Saturday, June 18, 2016

நீதிமொழிகள் - 1

ஏறக்குறைய இரண்டு மாதங்களாக திருத்தூதர் பணிகள் நூலோடு நாம் பயணம் செய்தோம்.

தூய ஆவியால் உந்தப்பட்டு, மகிழ்வுடன் வாழ்ந்த தொடக்க திருஅவை. அந்த திருஅவையின் உடன் நின்ற திருத்தூதர்கள். திருத்தூதர்களின் துணிச்சல், விடாமுயற்சி. அவர்கள் நடுவில் எழுந்த விவாதங்கள், விட்டுக்கொடுத்தல்கள். காலம் மற்றும் இடம் என்னும் இரண்டு நிலைகளில் இந்த நூல் நம்மைவிட்டுத் தூரமாக நின்றாலும், அது நம் வாழ்வில் இன்றும் நிறைய தாக்கங்களை ஏற்படுத்தவே செய்கிறது.

இன்று நாம் நீதிமொழிகள் நூலோடு நம் பயணத்தைத் தொடங்குவோம்.

நீதிமொழிகள் நூலில் என்னைக் கவர்ந்த சில பழமொழிகளை எடுத்து, அதற்கு உப்பு, மிளகாய் போட்டு, அல்லது கொஞ்சம் சீனி, க்ரீம் போட்டு, உறைப்பாக, அல்லது இனிப்பாக பரிமாற முயற்சிக்கிறேன்.

'ஆண்டவரிடம் கொள்ளும் அச்சமே ஞானத்தின் தொடக்கம்.
ஞானத்தையும், நற்பயிற்சியையும் மூடரே அவமதிப்பர்.

பிள்ளாய்! உன் தந்தை தந்தை நற்பயிற்சியைக் கடைப்பிடி.
உன் தாய் கற்பிப்பதைத் தள்ளிவிடாதே.
அவை உன் தலைக்கு அணிமுடி.
உன் கழுத்துக்கு மணிமாலை'

(நீமொ 1:7-8)

நம் திருப்பலி, அருளடையாளங்கள், மறைக்கல்வி வகுப்புகள் போன்றவற்றை, 'தந்தை-மகன்-தூய ஆவி' என்ற மூவொரு இறைவன் ஃபார்முலா கொண்டு தொடங்குகின்றோம். நீமொ நூலின் ஆசிரியர் 'ஆண்டவர்-அப்பா-அம்மா' என்ற புதிய ஃபார்முலா கொண்டு தொடங்குகின்றார்.

'ஆண்டவரிடம் கொள்ளும் அச்சம்'
'அப்பா தரும் நற்பயிற்சி'
'அம்மா தரும் வாழ்க்கைப்பாடம்'

இந்த மூன்றையும் ஒருவர் மனத்தில் இருந்தால் அவர் ஞானியாகி விடுவார்.

ஆக, ஞானி ஆதல் அல்லது ஞானம் பெறுதல் என்பது எட்டாக்கனி அன்று. உங்களுக்கும், எனக்கும் சாத்தியானதே.

இந்த புதிய மூவொரு இறைவன் ஃபார்முலாவைக் கொண்டு, தன் நூலை அறிமுகம் செய்கின்றார் ஆசிரியர். இந்த முகவுரையில் மூன்று விடயங்கள் துலங்குகின்றன:

அ. 'ஆண்டவரிடம் கொள்ளும் அச்சமே ஞானத்தின் தொடக்கம்'

'அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு'

என தன் ஞானத்தின் அறிவுரை நூலாம் திருக்குறளைத் தொடங்குகின்றார் திருவள்ளுவர். எழுத்திற்கு முதலாக 'அ' இருப்பது போல, உலகின் எல்லாவற்றிற்கும் முதலாக - ஞானத்தின் முதலாக - 'இறைவன்' இருக்கின்றான்.

'ஆண்டவரைப் பற்றிய அச்சம்' என்று ஆசிரியர் சொல்லக் காரணம் என்ன?

'அச்சம் இருக்கும் இடத்தில் அன்பு இருக்காது' என்றும், 'அன்பில் அச்சம் தேவையில்லை' என்பார்கள். உளவியிலில் அச்சத்தை முதல் எதிர்மறை உணர்வாக பட்டியலிடுகிறார்கள். 'அஞ்சி அஞ்சி சாவார். இவர் அஞ்சாத பொருளில்லை அவனியிலே' என்று அச்சத்தைச் சாடுகின்றார் பாரதியார். இப்படி இருக்க, 'ஆண்டவரிடம் கொள்ளும் அச்சம்' தேவையா? ஆம். தேவையே. ரொம்ப சிம்பிள். நாளை எப்படி இருக்குமோ என்ற நம் அச்சம்தான் நம் இன்றைய நாளை பயனுள்ள முறையில் வாழத் தூண்டுகிறது. தேர்வு பற்றிய அச்சம், பெற்றோரின் கண்டிப்பு பற்றிய அச்சம், அடுத்தவரைக் காயப்படுத்தக் கூடாது என்ற அச்சம் என நிறைய அச்சங்கள் நம்மை உருவாக்கவும் செய்கின்றன. மேலும், அச்சம்தான் பல நேரங்களில் நம் நடத்தையை ஒழுங்கு செய்கிறது.

ஆ. 'மூடரே அவமதிப்பர்'

'ஞானம்' என்ற வார்த்தையை அறிமுகம் செய்தவுடன், 'மூடத்தனம்' என்ற வார்த்தையை அறிமுகம் செய்கின்றார் ஆசிரியர். ஆக, இந்த நூலை வாசிக்கும் வாசகர் தொடக்கத்திலேயே ஒரு முடிவு எடுக்க வேண்டும்: 'நான் எந்தப் பக்கம் நிற்க விரும்புகிறேன்? ஞானத்தின் பக்கமா? மூடத்தனத்தின் பக்கமா?'

இ. 'பிள்ளாய்!'

தன் நீதிமொழிகளை ஒரு கற்பனை கதாபாத்திரத்தின் வழியாக சொல்கின்றார். 'பிள்ளாய்' அல்லது 'குழந்தாய்' என்பது ஒரு கற்பனை கதாபாத்திரம். இந்த நூலின் வாசகர்தாம் இந்த 'பிள்ளாய்' அல்லது 'குழந்தாய்'. இந்த வார்த்தைகள் வருமிடத்தில் எல்லாம் இந்த ஆசிரியர் நம் முன் வந்து குனிந்து நின்று, நம் காதில் அறிவுறுத்துவதுபோல இருக்கிறது.

இன்னும் சொல்வேன்...

1 comment:

  1. 'நீதிமொழிகள் நூலுக்கு' அழகானதொரு தொடக்கம்.இந்த நூலை வாசிக்கும் முன்னரே நான் எந்தப்பக்கம் ... ஞானத்தின் பக்கமா,மூடத்தனத்தின் பக்கமா என முடிவெடுக்கச் சொல்கிறார் தந்தை.கனியிருக்கக் காயைத் தேர்ந்தெடுத்தால் 'நாம் மூடரே' எனச் சொல்கிறது அறிவு." ஆண்டவரிடம் கொள்ளும் அச்சம்,அப்பா தரும் நற்பயிற்சி,அம்மா தரும் வாழ்க்கைப்பாடம்"... இவற்றை நாம் மேல்வரிச்சட்டமாகக் கொண்டால் ஞானியாதலும்,ஞானம் பெறுதலும் சாத்தியமே எனும் வரிகள் யோசிக்க வைக்கின்றன.' ஆண்டவரிடம் அச்சம் தேவையா?'... தேவைதான். சில நேரங்களில் நம்மை அலைக்கழிக்கும் அச்சம் தான் பல நேரங்களில் நம் நடத்தையை ஒழுங்கு செய்கிறது. யார் மறுக்க முடியும்? இந்த உண்மைகளுக்கு உரமேற்ற தந்தைத் திருவள்ளுவரையும்,பாரதியையும் துணைக்கழைத்திருப்பது அவரது பரந்த சிந்தனையைக் காட்டுகிறது.இறுதியில் 'பிள்ளாய', 'குழந்தாய்' என வரும் இடங்களில் ஆசிரியர் குனிந்து நம் காதில் அறிவுறுத்துவது போல் உள்ளது என்பதை நானும் உணர்ந்தேன் இந்தப் பதிவை வாசிக்கும் போதே. நாம் வாழ வேண்டிய வழியைச் சொல்லும் ' நீதி மொழிகள் நூலைத்' தேர்ந்தெடுத்த தந்தைக்கு என் நன்றியும்,பாராட்டும்! அனைவருக்கும் ஞாயிறு வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete