Sunday, June 26, 2016

நீதிமொழிகள் - 9

'பழமொழிகள்' நமக்குப் பிடிக்கின்றன. அல்லது 'பழமொழிகள்' நம்மைப் பிடிக்கின்றன.

பழமொழிகள் நமக்குப் பிடிக்கக் காரணங்கள் இரண்டு: ஒன்று, அவைகள் மிகக் குறைவான வார்த்தைகளைப் பயன்படுத்துபவை. 'கந்தை ஆனாலும் கசக்கிக் கட்டு' என்பது பழமொழி. இதை சாதாரணமாக ஒருவர் சொன்னால், 'நாம் வைத்திருக்கும் ஆடை கிழிந்து போய் இருந்தாலும் அதை துவைத்து அல்லது சலவை செய்து கட்ட வேண்டும். ஏனெனில் உடை சுத்தமாக இருத்தல் அவசியம்' என நீண்ட பத்தியை எழுது வேண்டியிருக்கும். நீண்ட பத்தியில் சொல்ல வேண்டியதை ஓரிரு வார்த்தைகளில் சுருக்கிச் சொல்லிவிடுவதால் பழமொழிகள் நமக்குப் பிடிக்கின்றன. இரண்டு, அவைகள் தன்னகத்தே கொண்டிருக்கும் முரண் பொருள். 'கந்தையானால் அதை தூக்கி வீசி விடு!' என்று ஒருவர் சிந்திக்க நினைக்கும் போது, பழமொழி 'கசக்கிக் கட்டு' என்ற ஒரு முரண்பொருளை முன்வைத்துவிடும் பழமொழியின் குணம் நமக்குப் பிடிக்கிறது.

இந்தப் பழமொழிகளை உருவாக்கியது யார்?

இவைகளை உருவாக்கியது தனிநபரா? அல்லது இவை அனைத்தும் ஒரு சமூகத்தின் உருவாக்கங்களா?

இவைகள் தனிமனித உள்ளத்தில் இருந்த எழுந்தவையா? அல்லது

இவைகள் ஒருவரின் தனிப்பட்ட அனுபவங்களின் வெளிப்பாடா?

பழமொழிகள் இந்தக் கேள்விகளுக்கு விடை தராமல் இருப்பது இன்னும் நம்மை அவற்றின் பக்கம் இழுக்கின்றது.

கற்பு, நேர்மை, கடின உழைப்பு என வௌ;வேறு தலைப்புக்களில் பேசிக்கொண்டுவந்த ஆசிரியர் அதிகாரம் 10 முதல் தனித்தனி பழமொழிகளாகப் பேச ஆரம்பிக்கின்றார். நேர்மை, கற்பு, கடவுள் பக்தி, செல்வம் ஈட்டுதல், பெண், ஆண், முயற்சி என தலைப்புகள் வேகமாக மாறுகின்றன. ஒரு பழமொழிக்கும் அடுத்த பழமொழிக்கும் தொடர்பு இல்லாதது போல இருக்கிறது.

உதாரணத்திற்கு, 'கள்ளத் துலாக்கோல் ஆண்டவருக்கு அருவருப்பானது. முத்திரையிட்ட படிக்கல்லே அவர் விரும்புவது' (11:1) எனச் சொல்லும் ஆசிரியர், தொடர்ந்து, 'இறுமாப்பு வரும் முன்னே இகழ்ச்சி வரும் பின்னே என்கிறார்' (11:2). நேர்மை வேறு, தன்னடக்கம் வேறு இல்லையா?

இப்படி ஒன்றிற்கொன்று தொடர்பு இல்லாததுபோல இருப்பதும் மனித உள்ளத்தின் வெளிப்பாடுதானே.
ஒரு நிமிடம் அப்படியே அமர்ந்து நம் எண்ண ஓட்டங்களை அலச ஆரம்பித்தால், 60 நொடிகளில் 6000 (!) எண்ணங்கள் வந்து போகின்றன நம் உள்ளத்தில். காலையில் சாப்பிட்டது, பத்து வருடங்களுக்கு முன் நடந்தது, நாளை நாம் மேற்கொள்ள வேண்டிய பயணத்திற்கு சோப்பு எடுத்துச் செல்ல வேண்டுமா என்ற குழப்பம், உதட்டில் புன்னகை, கண்களில் சீரியஸ்னஸ், எங்கோ கேட்கும் சிரிப்பு சத்தம், அந்த குரல் நம் உள்ளத்தில் எழுப்பும் கலக்கம் என ஒன்றிற்கொன்று தொடர்பில்லாதவைகள் வந்து போகின்றன. ஆனால், தொடர்பு இல்லாத இந்த குணம்தான் இவற்றின் அழகே.

பழமொழிகளும் ஒன்றிற்கொன்று தொடர்பு இல்லாததுபோல இருந்தாலும், ஒரு தோட்டத்தில் பூத்துக்குலுங்கும் பல்வேறு மலர்களாய் நம் கண்களுக்கு அழகு தருகின்றன. நம் உள்ளத்தைப் புதுப்பிக்கின்றன.

இன்னும் சொல்வேன்...

1 comment:

  1. " முரண்பாடுகளின் மொத்தக்கலவைதான் மனிதன்" என்பதை யாரும் மறுக்க இயலாது.பழமொழிகளில் தேங்கியுள்ள எளிமையையும்,முரண்பாட்டையும்,இவை பேச்சு வழக்கில் வந்த வழி பற்றியும்,ஒரு நிமிடத்தில் நம் உள்ளத்தில் எழும் ஓராயிரம் எண்ணங்களின் சம்பந்தமற்ற நிலைபற்றியும்,அலசும் தந்தை இறுதியில்," தொடர்பு இல்லாத இந்த முரண்பாடுதான் இவற்றின் அழகு" என முடிக்கும் விதம் அழகு.ஆனால் ஒரு விஷயம் புரியவில்லை." இறுமாப்பு வரும் முன்னே; இகழ்ச்சி வரும் பின்னே" எனக்கூறிவிட்டு ' நேர்மை வேறு; தன்னடக்கம் வேறு' என்கிறார். கள்ளத்துலாக்கோல் பற்றிக்கூறுவதால் நேர்மை சரி, ஆனால் தன்னடக்கம் இங்கே எப்படி வந்தது? புரியவில்லை.எனினும் அடுத்த முறை ஒரு பழமொழி நம் செவிகளில் விழுகையில் ஒரு தோட்டத்தில் பூத்துக்குலுங்கும் மலர்களாய் அவற்றை நம் உள்ளத்தில் நுழையவிடுவோம்; பயன்பெறுவோம்.ஒரு பழமொழியை அதன் வார்த்தைகளை மட்டுமே வைத்துப்பாராமல் அதில் ஒளிந்திருக்கும் அழகையும்,மணத்தையும் வெளிக்கொணரும் தந்தையின் முயற்சிக்கு ஒரு சபாஷ்!!!

    ReplyDelete