Thursday, June 2, 2016

ஏதென்சு

'ஏதென்சு நகரத்தார் அனைவரும், அங்குக் குடியேறி வாழ்ந்துவந்த அன்னியரும் இதுபோன்ற புதிய செய்திகளைக் கேட்பதிலும் சொல்லுவதிலும் மட்டுமே தங்கள் நேரத்தைப் போக்கினர்' (திப 17:21)

'ஒருவர் இரண்டு மொழிகளைத் தெரிந்திருந்தால் அவர் இரண்டு உலகங்களை அறிந்தவர்' என்பது சொலவடை.

மொழிதான் நம் எண்ணங்களின் வாய்க்கால். எனக்கு வெளியே இருப்பவரையும், எனக்கு வெளியே இருக்கும் உலகத்தையும், என்னையும் இணைப்பது மொழியே.

எபிரேயத்தில் புலமை பெற்ற பவுல் கிரேக்கம் மற்றும் இலத்தீனும் அறிந்தவராக இருந்திருக்க வேண்டும். ஆகையால்தான் எல்லா இடங்களுக்கும் எளிதாக செல்லவும், எல்லா மக்களோடும் எளிதாக உரையாடவும் அவரால் முடிகிறது.

பவுல் ஏதென்சில் ஆற்றிய உரையை நாம் திப 17:16-34ல் வாசிக்கின்றோம்.

பவுல் ஏதேன்சு நகரில் உள்ள எல்லா ஆலயங்களையும் சுற்றி வருகின்றார். 'யாரும் அறியாத கடவுளுக்கு' என்ற ஒரு பலிபீடத்தை அங்கே காண்கின்றார். அதை மையமாக வைத்து தன் உரையைத் தொடங்குகின்றார்.

திருத்தூதர் பணிகள் நூலில் நாம் திருத்தூதர்களை மட்டுமல்ல. அவர்கள் சந்தித்த மக்கள் மற்றும் இடங்கள் பற்றியும் அறிந்து கொள்கின்றோம்.

ஏதென்சு மக்களிடம் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கியமான ஒன்று:

'புதியவற்றை ஏற்றுக்கொள்வது' அல்லது 'புதியவற்றைத் தெரிந்து கொள்ள ஆவலாய் இருப்பது'

நிக்கோலினா என்ற ஒரு பாட்டியை அவரது இல்லத்தில் கொண்டு விடுவதற்குச் சென்றிருந்தேன். அவருக்கு வயது 87. உள்ளே சென்ற அடுத்த நொடி தான் வாசித்துக் கொண்டிருந்த ஒரு புத்தகத்தை எடுத்து வந்து எனக்குக் காட்டினார். ஆங்கிலத்தில் எழுதப்பட்டு இத்தாலியனுக்கு மொழிபெயர்க்கப்பட்ட புதினம் அது. ஒன்றை ஆங்கிலத்தில் சொல்வதற்கும், இத்தாலியனில் சொல்வதற்கும் எவ்வளவு வித்தியாசம் இருக்கிறது, ஒரு உணர்வை பதிவு செய்வதில் மொழிகள் எப்படி வேறுபடுகின்றன என சொல்லிக்கொண்டே போனார் நிக்கோலினா. எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. புதியதை கற்றுக்கொள்ள குழந்தை உள்ளம் மட்டும் போதும் என்று நான் உணர்ந்தேன்.

அந்தக் குழந்தை உள்ளம் ஏதென்சில் உள்ளவர்களிடம் இருந்தது.

2 comments:

  1. சிறிது காலத்திற்கு முன்பு வரை உடை,நகை,மனை,ஊர்திகள் இவற்றை சேர்ப்பதில் ஆர்வம் காட்டி வந்த நம் மக்கள் இன்று அதிலும் முக்கியமாக இளம் தலைமுறையினர் பல புதிய நாடுகள்,ஊர்கள்,இடங்கள் இவற்றைச் சுற்றிப் பார்ப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர்.வரவேற்கத்தக்க மாற்றமே! இதற்கான ஆர்வத்தைக் கொடுப்பது புத்தகங்களே. தந்தையின் வார்த்தைகளில் சொல்லப் போனால் நம் கண்களின் நீட்சிதான் இந்தப்புத்தகங்கள்.நாம் 'புதியவற்றை ஏற்றுக்கொள்வதற்கும்', ' புதியவற்றைத் தெரிந்து கொள்ள ஆவலைத் தூண்டுவதற்கும்' காரணங்களே இந்தப்புத்தகங்கள்தான். இப்படி புதியவற்றைத் தெரிந்துகொள்ளும் பயணத்தில் 87 வயதுக்குழந்தை நிக்கோலினாப் பாட்டியை முன்னுதாரணமாய்க் காட்டுகிறார் தந்தை. பின்பற்ற வேண்டிய பெண்மணி. நம்முடைய திருத்தூதர்கள் 'இறை அனுபவம்' மட்டுமின்றி , ' உலக அனுபவங்களையும்' சேர்த்தே நமக்குப் புகட்டிச் சென்றுள்ளனர் என்பது ஆறுதலான விஷயம்.ஒரு புது மொழியைக் கற்றுக்கொள்ள இன்றையப் பதிவு நம்மைத் தூண்டினால் அதை செயலாக்குவோம்.நல்லதொரு ஆவலைத்தூண்டும் விஷயத்திற்காகத் தந்தைக்கு ஒரு ' டிக்' போடலாமே!!!

    ReplyDelete
  2. With a child like heart... you are open minded and you tend to learn new things... good reflection with respect to people of Athens...

    ReplyDelete