Monday, June 27, 2016

நீதிமொழிகள் - 10

'பல்லுக்குக் காடியும் கண்ணுக்குப் புகையும் எப்படி இருக்குமோ,
அப்படியே சோம்பேறிகள் தங்களைத் தூது அனுப்பினோர்க்கு இருப்பர்.'
(நீமொ 10:26)

பழமொழிகள் கையாளும் பல இலக்கியக் கூறுகளில் ஒன்று 'எடுத்துக்காட்டு உவமை அணி.' அதாவது, ஒன்றைப்போல மற்றொன்று இருக்கும் என்று சொல்வது. தெரியும் ஒன்றிலிருந்து தெரியாது ஒன்றுக்கு அழைத்துச் செல்வதுதான் இந்த அணியின் நோக்கம்.

மேற்காணும் எடுத்துக்காட்டைப் பார்ப்போம்:

காடி பல்லில் படுவதும், கண்ணில் புகை படுவதும் எல்லாரும் அனுபவித்திருக்கும் ஓர் அனுபவம். இந்த அனுபவத்தைச் சுட்டிக்காட்டி, சோம்பேறிகளைத் தூது அனுப்பினால் எப்படி இருக்கும் என சொல்கிறார் ஆசிரியர்.

என் 13வது வயது வரை நாங்கள் கூரைவீட்டில் தான் குடியிருந்தோம். ஜன்னல் எதுவும் இல்லாமல் கட்டப்பட்டிருந்து பழைய காலத்து வீடு அது. ஒரு அடுப்பங்கரை. மற்ற எல்லாவற்றுக்கும் ஓர் அறை. அடுப்பில் உலை கொதித்து வடிந்தாலும் இந்தக் காலத்து கேஸ் அடுப்புகள் அதை எதிர்த்து எரிகின்றன. ஆனால், வெறும் சுள்ளிகளை வைத்து எரிக்கும் மண் அடுப்புக்கு அந்த எதிர்ப்பு சக்தி இல்லை. நெருப்பு அணைந்து புகை வரத் தொடங்கிவிடும். அதிகமாக சோளத் தட்டை மற்றும் மக்காச்சோள கதிர் (கருது!) கொண்டே அடுப்பு எரிக்கப்பட்டதால் புகை குபு குபுவென்று வந்து வீட்டை நிரப்பி விடும். வீட்டில் மின்சாரம் இல்லாததால் புகையை வெளியேற்றும் காற்றாடி மற்றும் வெற்றிட உருவாக்கும் காற்றாடிகள் இல்லை. புகைக்கு பயந்து வெளியே போக நினைத்தால் இருட்டாக இருக்கும். புகையைப் பொறுத்துக் கொண்டே உள்ளே இருக்க வேண்டும். புகைக்கு கண்கள் கலங்கிவிடும்.

காடி பல்லில் பட்ட அனுபவம் கிடையாது. ஆனால், புளிப்பு பல்லில் பட்டு பல் கூசிய அனுபவம் இருக்கின்றது. பற்கூச்சத்தை 10 நிமிடத்தில் சரிபடுத்தும் டெக்னாலஜியை சென்சோடின், எல்மெக்ஸ் போன்ற பற்பசைகள் கொண்டிருக்கின்றன. இந்த டெக்னாலஜி இல்லாத காலத்தில் சிலருக்கு குளிர் தண்ணீர், மாங்காய் என எது பல்லில் பட்டாலும் பல் கூச்சம் இருக்கும். பல் கூச்சம் பற்றி எழுதும்போதே, 'கூச்சம்' என்ற வார்த்தை என் ஆர்வத்தைத் தூண்டுகிறது. பொண்ணுங்க கூச்சப்பட்டு பார்த்திருப்போம். அல்லது பொது மேடையில் முதன் முதலாக ஏறும்போது நாம கூச்சப்பட்டிருப்போம்! பல்லுக்கும் அப்படி ஒரு கூச்சம் இருக்குமா? அப்படி என்றால் பல் என்பது பெண்பாலா?

பல்லில் காடி, கண்ணில் புகை - இரண்டும் விழுங்கவும் முடியாமல், துப்பவும் முடியாமல் நாம் உணரும் ஓர் உணர்வை உருவாக்குகின்றன.

மின்னஞ்சல், கட்செவி அஞ்சல், குறுஞ்செய்தி என இல்லாத காலத்தில் தூது அனுப்புதல் மிக முக்கியமானதாக இருந்தது. அரசர்கள், அலுவலர்கள், பணம் படைத்தவர்கள், இறைவாக்கினர்கள், குருக்கள் என்ற மேல்தட்டு மக்கள் மட்டும்தான் தூது அனுப்ப முடியும். தூது அனுப்புவதற்கு தெரிவு செய்யப்படுபவர்கள் சுறுசுறுப்பானவர்களாகவும், நம்பகத்தன்மை கொண்டவர்களாகவும் இருக்க வேண்டும். அவர்கள் சோம்பேறிகளாக இருந்தால் தூதின் முக்கியத்துவமே கெட்டுவிடும். 'போருக்குத் தயாராக இரு! எதிரி வருகின்றான்!' என்று தூது அனுப்ப, அதை எடுத்துச் செல்பவன் சோம்பேறியாக இருந்தால், போர் முடிந்தபின்தான் அந்தச் செய்தி மற்ற அரசனுக்குக் கிடைக்கும். இப்படிப்பட்ட சோம்பேறியிடம் பொறுப்பை கொடுத்துவிட்டு அவனை எங்கே தேடுவது! அவனைக் கண்டுபிடிக்க இன்னொரு தூது அல்லவா அனுப்ப வேண்டும்!

இப்படியாக, இருதலைக்கொள்ளி எறும்பாக நாம் உணரும் அனுபவத்தைக் கொடுப்பவர்கள்தாம் புகையும், காடியும், சோம்பேறி தூதனும்!

இன்னும் சொல்வேன்...

1 comment:

  1. ஒரு சாதாரண விஷயம்....சோம்பேறிகளை நம்பி நாம் எந்த வேலையையும் கொடுக்க முடியாது..ஏன் கொடுக்கவும் கூடாது என்பது. அப்படிக் கொடுக்கும் பட்சத்தில் அவர்கள் அதைச் செய்யாமல்,நாம் இருதலைக்கொள்ளி எறும்பாய் உணரும் தருணத்தை " பல்லுக்குக் காடியும்,கண்ணுக்குப்புகையும்' எனும் சொற்றொடர் மூலம் தெளிவு படுத்துகிறார் தந்தை.அந்தச் சொற்றொடரைப் புரிய வைப்பதற்காகத் தன் இளம் பிராயத்து அனுபவங்களை அழகாகக், கோர்வையாக எடுத்து வைக்கிறார்.அவர் எழுத்தின் நயமும்,உண்மையும் என்னைப் புல்லரிக்கச் செய்கின்றன.அதையும் மிஞ்சி ஒரு சிறுவனாகப் புகைக்கும்,இருட்டுக்கும் இடையே அவர் நடத்திய போராட்டம் இந்தப் " பல்லுக்குக் காடியும்,கண்ணுக்குப் புகையும்" என்ற சொற்றொடரின் அர்த்தத்தை நமக்குப் புரிய வைக்கின்றன.இன்னும் சொல்லுங்கள் தந்தையே! கேட்கச் செவியுள்ளவன் கேட்கட்டும்!!!
    ஷயங்கள்

    ReplyDelete