Saturday, August 26, 2017

நீங்கள் என்னை யாரென

நாம் கேட்கின்ற பல்வேறு அடிப்படைக் கேள்விகளுள் ஒன்று: 'நான் யார்?' இந்தக் கேள்வியைக் கொஞ்சம் விரிவுபடுத்தினால், 'எனக்கு நான் யார்?' 'என் நண்பர்களுக்கு நான் யார்?' 'என் குடும்பத்திற்கு நான் யார்?', 'என் சமூகத்திற்கு நான் யார்?', 'என் கடவுளுக்கு நான் யார்?' என்று கேட்டுக்கொண்டே போகலாம். இது வெறும் சுய அடையாளத்திற்கான கேள்வியாக மட்டுமல்லாமல், நமக்கும், பிறருக்கும் உள்ள உறவை, தொடர்பை அடையாளப்படுத்தும் கேள்வியாகத்தான் இருக்கின்றது.

இந்தக் கேள்வியை இன்று இயேசு தன் சீடர்களைப் பார்த்துக் கேட்கின்றார். இயேசுவின் இந்தக் கேள்வி தன் அடையாளத்தைத் தான் தெரிந்துகொள்வதற்காக என்று இல்லாமல், தன் அடையாளத்தை மற்றவர்கள் எப்படி காண்கிறார்கள்? என்ற தேடலின் விளைவாகத்தான் அமைகின்றது. இந்தக் கேள்வி இரண்டு படிநிலைகளைக் கொண்டிருக்கின்றது: 1) மக்கள் என்னை யாரெனச் சொல்கிறார்கள்?, 2) நீங்கள் என்னை யாரெனச் சொல்கிறீர்கள்?

இயேசுவின் இந்தக் கேள்வியும், சீடர்களின் பதிலும்:

மார்டின் பியூபர் என்ற ஜெர்மானிய மெய்யியலார் மனிதர்கள் உறவுகொள்ளும் நிலையை இரண்டாகப் பிரிக்கின்றார்: 'நான் - அது' (I-It), 'நான் - அவர்' (I-Thou). இதில் முதல் நிலை உறவு வெறும் தகவல் பரிமாற்றம் சார்ந்ததாக மட்டும் இருப்பதாகவும், இரண்டாம் வகை உறவில்தான் ஆத்மார்த்த உணர்வுகள் பரிமாறப்படுவதாகவும் முன்வைக்கின்றார். இறைவனுக்கும் நமக்கும் உள்ள உறவும் கூட இப்படி இருக்க வாய்ப்பு உண்டு. முதல் வகை உறவில் நாம் இருக்கும்போது இறைவன் நமக்கு வெறும் உயிரற்ற அடையாளமாக, நம்பிக்கைப் கோட்பாடாம மட்டும் இருக்கலாம். தலைவலிக்கு நாம் எடுக்கும் அநாசின் போல, இறைவனை பிரச்சினைகளின் போது மட்டும் தேடலாம். உடைகளைகத் தூய்மையாக்கும் வாஷிங் மெஷின் போல, நம் உள்ளத்தைப் பாவத்திலிருந்து தூய்மையாக்க மட்டும் தேடலாம். குற்றம் செய்தால் தண்டிக்கும் போலீஸ் போலவும், எப்போதும் அன்பளிப்புகள் வழங்கும் 'சாந்தா கிளாஸ்' போலவும் கூட பார்க்க வாய்ப்புண்டு. ஆனால் இவற்றையெல்லாம் கடந்து 'நீ – நான்' என்று அன்பு உறவில் இணைந்திருக்கும் நிலையில் நாம் இருக்கின்றோமா? என்று கேட்க வேண்டியது சவால்.

2 comments:

  1. இன்று அதிகாலை 3 மணியளவில் விழித்துக்கொண்ட எனக்குத் தொடர்ந்து உறங்க இயலவில்லை. சிறிது நேர முயற்சியும் தோற்றுப்போனது. சரி,தந்தையின் பதிவு இன்று என்னவாக இருக்கும் என்ற ஆவலில் ஐபேடைத்திறந்து வாசித்த எனக்கு, அந்த விடியலின் நிசப்தத்தினாலோ என்னவோ இன்றையப்பதிவின் ஒவ்வொரு எழுத்தும் என்னை வெகுவாகப் பாதித்தது.இறைவன் எனக்கு யார்? என்னை சிறுது நேரம் உறைய வைத்த கேள்வி.தந்தையின் வார்த்தைகளில் இறைவனை ஒரு அநாசினாக,வாஷிங்மெஷினாக,போலீஸாக,'சாந்தாக்ளாசாக நாம் பாவிப்பதில் தப்பில்லை; அது நம் குழந்தை உள்ளத்தையே காட்டுகிறது என்பது புரிந்தது.ஆனால் அத்தோடு நின்று விடாமல்,அதையும் தாண்டி அவரை நான் ' ஆத்மார்த்தமாக' நேசிப்பது அவருக்கும்,எனக்கும் மட்டுமே சம்பந்தப்பட்ட விஷயம் என்பதாலும்,நான் எப்படி இருப்பினும் என்னை நானாகவே அவர் பாவிப்பார் என்பதாலும் அதில் எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை என்றே தோன்றுகிறது. ஆனால் எனக்குப் பிறருடனான உறவு?! அதிலும் என்னைச்சுற்றியுள்ளவர்கள் என்னை என்னவாக நினைக்கிறார்கள்? என்ற கேள்வி என்னை ரொம்பவே யோசிக்க வைத்தது.இறுதியில் மிஞ்சியது ஒருவித வெறுமை. நாம் ஆழமாக அன்பு செய்பவர்களும், நம்முடன் இரத்த சம்பந்தம் உள்ளவர்களும் கூட நாம் எதிர்பார்க்கும் முறையில் நம் அன்பைத் திருப்பித்திருப்பித் தர இயலாது என்பதை உணரமுடிந்தது.ஏனெனில் மனிதர்கள்..அவர்கள் யாராயிருப்பினும் காலத்திற்கும்,நேரத்திற்கும் உட்பட்டவர்கள். இந்த உண்மை நமக்கு உரைக்கும்போதுதான் யாரையும் உள்ளபடியே ஏற்றுக்கொள்ளவும், நம்மைப்புரிந்து கொள்ளும் இறைவனிடமும்,நாம் புரிந்து கொள்ள முடியாத மனிதரிடமும் " நீ- நான்" என்ற ஆத்மார்த்தமானதொரு அன்பு நிலையில் இருப்பது சாத்தியம். மனிதருடன் இதை நடைமுறைப்படுத்துவது கண்டிப்பாக ஒரு 'சவால்'தான்.ஆனால் என்னைப்புரிந்து கொண்ட இறைவனிடம்...." அது பேசப்பட அல்ல; வாழ்ந்து காட்ட வேண்டிய விஷயம் " என்பது புரிந்தது.யோசிக்க வைத்த ஒரு பதிவிற்காகத் தந்தைக்கு நன்றியும்,ஞாயிறு வணக்கங்களும்!!!

    ReplyDelete
  2. முதல் நிலையில் இருந்து இரண்டாம் நிலை செல்ல இந்த பதிவு துணை செய்யட்டும்..

    ReplyDelete