Friday, June 24, 2016

நீதிமொழிகள் - 7

'சோம்பர் என்பவர் தேம்பித் திரிவர்'

அதாவது, 'சோம்பேறிகள் வறுமையில் வாடித் திரிவர்' என்கிறது ஒளவைப் பாட்டியின் கொன்றை வேந்தன் (எண். 36).

திருவள்ளுவர் 'மடியின்மை' என சோம்பல் நீக்குதலுக்கு ஒரு அதிகாரத்தையே ஒதுக்கியுள்ளார் (எண். 61).

சோம்பலை இருள் என்று சொல்லும் தெய்வப்புலவர்,

'நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
கெடுநீரார் காமக் கலன்' (குறள் 605)

('காலம் தாழ்த்துதல், மறதி, சோம்பல், அளவுக்கு மீறிய தூக்கம் ஆகிய நான்கும், கெடுகின்ற ஒருவர் விரும்பியேறும் தோணிகளாகும்)

'இடிபுரிந் தௌ;ளுஞ்சொற் கேட்பர் மடிபுரிந்து
மாண்ட உஞற்றி லவர்' (குறள் 607)

('முயற்சி செய்வதில் அக்கறையின்றி சோம்பேறிகளாய் வாழ்பவர்கள் இகழ்ச்சிக்கு ஆளாவர்கள்)

என்கிறார்.

'சோம்பேறியாயிராதே' (6:6-11) என்னும் நீதிமொழிகள் நூல் ஆசிரியரின் படிப்பினையும் இதையொட்டியே இருக்கிறது.

கடின உழைப்பு என்பது ஞானிகளின் செயல்முறை என முன்வைக்கும் ஆசிரியர் தொடர்ந்து, 'எறும்பை' உதாரணமாக முன்னிறுத்துகின்றார். 'எறும்புகளுக்கு தலைவனுமில்லை. கண்காணியுமில்லை. இருந்தாலும் வேலை செய்கின்றன.'

நம் சோம்பலுக்கு முதற்காரணம் நம்மைக் கேள்வி கேட்க அல்லது நம்மை கண்காணிக்க யாரும் இல்லை என்ற நிலைதான். எனக்குச் செய்ய ஒன்றுமில்லை, அல்லது என்னை ஒன்றும் செய்ய முடியாது என்ற எண்ணம் ஒருவருக்கு வந்தால் அவரின் நடுவீட்டில் சோம்பல் வந்து படுத்துக்கொள்ளும்.

ஆகையால்தான் தான் வள்ளுவரும் சோம்பல் பற்றி எழுதும் அதிகாரத்தை 'அரசனுக்குச் சொல்லும் அறிவுரையின்' ஒரு பகுதியாக வைக்கின்றார். 'என்னை யாரும் கேட்க முடியாது' என்று நினைக்கும் அரசன் சோம்பேறியாய் இருந்துவிட்டால் அது அவனுக்கு பெரிய இழுக்கை வருவிக்கும்.

கடின உழைப்பு. இதற்கு எதிர்ப்பதம் சோம்பல்.

உழைப்பு நம்மை முன்னேறிச் செல்ல வைக்கிறது. சோம்பல் நம்மை பின்னோக்கி இழுக்கிறது.

சோம்பல் கொண்டிருப்பவர்களை வறுமை எப்படி பற்றிக் கொள்ளுமாம்?

அ. வழிப்பறி கள்வரைப் போல - அதாவது, திடீரென்று
ஆ. போர்வீரனைப் போல - அதாவது, முழுமையாக, தப்பிக்க வழியில்லாமல்

காலையில் அலாரம் அடிக்கும்போது, கை நம்மை அறியாமல் ஸ்னூஸ் பட்டன் நோக்கி செல்கிறது என்றால், நம் நடுவீட்டிற்கும் சோம்பல் வந்துவிட்டான் என்றே அர்த்தம்.

இன்னும் சொல்வேன்...

2 comments:

  1. எதார்த்தத்தை அப்படியே அதன் போக்கில் எடுத்து வைக்கும் ஒரு பதிவு. சோம்பித் திரிபவனின் இழிநிலையையும்,உழைப்பாளியின் உயர்வையும் நமக்குப் புரியவைக்க ஔவைப் பிராட்டியாரையும்,திருவள்ளுவரையும்,நீதிமொழி நூலையும் மட்டுமின்றி ' சிற்றெறும்பையும்' துணைக்கழைக்கிறார் தந்தை.யாரிடம் கற்றுக்கொள்கிறோம் என்பதைவிட,எதைக்கற்றுக்கொள்கிறோம் என்பதே முன்வைக்கப்படுகிறது." காலந்தாழ்த்துதல்,மறதி,சோம்பல்,அளவுக்கு மீறிய தூக்கம் ஆகிய நான்கும் கெடுகின்ற ஒருவர் விரும்பியேறும் தோணிகளாகும்." சோம்பலின் விளைவை எடுத்துச்சொல்ல இதற்குமேல் வார்த்தைகள் தேவையில்லை எனத் தோன்றுகிறது."எனக்கு நான் தான் தலைவன்,கண்காணிப்பாளன் " எனும் எண்ணம் மட்டுமே ஒருவனுடைய உழைப்புக்கும்,சுறுசுறுப்பிற்கும் துணை நிற்கும்.தன் அனுபவத்தையே வார்த்தைகளாய் வடித்திருக்கும் தந்தைக்கு என் பாராட்டுக்கள்!!!

    ReplyDelete
  2. Interesting article... with nice quotes...

    ReplyDelete