Sunday, June 12, 2016

அன்பு என்பது

எபேசிலிருந்து புறப்படும் பவுல் மற்றும் திருத்தூதர்கள் செசரியா வந்து சேர்கின்றனர். அங்கே அகபு என்ற பெயருடைய இறைவாக்கினர் பவுலின் இடைக்கச்சையை எடுத்து தம் கைகளையும், கால்களையும் கட்டிக்கொண்டு, 'இந்தக் கச்சைக்குரியவரை எருசலேமில் இப்படித்தான் கட்டுவார்கள்!' என இறைவாக்குரைக்கின்றார். அதைக் கேட்ட சீடர்கள் அழுது புலம்புகின்றனர். பவுல் எருசலேமுக்குப் போக வேண்டாம் எனப் பணிக்கின்றனர். ஆனால் பவுலோ, 'ஆண்டவருக்காக கட்டுப்படுவதற்கு மட்டுமல்ல. இறப்பதற்கும் தயாராய் இருக்கிறேன்' என துணிச்சலோடு சொல்கின்றார்.

சொன்னது மட்டுமன்றி, எருசலேமுக்குப் புறப்பட்டும் செல்கின்றார். அங்கே அவர் கோவிலில் கைது செய்யப்படுகின்றார். கைது செய்யப்பட்ட நிலையிலும் துணிச்சலோடு நற்செய்திக்குச் சான்று பகர்கின்றார்.

மறுநாள் இரவு ஆண்டவர் அவரருகில் நின்று, 'துணிவோடிரும்! எருசலேமில் என்னைப் பற்றி சான்று பகர்ந்தது போல உரோமையிலும் நீர் சான்றுபகர வேண்டும்' என்கிறார்.

(காண். திப 21:1 - 23:11)

இன்றைய நாள் நற்செய்தியில் பாவியான பெண் மற்றும் பரிசேயரான சீமோன் பற்றி வாசித்தோம் (காண். லூக் 7:36-50)

'அதிகக் கடனை யாருக்குத் தள்ளுபடி செய்கிறாரோ அவர் அதிகம் அன்பு செய்வார்'

இதுதான் குட்டிக்கதையின் வழியாக சீமோனுக்கு இயேசு சொன்ன பாடம்.

பவுலிடம் அதிகம் மன்னிக்கப்பட்டது. ஆக, அவர் அதிகம் அன்பு செய்கிறார் கடவுளை.

அகுஸ்தினாரிடம் அதிகம் மன்னிக்கப்பட்டது. ஆகவே அவரும், 'தாமதமாக உன்னை அன்பு செய்தேன்' என உருகி வழிகின்றார்.

அன்பு என்பது நாம் தரும் வாக்குறுதி.

அந்த வாக்குறுதியில் தளராமல் துணிந்து நிற்கின்றார் பவுல்.

கயிறுகளும், விலங்குகளும் அவரின் உடலைக் கட்ட முடியுமே தவிர, அவரின் உள்ளத்தைக் கட்ட முடியாது.

2 comments:

  1. சுருங்கச்சொல்லி விளங்க வைக்கும் ஒரு பதிவு. அதிகம் அன்பு செய்ததால் ஒருவர் மன்னிக்கப்பட்டாரா இல்லை அதிகம் மன்னிக்கப்பட்டதால் ஒருவர் அதிகமாக அன்பு செய்தாரா....இரண்டும் ஒன்றை ஒன்று தழுவியது. இந்த பட்டியலில் வருபவர்கள் தான் பவுலும்,அகுஸ்தினாரும்.குடும்பங்களில் கூட நாம் இதைப்பார்க்கலாம்....வீட்டின் கருப்பாடுகளாக இருக்கும் பிள்ளைகள் பெற்றோரால் மன்னிக்கப்படுவதும் கூட இந்த அதீத அன்பினால் தான்....ஊதாரி மகன் பாணியில்.கண்டிப்பாக வெளியிலிருந்து நம்மை நோக்கி வரும் தாக்குதல்கள் நம் உடலுக்குத்தானேயன்றி நம் உள்ளத்திற்கு அல்ல.இதை உணர்ந்த காரணத்தினாலேயே பவுல் இன்றும் திருச்சபையின் தூணாக உயர்ந்து நிற்கிறார்." அன்பிற்குமுண்டோ அடைக்கும் தாழ்?" அன்பின் சக்தியை விளக்கும் அழகான பதிவிற்காகத் தந்தையைப்பாராட்டலாம்!!!

    ReplyDelete