Monday, June 20, 2016

நீதிமொழிகள் - 3


'அன்பும் வாய்மையும் உன்னிடம் குன்றாதிருப்பதாக!
அவற்றைக் கழுத்தில் அணிகலனாய்ப் பூண்டுகொள்.
அப்பொழுது, நீ கடவுளுக்கும் மனிதருக்கும் உகந்தவனாவாய்.
அவர்களது நல்லெண்ணத்தையும் பெறுவாய்.'
(நீமொ 3:3-4)

ஆண்டவர், அப்பா, அம்மா என்று உறவுநிலைகளை மூன்றாகப் பிரித்த ஆசிரியர், தொடர்ந்து ஒட்டுமொத்த உலகை 'ஆண்டவர்,' 'மனிதர்' என இரண்டாகப் பிரிக்கின்றார்.

இந்த இரண்டு பேருக்கும் உகந்தவராயிருக்கத் தேவை இரண்டு குணங்கள் அல்லது மதிப்பீடுகள்:

''அன்பு,' 'வாய்மை' (எபிரேய வார்த்தையை 'பிரமாணிக்கம்,' 'வாக்குப்பிறழாமை,' 'நம்பகத்தன்மை' என்றும் மொழிபெயர்க்கலாம்).

இந்த இரண்டையும் ஒருவர் கழுத்தில் அணிகலனாக அணிந்து கொள்ள வேண்டும்.

அன்பு, வாய்மை - கடவுள், மனிதர்

இப்படி இந்த நான்கு வார்த்தைகளை இணைத்துப் பார்த்தால், 'அன்பு' நம்மை 'கடவுளுக்கு' உகந்தவராகவும், 'வாய்மை' நம்மை 'மனிதருக்கு' உகந்தவராகவும் மாற்றுகிறது.

மேலோட்டமாகப் பார்த்தால், 'அன்பு' மனிதருக்கும், 'வாய்மை' கடவுளுக்கும் பொருந்துவதாக இருக்கின்றது. ஆனால், ஆழமாகப் பார்த்தால் கடவுள் நம் வாய்மை மற்றும் பொய்மையை ஆய்ந்தறிபவர். அவரிடம் நாம் வாய்மையாக மட்டுமே இருக்க முடியும். மனிதர்களோடு கொண்டுள்ள உறவில்தான் நாம் வாய்மையை குறைத்துக்கொள்ள வாய்ப்பிருக்கிறது.

ஆக, கடவுளை நோக்கி அன்பு, மனிதர்களை நோக்கி வாய்மை.

'வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்' (குறள் 291)

(வாய்மை என்று கூறப்படுவது எது என்றால், அது மற்றவர்க்கு தீங்கு இல்லாத சொற்களைச் சொல்வதாகும்)

'புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை
வாய்மையாற் காணப் படும்' (குறள் 298)

(புறத்தே தூய்மையாக விளங்குதல் நீரால் ஏற்படும். அதுபோல அகத்தில் தூய்மையாக விளங்குவது வாய்மையால் உண்டாகும்)

என்று வாய்மைக்கும்,

'புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை
அகத்துறுப்பு அன்பி லவர்க்கு' (குறள் 79)

(அன்பு என்னும் அகத்து உறுப்பு இல்லாதவர்க்குப் புறத்து உறுப்புக்கள் அழகாக இருந்து என்ன பயன்?)

'அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு' (குறள் 80)

(அன்புநெஞ்சத்தின் வழியில் இயங்குவதே உயிராகும். இல்லையேல், அது எலும்பைத் தோல் போர்த்திய உடலாகும்)

என்று அன்புக்கும் அணி செய்கின்றார் தெய்வப்புலவர்.

2 comments:

  1. அச்சில் பளிச்சென்று விழும் சொற்களாக வந்து விழுகின்றன இன்றையப் பதிவின் வார்த்தைகள். கடவுளோடும்,மனிதரோடும் நம்மை இணைக்கும் பாலமாக அமைகின்றன 'அன்பு' மற்றும் ' வாய்மை' எனும் அணிகலன்கள்.இந்த இரண்டில் எது இறைவனுக்கு,எது மனிதருக்கு எனும் பட்டிமன்றம் தேவையில்லை என்றே நினைக்கிறேன். இறைவனுடனும்,சக மனிதனுடனும் அன்பு காட்டும் ஒருவரால் அவர்களிடம் எப்படி ' பொய்மை' காட்ட இயலும்? அப்படி அது நடந்தால் அங்கு 'அன்பும்' பொய்த்து விடுமே! இன்றையப் பதிவிற்கு அணி செய்ய தந்தை வாய்மை மற்றும் அன்பு குறித்த வரிகளை தெய்வப்புலவர் திருவள்ளுவரிடமிருந்து கோடிட்டுக் காட்டி இருப்பது 'அணிகலனுக்கே அணி' செய்வது போல் உள்ளது.இங்கு போற்றப்பட வேண்டிய திருவள்ளுவருடன் தந்தைக்கும் ஒரு 'சபாஷ்' சத்துள்ள ஒரு சரக்கைக் கொடுத்ததற்காக!!!

    ReplyDelete
  2. Dear Father,Congrats!

    ReplyDelete