Saturday, June 25, 2016

நீதிமொழிகள் - 8

ஆண்டவர் வெறுப்பவை ஆறும், ஒன்றும் என ஏழு விடயங்களை முன்வைக்கின்றார் ஆசிரியர் (நீமொ 6:16-19)

1. இறுமாப்புள்ள பார்வை
2. பொய்யுரைக்கும் நாவு
3. குற்றமில்லாரைக் கொல்லும் கை
4. சதித்திட்டங்களை வகுக்கும் உள்ளம்
5. தீங்கிழைக்க விரைந்தோடும் கால்
6. பொய்யுரைக்கும் போலிச்சான்று
7. நண்பர்களிடையே சண்டை மூட்டிவிடும் செயல்

ஆண்டவர் வெறுப்பவை ஏழு என்று சொல்வதற்குப் பதிலாக, 'ஆண்டவர் வெறுப்பவை ஆறு. ஏழாவது ஒன்றும் அவரது வெறுப்புக்கு உரியது' (6:16) என்கிறார் ஆசிரியர்.

இது ஒரு இலக்கிய நடை. கேட்பவரின் கேட்கும் திறனை தன்வயப்படுத்தும் ஒரு முயற்சியே இது.

இதில் குறிப்பிடப்படும் முதல் விடயத்தைப் பார்ப்போம்:
'இறுமாப்புள்ள பார்வை'

ஒருவரின் உள்ளத்தில் இருக்கும் ஆணவம் அல்லது இறுமாப்பு அவரின் பார்வையில்தான் வெளிப்படுகிறது. 'என் பார்வையே அப்படித்தான்!' என்று சிலர் சொல்வார்கள். 'கண்தான் உடலுக்கு விளக்கு' என்று சொல்வதன் பொருள் இதுவே. அதாவது, நம் கண்கள் வழியாகவே நாம் யார் என்பதை மற்றவர்களுக்குக் காட்டுகிறோம். பார்வையை நாம் இரக்கப் பார்வை, ஏளனப் பார்வை, கருணைப் பார்வை, கண்டுகொள்ளாப் பார்வை என வயப்படுத்துகிறோம்.

'என்னைவிட பெரியவர் யாரும் இல்லை' என்ற உணர்வு மட்டும் இறுமாப்பு அல்ல. மாறாக, அடுத்தவருக்கு தன் உள்ளத்தை பூட்டிவிடுவதும் இறுமாப்பே.

இன்னும் சொல்வேன்...

1 comment:

  1. ஆண்டவர் வெறுக்கும் இந்த ஏழு விடயங்களை மனிதனும் வெறுக்கிறான் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.இதில் விசேஷமாகத் தந்தை குறிப்பிடும் 'இறுமாப்புள்ள பார்வை' என்பது ஒரு மனிதனைத் தன்னை விட சிறந்தவன் எவனுமில்லை என்று நினைக்கவைக்கும் எண்ணமே! இந்த எண்ணம் தான் லூசிஃபேரை ஒரு வானகத்தூதர் நிலையினின்று கீழே தள்ளியது.ஆமாம்! கண்தான் உடலுக்கு விளக்கு! அப்படியெனில் 'இரக்கப்பார்வை ' ஒன்றையே இவ்வையகத்துக்குக் கொடுக்கலாமே! 'என்னைவிடப் பெரியவர் யாரும் இல்லை' எனும் நினைப்பு மட்டும் இறுமாப்பு அல்ல; மாறாக அடுத்தவருக்குத் தன் உள்ளத்தைப் பூட்டி வைப்பதும் இறுமாப்பே..... தந்தையின் ஆணித்தரமான வார்த்தைகள் நம் உள்ளத்தை ' அன்பு' ' இரக்கம்' எனும் சாவி கொண்டு அடுத்தவருக்குத் திறந்து விட உதவட்டும்.தந்தைக்கு நன்றிகள்! அனைவருக்கும் ஞாயிறு வணக்கங்கள்!!!

    ReplyDelete