Tuesday, June 21, 2016

நீதிமொழிகள் - 4

'பிள்ளாய்! விவேகத்தையும் முன்மதியையும் பற்றிக்கொள்.
இவற்றை எப்போதும் உன் கண்முன் நிறுத்திவை.
இவை உனக்கு உயிராகவும், உன் கழுத்துக்கு அணிகலனாகவும் இருக்கும்.
நீ அச்சமின்றி உன் வழியில் நடப்பாய்.
உன் கால் ஒருபோதும் இடறாது.
நீ படுக்கப்போகும் போது உன் மனத்தில் அச்சமிராது.
உன் படுக்கையில் நீ அயர்ந்து தூங்குவாய்.'

(நீமொ 3:21-24)

பள்ளிக்குழந்தைகளும் தூக்கத்திற்கு மருந்து எடுத்து தூங்கச் செல்லும் அளவிற்கு நம் மனமும், வேலையும் மாறிக்கொண்டு வரும் இந்நாட்களில், நன்றாகத் தூக்கம் வருவதற்கான மருத்துவக் குறிப்பைச் சொல்கின்றார் நீமொ நூல் ஆசிரியர்.

'விவேகம்' மற்றும் 'முன்மதி'

இவற்றை, 'ஞானம்' மற்றும் 'தேர்ந்து தெளிதல்' என்றும் மொழிபெயர்க்கலாம்.

இந்த இரண்டும் இருந்தால் என்னென்ன நடக்கும் நம் வாழ்வில்?

அ. அச்சம் இருக்காது நம் உள்ளத்தில்

ஆ. நாம் கால் இடறாமல் நடப்போம்

இ. நன்றாக அயர்ந்து தூங்குவோம்

'விவேகம்' மற்றும் 'முன்மதி' இரண்டும் ஏறக்குறைய ஒரே பொருள் கொண்டதாகவே இருக்கின்றது. இருந்தாலும் மிக முக்கியமான வித்தியாசம் இருக்கிறது.

'முன்மதி' என்பது நல்லது எது, தீயது எது என பகுத்தாய்ந்து, தேர்ந்து தெளியும் ஆற்றல். 'விவேகம்' என்பது அப்படி தேர்ந்து தெளிந்ததில் நன்மையானதைப் பற்றிக் கொண்டு தீமையானதை விட்டுவிடுவது.

இந்த இரண்டும் இல்லாதபோது நம் உள்ளத்தில் அச்சம் குடிகொள்கிறது.

'ஐயோ! நான் செய்தது சரியா?' 'நான் அப்படிப் பேசியிருக்கக் கூடாதா?' 'நான் ஏன் அப்படி நடந்து கொண்டேன்?' இப்படிப்பட்ட கேள்விகள் நாம் விவேகம் அல்லாமல், வெறும் வேகத்தோடு செயல்பட்டதால் வருபவை. முன்மதி பல நேரங்களில் தேவையற்றை ஒன்றாகக் கருதப்படுகிறது. அல்லது இன்றைய நம் ஓட்டத்தில் நின்று நிதானமாக முடிவெடுப்பதற்கு நேரம் இல்லாமல் இருக்கிறோம்.

நன்மை எது, தீமை என பகுத்தாய்வது பிறருக்கு பயன் தருகிறதோ இல்லையோ, அப்படி செய்வது நமக்கு நல்ல தூக்கத்தையாவது கொடுக்கும்.

அரசனுக்கு அறிவுறுத்தும் வள்ளுவப் பெருந்தகையும்,

'தேறற்க யாரையும் தேராது தேர்ந்தபின்
தேறுக தேறும் பொருள்' (குறள் 509) என்றும்

அதாவது, யாரையும் ஆராயமல் தெளியக்கூடாது. ஆராய்ந்து கண்ட ஒருவரை முழுமையாக நம்ப வேண்டும்.

'நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த
தன்மையான் ஆளப் படும்' (குறள் 511) என்றும் சொல்கின்றார்.

நன்மை எது தீமை எது என ஆராய்ந்து அறிந்த, நற்செயலில் மட்டுமே நாட்டம் கொண்டவர்கள், எப்பணியினையும் ஆற்ற தகுதி பெற்றவர்கள்.

எனக்கு இப்பவே தூக்கம் வருது...

இன்னும் சொல்வேன்...

1 comment:

  1. எனக்காகவே தரப்பட்ட ஒரு பதிவு போல உணர்கிறேன். ஒரு சிறிய சலனம் போதும்....விடிய விடிய என் கண்கள் மூட மறுத்த நாட்கள் அநேகம்.நான்கு நற்செய்திகள் நமக்குக் கொடுக்கப்பட்ட அளவிற்கு ஏன் இந்த நீதிமொழி நூலில் வருவது போன்ற வாழ்க்கையின் நியதிகளுக்கு நமக்கு முக்கியத்துவம் தரப்படவில்லை எனும் கேள்வி என்னுள் எழுகிறது.' ஞானம்' மற்றும் ' தேர்ந்து தெளிதல்' உள்ளவர்களுக்கு வாழ்வு தரும் வரம் என்ன?" அச்சம் இருக்காது நம் உள்ளத்தில்; கால்கள் இடறாமல் நடப்போம்; நன்றாக அயர்ந்து தூங்குவோம்." இதற்கு மேல் என்ன தேவை இருக்க முடியும் ஒருவனுக்கு?
    வேகம் பல நேரங்களில் விவேகத்தைத் தோற்கடிப்பதுதான் நம் அனைத்து இன்னல்களுக்கும் காரணம் என்பதைப் புரிந்து கொள்வதும், வாழ்வில் 'நீ மட்டும் போதும்' என்று இறைவனிடம் சரணாகதி அடைவதும் மட்டுமே நிரந்தர மகிழ்ச்சிக்கும், ஏன் நிம்மதியான தூக்கத்திற்கும் வழிவகுக்கும் என்பதை தெய்வப்புலவரும் சொல்லிச் சென்றிருக்கிறார். சொல்வது எளிது தான்; ஆனால் செயலென்று வரும்போது?! ம்ம்ம்.....தந்தைக்குத் தூக்கம் வருகிறதாம்.'விவேகமும்', 'முன்மதியும்' அவருடன் இருப்பதை சொல்லாமல் சொல்கிறார்.மகிழ்ச்சியே! அருமையான, அனைவருக்கும் பயன்தரக்கூடியதொரு பதிவிற்காகத் தந்தைக்கு என் பாராட்டுக்கள்!!!

    ReplyDelete