Thursday, August 17, 2017

திருநங்கையாய்

'சிலர் பிறவியிலேயே அண்ணகராய் (திருநங்கையராய்) - மண உறவு கொள்ள முடியாதவராய் - இருக்கின்றனர்.
வேறு சிலர் மனிதரால் அந்நிலைக்கு ஆளாக்கப்படுகின்றனர். 
மற்றும் சிலர் விண்ணரசின்பொருட்டு அந்நிலைக்கு தம்மையே ஆளாக்கிக் கொள்கின்றனர்.'
(காண். மத் 19:3-12)

2009ஆம் ஆண்டு என்னுடன் குருவாக அருள்பொழிவு செய்யப்பட்ட நண்பர் வரன் தனது விருதுவாக்காக, 'இறையாட்சிக்கான திருநங்கையாய்' என எடுத்திருந்தார். இந்த நற்செய்திப் பகுதியே நாளைய நற்செய்தி வாசகம்.

இன்று காலை உணவு சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது அருள்சகோதரி ஒருவரின் இறப்பு செய்தி வந்தது. 'அருள்சகோதரி ஒருவர் இறந்துவிட்டார்' என்ற செய்தி வாசிக்கப்பட்டவுடன், எல்லா ரியாக்ஷனும் ஒரே மாதிரி இருந்தது. 'வயசானவங்களா?' என கோரஸாகக் கேட்டார்கள். 'ஆம்' என பதில் வந்தது. வேறு எந்த ரியாக்ஷனும் இல்லை.

உலகத்தில் அரசியல் அல்லது சினிமா அல்லது விளையாட்டு பிரமுகர் இறந்தால், ஸ்டீவ் ஜாப்ஸ் அல்லது அப்துல் கலாம் இறந்தால், அவர் சொல்லிய, சொல்லாத, அவர் விட்டுச்சென்ற, விட்டுச்செல்லாதவை பற்றியெல்லாம் பேசும் நமக்கு ஓர் அருள்சகோதரியின் இறப்பு பெரிதாகத் தெரிவதில்லை என்பது வருத்தமாக இருக்கிறது.

2016, மே 12 அன்று அருள்சகோதரிகளின் தலைமை அன்னையரைச் சந்தித்த திருத்தந்தை இப்படி உரையாடினார்: 'உங்கள் இல்லங்களில் வயதான அருள்சகோதரிகளை எங்கே வைத்திருக்கிறீர்கள்? அவர்கள் வயதானவர்கள் என்று நீங்கள் முத்திரையிடுவதில்லையா? இன்று வயதான அவர்கள் ஒரு காலத்தில் உங்களைப் போல இருந்தவர்கள். நீங்கள் அனுபவிக்கின்ற கனிகளுக்கான விதைகளை விதைத்தவர்கள். அவர்கள் அன்று பேருந்தில் பயணம் செய்து பணம் சேர்த்ததால்தான் நீங்கள் இன்று கார்களில் வேகமாக பயணம் செய்கிறீர்கள். அவர்கள் அன்று வெறும் தண்ணீரை குடித்துக்கொண்டு பணிசெய்ததால்தான் இன்று நீங்கள் வயிறார உண்கிறீர்கள். இன்று அவர்கள் பயனற்றவர்கள் ஆகிவிட்டார்கள். அவர்களுக்கு வயதாகிவிட்டது. மறதி வந்துவிட்டது. வெறும் காட்சிப் பொருளாகிவிட்டார்கள். இன்று அவர்கள் உங்களுக்காக செபிக்கிறார்கள். இதைவிட வேறு என்ன வேண்டும்? நீங்கள் ஒருநாள் முழுவதும் அமர்ந்து செபிக்க முடியுமா? அவர்களால் முடியும். ஆக, அவர்களைப் பார்க்கச் செல்லுங்கள். அவர்களது அனுபவம் எப்படி இருந்தது எனக் கேளுங்கள். உங்களுக்குச் சொல்ல அவர்களிடம் நிறைய கதைகள் உண்டு.'

அருள்சகோதரிகளும், அருள்பணியாளர்களும் அங்கொன்றும், இங்கொன்றுமாக தினமும் இறக்கின்றனர். ஆனால் அவர்கள் இறுதி ஆசை, இறுதி வார்த்தை என யாரும் கவலைப்படுவதில்லை.

இன்று வயதான அருள்பணியாளர் ஒருவரை மருத்துவமனைக்குச் சந்திக்கச் சென்றிருந்தேன்.

பெரிய குடும்பத்தைச் சார்ந்தவர். நிறைய பங்குகளில் பணி செய்தவர். நிறைய மாணவர்களுக்குக் கற்றுக்கொடுத்தவர். இன்று முன்பின் தெரியாத ஒரு கேர்டேக்கரின் தயவில் அவர் இருக்கிறார். இவ்வளவு எழுதும் நானும்கூட ஒரு மணி நேரத்திற்கு மேல் அவருடன் இருக்க முடியவில்லை. 'வேலை இருக்கிறது!' என வந்துவிட்டேன். எல்லாருக்கும் வேலை இருக்கிறது. ஆகையால் வேலையில்லாமல் படுத்துக்கிடக்கும் ஒருவரைப் பார்த்துக்கொள்ள நேரமில்லை. 

இரண்டு மாதங்களுக்கு முன் மற்றொரு மருத்துவமனைக்குச் சென்றிருந்தேன். பெரிய பதவியில் இருக்கும் ஓர் அருள்பணியாளர் மருத்துவமனையில் கட்டிலில் படுத்திருந்தார். மாற்றுவதற்கு லுங்கி கூட கொண்டு வராததால் தனது பேண்ட், பனியன் என ஒருக்களித்துப் படுத்திருந்தார். 'யார் கூட இருக்கா?' எனக் கேட்ட போது, தன் டிரைவர் இருப்பதாகச் சொன்னார். இவ்வளவு பெரிய இடத்தில் இருந்து தன் உதவிக்காக யாரையும் அழைத்துவர முடியவில்லையா? அல்லது அப்படிப்பட்ட உறவை வளர்க்கவில்லையா? அல்லது அப்படி இருக்க விரும்பவில்லையா?

நிற்க.

அண்ணகர் அல்லது திருநங்கை என்பது உடல்சார்ந்த ஒன்றல்ல என இன்று நான் புரிந்துகொள்கிறேன்.

அது உடல் சார்ந்தது அல்ல. உறவு சார்ந்தது.

மண உறவில் உள்ளவர்களைப் பார்த்துக்கொள்ள கணவன், மனைவி, பிள்ளைகள், மாமா, மச்சான் என யாராவது வந்துவிடுவார்கள். அதுதான் சுற்றத்தின் அழகு. நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் சுற்றம் நம்மைச் சுற்றியே இருக்கும்.

ஆனால், எல்லாம் இருந்தும் யாருமே இல்லாததுபோல இருந்து,
எல்லாம் இருந்தும் யாருமே இல்லாததுபோல இறக்கும் நிலையில் இருக்கும்
அருள்சகோதரி, அருள்பணியாளர் அனைவருமே
இறையாட்சிக்கான திருநங்கையரே!
ஏனெனில், தனித்துவிடப்பட்ட நிலையே திருநங்கை நிலை.

இன்று ஒரு நிமிடம் மௌனமாக இருந்து இந்த உலகில் மருத்துவமனையில் சிகிச்சை எடுக்கும் எல்லா அருள்சகோதரிகள், அருள்பணியாளர்களுக்காக செபிக்கலாம் என நினைக்கிறேன்.

2 comments:

  1. பல நேரங்களில் தந்தை இந்த குருத்துவ மற்றும் துறவற நிலையிருப்பவர் பற்றியும்,அவர் வாழ்க்கை முறை பற்றியும் கூறும் விதம் நம் மனத்தைப் பிசைவதாக உள்ளது.உண்மைதான்.....வயதாகி ஓரங்கட்டப்பட்ட கன்னியர் பற்றி திருத்தந்தை கூறுவது நூற்றுக்கு நூறு உண்மையாயிருப்பினும் சில குடும்பங்களில் உள்ள இல்லறவாசிகளின் நிலைகூட, எல்லாம் இருந்தும்,எல்லோரும் இருந்தும் ஒன்றுமில்லாத நிலையே! எல்லாமே இக்கரைக்கு அக்கரை பச்சைதான் உண்மைதான்...'அண்ணகர்' அல்லது 'திருநங்கை' என்பது உடல் சார்ந்த ஒன்றல்ல; அது உறவு சார்ந்த ஒன்று என்பதை என்னாலும் ஏற்றுக்கொள்ள முடிகிறது.'தனித்து விடப்பட்ட நிலையே திருநங்கை நிலை' என்றால் அது இல்லறம் மற்றும் துறவறம் இரண்டுமே சார்ந்ததாகத்தான் நான் பார்க்கிறேன்.இலையென்றால் ஊருக்கொன்றும்,மூலைக்கொன்றுமாக 'முதியோர் இல்லங்கள்' முளைக்கிறதே...எதற்காக? கண்டிப்பாக தந்தையுடன் சேர்ந்து நானும் இந்த உலகில் உள்ள அனைத்து மருத்துவ மனைகளிலும் சிகிச்சை பெறும் எல்லா அருள் சகோதரிகள்,அருள்பணியாளர்களுக்காகவும்,ஏன் தனிமைத்துயரில் வாடும் அனைத்துப் பேருக்காகவுமே தினம் சிறிது நேரம் செபத்தில் ஒதுக்க முடிவு செய்துள்ளேன். சிந்திக்க மறந்த மனங்களைத் தன் சிந்தனைத்திறனால் தட்டி எழுப்பும் தந்தைக்கு இறைவன் நல்ல உடல்,உள்ள சுகம் தர வேண்டுகிறேன்!!!

    ReplyDelete
  2. அருமையான பதிவு...
    இறை ஆட்சியின் சம்மணசு...
    இந்த அருட் கன்னியர்கள்...

    ReplyDelete