Wednesday, June 22, 2016

நீதிமொழிகள் - 5

நீதிமொழிகள் நூலின் ஆசிரியரின் முதல் போதனை 'கற்புநெறி தவறாமை' (5:1-14) மற்றும் 'பிறன்மனைவி நயவாமை' (5:15-23) என்று இருக்கிறது.

அவரின் போதனை குடும்பம் அல்லது சமூகத்தை மையப்படுத்தி தொடங்குகிறது.

விலைமகள் அல்லது பாலியல் தொழில் என்பது மனித இனம் தொடங்கிய காலம் தொட்டு இருக்கின்றது. குடும்ப உறவின் எதிர்ப்பதம் இந்த விலைமகள் உறவு.

நேர்முகமானது ஒன்று இயங்க வேண்டுமென்றால் எதிர்மறையானது ஒன்று இயங்க வேண்டும் என்பது இயற்கை நியதி. மேலும், சமூகவியல் அறிஞர்களின் கருத்துப்படி குடும்பம் என்ற நிறுவனம் உடைந்துவிடாமல் இருக்க, அல்லது அதில் உள்ளவர்களின் உணர்வு நீட்சியாகப் பயன்படுவதே பாலியல் தொழில் அல்லது விலைமகள் உறவு.

எதற்காக நீதிமொழிகள் நூல் ஆசீரியர் கற்புநெறி தவறாமை பற்றி முதலில் எழுத வேண்டும்?

மனித ஆழ்மனதில் மேலோங்கி நிற்கும் உள்ளுணர்வுகள் இரண்டு: ஒன்று, வன்முறை. இரண்டு, பாலியல் உணர்வு. இந்த இரண்டும் சரியான நிலையில் வடிகால் செய்யப்பட வேண்டும். வன்முறை உணர்வை மனிதர்கள் தங்கள் வேலையின் வழியாக ஓரளவுக்குச் சரிகட்டி விடுகின்றனர். பாலியல் உணர்வுக்கு வடிகால் திருமண உறவு.

திருமணத்திற்கு முன்பாக நடக்கும் பாலியல் பிறழ்வு விலைமகளை நாடுவது.

திருமணத்திற்கு பின்பாக நடக்கும் பாலியல் பிறழ்வு பிறன்மனையாளை நாடுவது.

இரண்டுமே பிறழ்வுகள்தாம்.

இங்கே ஆண்தான் பெண்ணைத் தேடிச் செல்வதாகச் சொல்லப்பட்டுள்ளது. பெண்கள் ஆண்களைத் தேடிச் செல்லவில்லை என்று நாம் இதை எடுத்துக் கொள்ளக் கூடாது. பிறழ்வுகள் இரண்டு பாலர் நடுவிலும் இருந்திருக்க வாய்ப்புண்டு.

நீதிமொழிகள் நூல் எழுதப்பட்ட இடம் பாலஸ்தீனம். பாலஸ்தீனம் இயல்பாகவே பாலைநில நாடு. வீடுகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கும். யார் எங்கே இருக்கிறார் என்பதை எளிதில் கண்டுபிடிக்க முடியாது. ஆண்கள் தொழில் நிமித்தமாக வெளியூர்களுக்கு நீண்ட காலம் சென்றுவிடுவதுண்டு. இந்த நாட்களில் பெண்கள் வீடுகளில் தனியாக இருக்க நேரிடும். ஆக, யாரும் என்னைப் பார்க்கவில்லை என்ற உறுதி ஒரு பக்கம். கண்ணுக்கு எதிரே தனியாக பெண் மறு பக்கம். இந்தச் சூழலில் பிறழ்வு மிக எளிதாக நடந்தேறிவிடுகிறது.

இதைச் சரி செய்வதற்கு ஒரே வழி போதனை அல்லது படிப்பினை.

இந்த போதனையைச் செய்கிறார் ஆசிரியர்.

கற்புநெறி தவறினால் என்ன நடக்கும்?

பிறர் முன்னிலையில் மானம் பறிபோகும் (5:9)
நீ சம்பாதித்தது வேறு குடும்பத்திற்குப் போகும் (5:10)
நீ எலும்பும் தோலுமாய் உருக்குலைந்து போவாய் (5:11)

'இரத்தக்கண்ணீர்' திரைப்படத்தில் வரும் மோகன் கதைமாந்தர் இந்த உறவிற்கு நல்ல உதாரணம். வெளி நாட்டு படிப்பு முடித்து பந்தாவாக நாடு திரும்பும் மோகன், கற்புநெறி தவறியதால் மானம் இழந்து, பொருள் இழந்து, நோய் பீடித்து கேட்பாரற்றுக் கிடக்கின்றார்.

பிறன்மனை விரும்பாமல் இருப்பதற்கு, 'உன் நீர்த்தொட்டியிலுள்ள நீரையே குடி!' என உருவகத்தால் பேசுகிறார் ஆசிரியர்.

'பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்
கறனென்றோ ஆன்ற வொழுக்கு' (குறள் 148)

(பிறனுடைய மனைவியை விரும்பி நோக்காத பேராண்மை அறம் மட்டும் அன்று. சான்றோர்க்கு நிறைவான ஒழுக்கமும் ஆகும்!)

என்கிறார் திருவள்ளுவர்.

'கற்புநெறி தவறாமையும்' 'பிறன்மனை நயவாமையும்' ஞானியரின் குணங்கள் என்கிறார் ஆசிரியர்.

இன்னும் சொல்வேன்...

1 comment:

  1. இந்த நீதிமொழி நூல்களில் வரும் அத்தனை போதனைகளுமே ஒரு சராசரி மனிதனோ, மனுஷியோ பின்பற்றக் கூடியதாகவே இருக்கிறது.பொதுவாக 'கற்பு' எனும் வார்த்தைப் பெண்ணுக்கு உரித்தானதொன்றாகக் கருதப்பட்டாலும் இங்கு 'பிறன் மனைவி நோக்காமை' என்ற சொற்றொடர் அது ஆணுக்கும் சேர்த்தே சொல்லப்படுவதாகக் காட்டுகிறது. மனித ஆழ்மனத்தில் மேலோங்கி நிற்கும் உள்ளுணர்வுகளில் ஒன்றான வன்முறையை மனிதர்கள் வேலை வாயிலாக ஓரளவு சரிகட்டுவதாகவும், பாலியல் உணர்வைத் திருமணம் என்ற வடிகால் மூலம் சரிகட்டுவதாகவும் சொல்கிறார் தந்தை.அதிலிருந்து பிறழும் மனிதனுக்கு ஏற்படும் இழிநிலையைத் திருவள்ளுவர் மற்றும் இரத்தக்கண்ணீர் திரைப்படம் மூலம் நம் கண்ணெதிரே கொண்டு வருகிறார்.ஆணோ பெண்ணோ 'கற்பு' என்பது அவரவர் தங்களைச் சுற்றி அமைக்கும் ஒரு வேலி. இதைக்காவல் காக்க நம் மனமே போதும்; வெளியிலிருந்து யாரும் தேவையில்லை.ஒரு சராசரி மனிதனுக்கு ஏற்படும் பலவீனங்களையும்,அதன் பாதகங்களையும் சூசகமாக ஆனால் மிகத்தெளிவாக எடுத்துக்காட்டியுள்ள தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete