Saturday, June 4, 2016

கொரிந்து

இரவில் ஆண்டவர் பவுலுக்குக் காட்சியில் தோன்றி, 'அஞ்சாதே! பேசிக்கொண்டேயிரு! நிறுத்தாதே. ஏனெனில், நான் உன்னோடு இருக்கிறேன். எவரும் உனக்குத் தீங்கிழைக்கப் போவதில்லை. இந்நகரத்தில் எனக்குரிய மக்கள் பலர் இருக்கின்றனர்' என்று சொன்னார்.
(திப 18:9-10)

நேற்று திருத்தந்தை அவர்கள் தலைமையில் அருள்பணியாளர்களின் யூபிலி கொண்டாட்டம் தூய பேதுரு சதுக்கத்தில் நடைபெற்றது. நேற்றைய தினம் திருஇருதய ஆண்டவரின் திருநாள் என்பதால் 'ஆயன் காணாமற்போன ஆட்டைத் தேடிச்செல்லும் உவமை' நற்செய்தியாக வாசிக்கப்பட்டது. அந்த உவமையையும், அருள்பணியாளரின் வாழ்வையும் இணைத்துப் பேசிய திருத்தந்தை பின்வருமாறு சொன்னார்:

'இயேசுவின் இதயத்தை ஒட்டியே அருள்பணியாளரின் இதயமும் இருக்க வேண்டும். ஒரு ஆடுதானே. போனால் போகட்டும். 99 சதவிகிதம் கைவசம் இருக்கிறதே என்று ஓய்ந்துவிடக்கூடாது. காணாமல் போன ஆட்டைத் தேட வேண்டும். அந்தத் தேடல் எளிதன்று. வெயிலையும், கரடு முரடான பாதையையும் பொறுத்துக்கொள்ள வேண்டும். கண்களை அயர விடாமல் தேட வேண்டும். சில வேளைகளில் அந்த ஆடு ஆயனோடு வர மறுத்து, அந்த ஆயனுக்கு எதிராக பாயலாம். அதையும் அவர் எதிர்கொள்ள வேண்டும். ஆக, நம் பணியில் 50 அல்லது 60 சதவிகிதம் தேர்ச்சி கிடைத்தது என தேங்கிவிடல் கூடாது.'

கொரிந்து நகரில் ஆண்டவர் பவுலுக்குத் தோன்றி ஆறுதல் சொல்லும் நிகழ்விலும் திருத்தந்தையின் வார்த்தைகளையே நான் பார்க்கின்றேன்:

அ. 'அஞ்சாதே!' 'நிறுத்தாதே!' என கட்டளையிடுகின்றார் ஆண்டவர். ஆக, என் பணிக்கு மக்கள் எப்படி செவிகொடுக்கிறார்கள் என்பதைப் பொறுத்து என் பணி சுருங்கி விடக்கூடாது. 'யாரும் கோவிலுக்கு வருவதில்லை, வருபவர்கள் நான் சொல்வதைக் கேட்பதில்லை' என்றுகூட தளர்ந்துவிடக்கூடாது. ஏனெனில் அருள்பணியாளரோடு உடனிருப்பவர் ஆண்டவரே.

ஆ. 'எனக்குரிய மக்கள்'. ஆண்டவர் கொரிந்து நகர மக்களை 'என் மக்கள்' என அழைக்கின்றார். ஆக, ஓர் அருள்பணியாளர் எப்போதும் தன் பங்குத்தள மக்களை 'ஆண்டவரின் மக்கள்' என்றும், 'தான் ஒரு கண்காணிப்பாளர்' என்பதை மட்டுமே கருத்தில் கொள்ள வேண்டும். இப்படி எண்ணுவது மிகப்பெரும் மனச்சுதந்திரத்தை அருள்பணியாளருக்குக் கொடுக்கும்.

இ. 'காட்சி கண்டார் பவுல்.' இன்று ஏன் காட்சிகள் வருவதில்லை? பவுலுக்கு ஆண்டவரே காட்சி கொடுத்தாரா? அல்லது பவுல் தன் மனத்தின் ஆழத்தில் தனக்குத் தானே ஊக்கம் கொடுத்துக்கொண்டாரா? அல்லது கொரிந்து நகரின் நல்ல உள்ளம் ஏதாவது ஒன்று கடவுளின் குரலாக பவுலுக்கு ஆறுதல் தந்ததா?

1 comment:

  1. திருத்தந்தையின் ' நல்லாயன்' உவமையின் விளக்கத்தை ஒரு ' அருள் பணியாளரின்' வாழ்க்கையோடு ஒப்பிட்டிருப்பது எந்த அருள்பணியாளரையும் யோசிக்க வைக்கக்கூடியது.கூர்ந்து பார்த்தால் இது ' குடும்பத்தலைவர்களுக்கும்' கூடப் பொருந்தக்கூடியது. மந்தையை விட்டு விலகும் ஆடுகள் பங்குகளில் மட்டுமில்லை; குடும்பங்களிலும் இருக்கிறார்கள்.தன்னிடம் இருப்பதைப் பற்றிப் பெருமை கொள்ளாமல்,தான் இழந்தது பற்றிக் கவலைப் படுபவன் தான் ஒரு தகப்பனாகத், தலைவனாக இருக்க இயலும்.தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட மக்களை " எனக்குரிய மக்கள்", " என் மக்கள்" என்று ஏற்க ஒரு பரந்த மனது வேண்டும். அந்த மனதுக்குரியவர்களுக்குத்தான் " அஞ்சாதே! நான் உன்னுடன் இருக்கிறேன்" என இறைவன் கூறுவதையும் கேட்க இயலும். இன்றும் பலருக்குக் காட்சிகள் வரலாம்; இறைவனும் பலரிடம் பேசலாம். ஆனால் நம்மைச் சுற்றியுள்ள ஆரவாரங்களின் மத்தியில்,நம் மனங்களை ஆக்கிரமித்துள்ள இரைச்சலின் நடுவில் நமக்குத்தான் காட்சிகளைக் காணவும்,அவர் குரலைக்கேட்கவும் நேரம் ஒதுக்க முடிவதில்லை என்பது நாம் ஒத்துக்கொள்ள வேண்டிய கசப்பான உண்மை.இன்றைய வாழ்க்கைச் சூழலின் நிலையறிந்து தந்த அழகானதொரு பதிவிற்காகத் தந்தைக்கு நன்றிகள்! அனைவருக்கும் ' ஞாயிறு' வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete