'பயமா' 'மகிழ்ச்சியா' என்றால், நான் மகிழ்ச்சியையே தெரிவு செய்திருப்பேன். ஆனால் பிச்சைக்காரர் போல இருக்க விரும்புகிறாயா, அல்லது நான் இருப்பதைப் போல இருக்க விரும்புகிறாயா? என்றால், நான் என்னைப் போல இருப்பதையே விரும்பியிருப்பேன். பயங்களாலும், கவலைகளாலும் வறண்டு போன என்னைப்போலவே நான் இருக்க விரும்பினேன் என்று சொல்வது மடமையாக இல்லையா? எந்தக் காரணத்தை வைத்து நான் இதை நியாயப்படுத்த முடியும்? என் படிப்பு எனக்கு மகிழ்ச்சி தரவில்லை என்பதற்காக, நான் என்னையே பிச்சைக்காரரோடு ஒப்பிட முடியுமா? இல்லை. என் படிப்பால் எனக்கு மகிழ்ச்சியில்லை. ஆனால் அந்தப் படிப்பு மற்றவர்களின் இன்பத்திற்குப் பயன்பட்டது - என் படிப்பால் நான் மற்றவர்களை திருப்திப்படுத்தினேன். ஆகையால் நீ உன் ஒழுக்கம் என்னும் தடியால் என் எலும்புகளை நொறுக்கினாய்.

'வேறுபாடு நம் மகிழ்ச்சியின் ஊற்றில் இருக்கிறது. பிச்சைக்காரர் தன் மகிழ்ச்சியை குடிப்பதில் கண்டார். நீயோ புகழை அடைவதில் அதைத் தேடினாய்' என்று மற்றவர்கள் என் ஆன்மாவிடம் சொல்வதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. என்ன புகழ் ஆண்டவரே? உன்னில் இல்லாத புகழே அது. எப்படி பிச்சைக்காரரின் மகிழ்ச்சி உண்மையான மகிழ்ச்சி இல்லையோ, அதுபோலவே, என் புகழும் உண்மையான புகழ் இல்லை. அது இன்னும் மோசமான விளைவையே என் மனத்தில் உருவாக்கியது. இரவு முடிந்தவுடன் போதை தெளிந்துவிடும் அவருக்கு. ஆனால், நான் ஒவ்வொரு நாள் விழித்தெழும்போதும் என் போதை தெளியவே இல்லை. ஒவ்வொரு நாளும் நான் அதை நோக்கியே ஓடினேன். மனிதன் தன் மகிழ்ச்சியை எதில் தேடுகிறான் என்பதில் வித்தியாசம் இருப்பது உண்மைதான். நம்பிக்கையான எதிர்நோக்கு தரும் மகிழ்வே எல்லா வீண் மகிழ்வைவிட மேலானது. இந்தப் பிச்சைக்காரர் என்னைவிட மகிழ்ச்சியாகவே இருந்தார். அவர் தன் களிப்பில் ஆழ்ந்திருந்தபோது, நான் என் கவலைகளில் ஆழ்ந்திருந்தேன். என் ஏக்கங்கள் என்னைத் தின்றன. 'நல்லா இருங்க!' என மற்றவர்களை வாழ்த்தி அவன் இன்னும் அதிக சில்லறைகள் பெற்றான். இன்னும் கொஞ்சம் மது வாங்கினான். ஆனால் நான் பொய் சொல்லி, பாராட்டு என்னும் வெற்றுக் குமிழைத் தேடினேன்.

எனக்கு நெருக்கமான நண்பர்களிடம் இதைப் பற்றிப் பேசினேன். அவர்களின் நிலையும் என் நிலைபோலத்தான் இருந்தது. என்னிடம் எதுவும் சரியாக இல்லை. நான் அவற்றைப் பற்றி கவலைப்பட்டேன். என் கவலைகளால் என் துன்பம் இரட்டிப்பானது. அதிர்ஷ்டம் என் கதவைத் தட்டினாலும், எழுந்து சென்று திறக்க முடியாத அளவிற்கு நான் சோர்வாக இருந்தேன். நான் எழுந்து திறந்து அதைப் பிடிக்குமுன் அது என்னைவிட்டுப் பறந்து போனது.

4 comments:

  1. ஒன்றுக்கு மேற்பட்ட காரணங்களுக்காக புனித அகுஸ்தினார் மட்டுமல்ல ..அவரின் தாய் மோனிக்கா கூட என் நெஞ்சுக்கு நெருக்கமானவர்களே! திருந்தத்துடிக்கும் ஒரு மகனுக்கு அகுஸ்தினார் உதாரணம் எனில், அந்த மகனின் மனமாற்றத்திற்காக காலமெல்லாம் கண்ணீர் சிந்தும் தாயாக மோனிக்கா உயர்ந்து நிற்கிறார்.அவர்களின் மேல் எனக்குள்ள ஈர்ப்பு அவரைக்குறித்த தந்தையின் எழுத்துக்களைப் படிக்கும் போது பல மடங்கு அதிகமானது உண்மை.அவரைப்பற்றிய தகவல்களைத்தருகையில் தந்தையின் எழுத்துக்களில் ஒரு புதுமையை, பூரிப்பை உணரமுடியும். எந்த ஒரு சாயப்பூச்சுமின்றி தன்னை உள்ளது உள்ளபடி இறைவன் முன் துகிலுரிப்பது இந்த மாமனிதனின் தனித்துவம்.அதனால்தான் இவர் திருச்சபையின் தூண்களில் ஒருவராகப் போற்றப்படுகிறார் என்றால் மிகையில்லை."நம்பிக்கையான எதிர் நோக்கு தரும் மகிழ்வே எல்லா வீண் மகிழ்வை விட மேலானது".இறைவனில் தன்னை கலக்க விரும்பும் இவர் தன்னால் விடமுடியாத பழக்கவழக்கங்கள் அதற்குத் தடையாக இருப்பது குறித்து இவர் மறுகும் விதம் கல்லையும் கரையச்செய்யும்.இவரைப்பற்றி நான் எண்ணும்போது மின்னலாக என் கண்முன்னே வந்து மறைவது.." Late have I loved Thee" எனும் சொற்றொடர்தான்.இவரைப்பற்றி நிறைய விஷயங்களைத்தெரிந்து கொள்ள காரணியான தந்தைக்கு என் நன்றியும்! வாழ்த்தும்!

    ReplyDelete
  2. Anonymous8/28/2017

    Good blog Yesu

    ReplyDelete
  3. Anonymous8/28/2017

    Good blog Yesu

    ReplyDelete
  4. புனித அகஸ்டின் ஞான மொழிகளை தமிழ் மொழி பெயர்ப்பு செய்யும் உம் பணி சிறக்க வாழ்த்துக்கள்...

    ReplyDelete