Wednesday, June 1, 2016

பிலிப்பி

நாம ஒரு பக்கம் வண்டிய திருப்புனா, அது இன்னொரு பக்கம் போகுது! என்ற நிலை திருத்தூதர்கள் பவுலுக்கும், சீலாவுக்கும் கூட வருகின்றது.

பிலிப்பி நகரில் பவுலும், சீலாவும் பணி செய்துகொண்டிருக்கின்றனர் (காண். திப 16:16-40). குறி சொல்லும் ஆவியைக் கொண்டிருந்த ஓர் அடிமைப்பெண் இவர்களை யார் என்று அறிந்து, இவர்களின் அடையாளத்தை வெளிப்படுத்துகிறார்: 'இவர்கள் உன்னத கடவுளின் பணியாளர்கள். மீட்பின் வழியை உங்களுக்கு அறிவிக்கிறவர்கள்.' பவுல் மற்றும் சீலாவைப் பற்றிய நல்ல வார்த்தைகளே இவை என்றாலும், பவுல் கோபப்பட்டு இவரிடமிருந்து ஆவியை விரட்டி விடுகின்றார். ஆவி போய்விட்டதால் இவரை அடிமையாக வைத்து வேலை பார்த்து வந்த தலைவருக்கு வருவாய் போய்விட்டது. கோபமும், பொறாமையும் கொண்ட அவர், திருத்தூதர்களுக்கு எதிராக கலக்கம் உருவாக்க, பவுலும், சீலாவும் சிறையிடப்படுகின்றனர்.

சிறையிடப்பட்ட இரவில் இவர்கள் இறைவனைப் புகழ்ந்து பாடிக்கொண்டிருந்தபோது நிலநடுக்கம் ஏற்பட்டு, கதவுகள் உடைகின்றன. கைதிகள் தப்பித்திருக்கலாம் என நினைக்கிற சிறைத்தலைவர் தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்கிறார். 'நாங்கள் இங்கேதான் இருக்கிறோம்! உமக்குத் தீங்கு எதுவும் செய்து கொள்ளாதீர்!' என்று பவுல் ஆறுதல் சொல்ல, அவசர அவசரமாக வந்த அவர், 'பெரியோரே, மீட்படைய நான் என்ன செய்ய வேண்டும்?' என்கிறார்.

இதற்கிடையில் பவுலும், சீலாவும் போகலாம் என அறிவிக்கப்பட, 'உரோமைக்குடிமக்களை இப்படியா தொந்தரவு செய்வது?' என்று எதிர்கேள்வி கேட்கின்றார் பவுல்.

இவர்கள் உரோமைக்குடிகள் என்றவுடன் பதறியடித்து வந்த தலைமை அதிகாரிகள் இவர்களிடம் மன்னிப்பு வேண்டுகின்றனர்.

சிறைக்கதவுகள் திறந்திருந்தும் பவுலும், சீலாவும் ஏன் வெளியே போகவில்லை?

இதை நான் காந்தியின் அகிம்சை அல்லது சத்தியாகிரகத்தோடு ஒப்பிட விழைகிறேன்.

நம்மை அழிக்க நினைக்கும் எதிரியிடமிருந்து தப்பி ஓடாமல், நேருக்கு நேர் நின்று நம் உரிமை நிலைநாட்டப்படும் வரை இறங்கிவராமல் இருப்பதுதான் அது.

மேலும், திருத்தூதர்கள் தங்கள் வாழ்வில் முதன்மையானது என்பதை அறிந்து வைத்திருந்தனர். சிறையிலிருந்து தப்புவது முக்கிமல்ல. 'கதவு திறந்து கிடந்தது. நாங்கள் வந்தோம்' என சூழ்நிலைக் கைதிகளாக அவர்கள் தங்களை நினைக்கவில்லை. தப்பி ஓடாமல் இருந்ததால் சிறைக்காவலரின் குடும்பமே மனமாற்றம் அடையவும், தலைவர்கள் தங்கள் தவற்றை ஒப்புக்கொள்ளவும் செய்கின்றனர்.

வளைந்து கொடுக்காத இந்த தன்மாண்பு (self-respect) நமக்கு நல்ல பாடம்.


1 comment:

  1. ' தினம் ஒரு திருக்குறள்' எனும் பாணியில் திருத்தூதர் பணியைத் தினம் ஒரு அதிகாரமாக அலசி அதிலிருந்து நாம் வாழ்வாக்க முடிந்த விஷயங்களைப் பட்டியலிடும் தந்தைக்கு என் நன்றிகள்! அந்த வரிசையில் இன்று நாம் கற்க வேண்டிய பாடம் ...காந்தியின் அகிம்சாவழியில் நம் திருத்தூதர்கள் பவுலும்,சீலாவும் வாழ்ந்து காட்டிய ' தன் மாண்பு.' தப்பிக்க வழியிருந்தும் அதைச்செய்யாத திருத்தூதர் போன்றோருக்கு நம்மவர் சூட்டும் பெயர் ' வீம்பு', 'வறட்டு கௌரவம்', ' பிழைக்கத்தெரியாதவன்'. இருந்து விட்டுப் போகட்டுமே! நம்முடைய இப்படிப்பட்ட செயல் சில சந்தர்ப்பவாதிகளுக்கு வேண்டுமெனில் எரிச்சலை மூட்டலாம்.ஆனால் அதனால் பயனுறுபவர்கள் இருப்பாரெனில் நாம் பிழைக்கத்தெரியாதவர்களாக இருப்பினும் தப்பில்லை என்கிறது இன்றையப் பதிவு.சூழ்நிலைக்கேற்க வளைந்து கொடுக்கும் ' நாணலாய்' இருப்பதை விட்டு முறிந்தாலும் கவலையில்லை என்று நிமிர்ந்து நிற்கும் ' மூங்கிலாய்' இருப்போம்.
    ' தன் மாண்பு' எனும் புதிய வார்த்தையையும் அது நமக்குக் கற்றுக்கொடுக்கும் வாழ்க்கைப் பாடத்தையும் ' இன்றைய சிந்தனை'யாக முன் வைத்த தந்தைக்கு என் பாராட்டும்! நன்றியும்!!!

    ReplyDelete