Thursday, June 16, 2016

மால்தா

மால்தாவின் கரையில் ஒதுங்குகின்றனர் பவுலும், அவர் உடன் வந்தவர்களும்.

'மால்தா மக்கள் மிக்க மனிதநேயத்துடன் நடந்துகொண்டனர்' என எழுதுகின்றார் லூக்கா.

மழைபெய்து குளிராயிருந்த ஒரு மாலை வேளையில் தீமூட்டி குளிர் காய்கின்றனர் அம்மக்கள். அவர்களுடன் போய் உடன் அமர்கின்றார் பவுல். இவரும் சேர்ந்து சுள்ளிகளைப் போட்டுக் கொண்டிருந்தபோது, ஒரு விரியன் பாம்பு ஒன்று இவரின் கையைக் கவ்விக்கொள்கின்றது. 'இவன் ஒரு கொலைகாரன். தெய்வம் தண்டித்துவிட்டது' என குற்றம் சொன்ன மக்கள், பவுலுக்கு எதுவும் நேராததால், 'நீரே தெய்வம்' என மாற்றிப் போடுகின்றனர் தட்டை.

மேலும், அங்கிருந்தவர்களில் நலமற்றவருக்கு நலம் தருகின்றார் பவுல்.

மால்தா மக்கள் இவர்களுக்கு மதிப்பு அளித்து பல கொடைகளையும் தந்தார்கள். மேலும், கப்பல் பயணத்திற்கு தேவையான அனைத்து பொருள்களையும் கொடுத்தார்கள்.

ஒன்றுமே இல்லாமல் வெறுங்கையராய் மால்தா மண்ணில் அடியெடுத்து வைத்தவர்கள் கைகள் அவர்கள் வெளியேறும்போது நிரம்பி வழிகின்றன.

சில நேரங்களில் நம்மிடம் வெறுங்கைதான் இருக்கிறது என்றாலும், துணிந்து முன்சென்றால் நம் கைகள் நிரப்பப்பட்டு விடும்.

மால்தா மக்களின் மனிதாபினம் நமக்கு நல்ல பாடம்.

இந்த வார ஆனந்தவிகடனில் பேருந்தில் கேசட் போட்டு இசை கேட்கும் வழக்கம் பற்றி துணுக்கு ஒன்று வெளியாகியுள்ளது.

'கேசட்டில் சில பாடல்களை மட்டுமே பதிவு செய்ய முடியும் என்பதால், மிகவும் யோசித்து, முடிவெடுத்து, தேர்ந்தெடுத்து பாடல்களை பதிவு செய்தனர் பேருந்து நடத்துனர்கள்.

ஆனால், இன்று விரல் நுனி அளவு சிப்பில் ஆயிரக்கணக்கான பாடல்களை அடைத்துவிட முடிகிறது. ஆகையால்தான் நாம் தேவையானவை, தேவையற்றவை, பிடித்தவை, பிடிக்காதவை என அத்தனையையும் போட்டு நிரப்பி விடுகிறோம்!'

இது நம் இன்றைய வாழ்க்கை முறையிலும் பிரதிபலிக்கிறது.

மால்தா மக்கள் எது தேவையோ அதற்கு மட்டும் முக்கியத்துவம் தந்தனர்.

ஆனால் இன்று தேவையில்லாத பலவற்றை நாம் போட்டு அடைத்துவிட்டதால், தேவையானவற்றைப் பிரித்துப் பார்க்க நேரம் கூட இல்லாமல் அலைந்து கொண்டிருக்கிறோம்.

1 comment:

  1. " உங்கள் தேவை என்னவென்று அறிந்திருக்கிற விண்ணகத்தந்தை நீங்கள் கேட்கும் முன்னரே அதை உங்களுக்குக் கொடுத்துவிடுவார்." இந்த விவிலிய வார்த்தைகளுக்கு அர்த்தம் சேர்க்கின்றன மால்தா மக்களின் தாராள மனமும், அதைக் கைநீட்டிப் பெற்றுக்கொள்ளும் பவுலின் உள்ளமும்.இன்றைய வாழ்க்கை நம் தேவைகளை அதிகப்படுத்தியிருப்பது உண்மையே! நம் தேவைகள் கையளவா,கடலளவா...நாம் தான் முடிவு செய்ய வேண்டும்.இது பொருட்களுக்கு மட்டுமல்ல; நம் உள்ளத்து உணர்வுகளுக்கும் கூடத்தான்.தேவையானதை மட்டுமே வைத்துக்கொண்டு தேவையற்ற குப்பைகளைக் களைவது மட்டுமே நம் நிலைத்த மகிழ்ச்சிக்கு வழி வகுக்கும். இன்றையத் தேவை கருதித் தந்ததொரு பதிவிற்காகத் தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete