Tuesday, May 31, 2016

ஆற்றங்கரை

அலங்கரிக்கப்பட்ட அரங்கங்களிலும், தூய்மையான ஆலயங்களில் நடக்கவில்லை திருத்தூதர்களின் தூதுப்பணி.

ஆற்றங்கரைகளிலும், காற்றுத் தூசியிலும் தான் நடந்தேறியது.

பிலிப்பி நகருக்கு வெளியே இருந்த ஆற்றங்கரை ஒன்றில் பவுல் போதிக்கும் நிகழ்வை நாம் திப 16:11-15ல் வாசிக்கின்றோம். ஆற்றங்கரையில் இருந்த பெண்கள் கூட்டம் அவரின் போதனைக்குச் செவிகொடுக்கிறது. துணி துவைத்துக் கொண்டிருந்தவர்கள், குளித்துக் கொண்டிருந்தவர்கள், தங்கள் குழந்தைகளைக் குளிப்பாட்டிக் கொண்டிருந்தவர்கள், ஆடு மாடுகளுக்கு தண்ணீர் வைத்துக் கொண்டிருந்தவர்கள், தங்கள் வீட்டின் பெரிய பாத்திரங்களைக் கழுவிக் கொண்டிருந்தவர்கள், குளிக்கவா-வேண்டமா என ஆற்றையும், கரையையும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தவர்கள் என எல்லாரும் பவுலின் குரலுக்குச் செவிகொடுத்திருப்பார்கள்.

இவர்களில் 'லீதியா' என்ற பெண்ணைப் பற்றி எழுதுகின்றார் லூக்கா.

இவர் ஒரு வியாபாரி. 'செந்நிற ஆடைகளை விற்றுக்கொண்டிருந்தவர்' என லூக்கா எழுதுகிறார். நம்ம ஊர் நல்லி சில்க்ஸ் உரிமையாளர் என்ற அளவில் எடுத்துக்கொள்ளலாம். இவர் செய்த வேலையிலிருந்து, பெண்கள் அக்கால சமுதாயத்தில் பெற்றிருந்த அங்கீகாரம், மதிப்பு மற்றும் தன்மதிப்பையும் அறிந்துகொள்ள முடிகிறது.

இவர் வைத்த கண் வாங்காமல் பவுலையே பார்த்துக்கொண்டிருக்கிறார்.

திறந்த உள்ளம் கொண்ட இவரை கடவுள் மனம் மாற்றுகிறார். வீட்டோடு திருமுழுக்கு பெறுகின்றார். திருமுழுக்கு அவர் இருந்த ஆற்றங்கரையில்தான் நடந்திருக்க வேண்டும். மெழுகுதிரி, ஞானப்பெற்றோர், கிறிஸ்மா, ஆயத்த எண்ணெய், வெள்ளை ஆடை, ஃபோட்டோகிராஃபர் என எந்த ஆடம்பரமும் இல்லாமல் நடந்தேறுகிறது லீதியாவின் திருமுழுக்கு.

ஆக, ஆற்றங்கரையும் கூட இறைவனை அறிந்து கொள்ளும், அறிவிக்கும் தளமாக இருக்கிறது.

இறைவனின் வார்த்தையைத் தன் உள்ளத்தில் ஏற்றுக்கொண்ட லீதியா, திருத்தூதர்களைத் தன் இல்லத்தில் ஏற்றுக்கொள்கின்றார்.

'...அவற்றுக்குச் சொல்லுமில்லை. பேச்சுமில்லை. அவற்றின் குரல் செவியில் படுவதுமில்லை.
ஆயினும், அவற்றின் அறிக்கை உலகெங்கும் சென்றடைகின்றது.
அவை கூறும் செய்தி உலகின் கடையெல்லைவரை எட்டுகின்றது.'
(திபா 19:3-4)

2 comments:

  1. இப்பொழுதெல்லாம் தந்தையின் எழுத்தில் எளிமையும்,எதார்த்தமும் கொப்பளிப்பதை உணரமுடிகிறது.எந்த முன்னேற்பாடோ,ஆர்ப்பாட்டமோ இன்றி தங்களின் அன்றாட வேலைகளுக்கிடையில் பவுலின் போதனையைக் கேட்டுக்கொண்டிருந்த மக்களைப்பற்றியும்,' செந்நிற ஆடை' விற்றுக்கொண்டிருந்த ' லீதியா' எனும் பெண் திருமுழுக்கு பெறும் விதம் பற்றியும் தந்தை விவரிக்கும் விதமே அதற்குச் சான்றுகள். " ஆற்றங்கரையும் கூட இறைவனை அறிந்து கொள்ளும்,அறிவிக்கும் தளமாக இருக்கிறது.".... இந்த வரிகளைத் தந்தை 19 ம் திருப்பாடலுடன் கோர்த்திருப்பது நம்மை யோசிக்க வைக்கிறது. இறைவனின் ' வாயில்லா'ப்படைப்புகள் இறைவனின் செய்தியை, புகழைப் பறைசாற்றிக்கொண்டிருக்க வாயுள்ள மனிதன் என்ன செய்கிறான்? இந்தக் கேள்விக்கான பதிலைத்தேடுவோம்; இறைவார்த்தையின் தூதுவர்களாவோம். அழகான பதிப்பிற்காகத் தந்தைக்கு ஒரு 'சபாஷ்!'

    ReplyDelete
  2. Thanks for this thought ... each day's blog is refreshing... kudos n praise to God for using you mightily in breaking n sharing His words...

    ReplyDelete