Wednesday, August 2, 2017

இரண்டு பாப்பாஸ்

இன்று அதிகாலை காலை திருப்பலிக்காக செவித்திறன் குறைந்தோர் பள்ளிக்குச் சென்றிருந்தேன். 'நல்லா இருக்கீங்களா?' என்ற கேள்வியை மட்டும் அவர்கள் பாஷையிலேயே கேட்டேன். அவர்களும் தங்கள் பாஷையிலேயே பதில் சொன்னார்கள். 'இவருக்கும் பேச்சு வராது போல!' என என்னை நினைத்திருப்பார்கள்.

திருப்பலி நேரத்தில் இரண்டு குழந்தைகள் பேசிக்கொண்டிருந்தன. இந்தக் குழந்தைகள் சைகை மொழியில் மட்டும் பேசிக்கொண்டதால் எந்த சப்தமும் வரவில்லை.

இந்தக் குழந்தைகளின் சலனமற்ற, சத்தமற்ற மௌன உலகத்தை அனுபவிக்க எனக்கும் ஆசையாக இருந்தது. மொழி படத்தின் கதாநாயகன் இந்த அனுபவத்தைப் பெற தன் காதுகளில் பஞ்சு வைத்து இறுக்கமாகக் கட்டிக்கொண்டு ஊரை வலம் வருவது நினைவிற்கு வந்தது.

உரோம் நகருக்குச் சென்ற புதிதில் நானும் செவித்திறன் குறைவான, பேசும்திறன் குறைவானவனாக இருந்தேன். மொழி தெரிந்தால்தானே அவர்கள் பேசுவது புரியும். மொழி தெரிந்தால்தானே பதில் பேச முடியும். ஏறக்குறைய 6 மாதங்கள் மௌனத்திலேயே கடந்தது. ஆக, நாம் எல்லாருமே செவித்திறன் - பேச்சுத்திறன் குறைந்தவர்களாக இருக்கும் அனுபவத்தைப் பெற்றிருக்கிறோம்.

திருப்பலி முடிந்து கேக் வெட்டும் நேரத்தில் மேற்சொன்ன இரண்டு குழந்தைகளும் அருகருகே நின்றுகொண்டன. இருவர் முகங்களிலும் அப்படி ஒரு சிரிப்பு. 'உங்க பெயர் என்ன?' என்று கேட்டேன். 'அட்சயா' என பதில் வந்தது. 'இவருக்கு காது கேட்குமா?' என்றேன். 'அதற்கான மெஷின் வைத்தால் கேட்கும். இந்தக் குழந்தைக்கு அது பொருத்தப்பட்டுள்ளது' என்றார் ஓர் அருள்சகோதரி. தானும் கேக் வெட்ட வேண்டும் என புன்னகையோடு கேட்டாள் அட்சயா. சரி என்றனர் அருள்சகோதரிகள். கேக் வெட்டியவள் முகத்தில் அவ்வளவு புன்னகை.

அதாவது, பெரிய கூட்டத்தின் நடுவிலும் தான் செய்ய நினைத்ததை செய்து முடித்து மகிழ்ச்சி கண்டாள் அட்சயா.

ஆனால், வளர வளர நாம் இந்த 'நினைத்ததை செய்வதை' மறந்துவிடுகின்றோம். நாமாக நம் ஆசைகளை குறுக்கிக் கொள்கிறோம். அல்லது 'அடுத்தவர்கள் என்ன நினைப்பார்கள்?' என்று மீதிக் கனவுகளை புதைத்துவிடுகிறோம்.


இது கேக் பாப்பா. முதல் பாப்பா.

இரண்டாவது பாப்பா பலூன் பாப்பா. பள்ளி ஒன்றின் அலுவலக திறப்பு. விழாத்தலைவரை வரவேற்க நிறைய குழந்தைகள் வரிசையில் நிறுத்தப்பட்டிருந்தனர். இரண்டு குழந்தைகள் படிக்கட்டுகளில் நின்றனர். அவற்றில் ஒரு குழந்தையின் கையிலிருந்த பலூன் கீழே விழுந்தது. அதை எடுக்க அது இறங்கி வந்த நேரம் காற்று அடித்தது. காற்றில் பலூன் நகர ஆரம்பித்தது. 'அதைப் பிடிங்க' என்று அந்தக் குழந்தை கத்த, செபம் செய்து கொண்டிருந்தவர்களின் மௌனம் கலைந்தது.

தான் செய்ய நினைத்ததை செய்ததோடல்லாமல், அதற்கு உதவ மற்றவர்களையும் அழைக்கிறாள் இந்த இரண்டாவது பாப்பா அல்லது பலூன் பாப்பா. நாங்கள் செய்த செபம், திறக்கப்பட்ட அலுவலகம், நன்கொடையாளர்கள், விழாத்தலைவர்கள் என யாரைப் பற்றியும் அக்கறைப்படாத இந்த பாப்பா தன் பலூன் மேல் மட்டுமே அக்கறையாக இருந்தது.

இரண்டு பாப்பாக்கள்!

இனிய பாப்பாக்கள்!

2 comments:

  1. Welcome back, Father! By the way, why did you cut cake? Was it your birthday or just like that?

    ReplyDelete
  2. பாலைவனத்தின் நடுவே நடக்கும் ஒருவனுக்குத் தண்ணீர்த் தடாகத்தைக்கண்ட உணர்வு ஏற்பட்டது நெடுநாளைக்குப்பின் வந்த தந்தையின் பதிவு கண்டு. நன்றி! இரு சிறுமிகள் அவர்களுக்கே என்ன செய்கிறோம் என்று தெரியாமல் செய்த ஒரு காரியத்தைக் காரண காரியங்களோடு கவிதையாக வடித்து விட்டீர்கள். வாழ்த்துக்கள்! " தான் நினைத்ததைச் செய்வது என்பது" சம்பந்தப்பட்டவர்களின் கால நேரத்திற்கும்,சூழ்நிலைக்கும் சம்பந்தப்பட்ட விஷயம்.இன்றைய இளைஞர்கள் மேல் உள்ளக்குற்றச்சாட்டே, அவர்கள் யாரையும் பற்றி யோசிக்காமல் தாங்கள் நினைத்ததை மட்டுமே செய்கிறார்கள் என்பதே!கேக் பாப்பாவாகட்டும்...பலூன் பாப்பாவாகட்டும்... யாருடைய குற்றச்சாட்டுக்கும் ஆளாகாமல் இந்த வயதில் தான் நினைத்ததைச் செய்ய முடியும்.செய்துவிட்டுப் போகட்டுமே! தொடங்கிய நல்ல காரியத்தைத் தந்தை தொடர வேண்டுகிறேன்! நன்றிகள்!!!

    ReplyDelete