Sunday, June 19, 2016

நீதிமொழிகள் - 2

'உன் தந்தை தந்த நற்பயிற்சி...
உன் தாயின் போதனை...

அவை உன் தலைக்கு அணிமுடி
உன் கழுத்துக்கு மணிமாலை!'

(நீமொ 1:8-9)

மேற்காணும் வார்த்தைகள் எபிரேயத்தில் இன்னும் அழகாக இருக்கின்றன:

'உன் தந்தை தந்த ஒழுக்கம்
உன் தாய் தந்த அறநெறி

அவை உன் தலைக்கு அருளின் மாலை
உன் கழுத்தை அணி செய்யும் மணிமாலை!'

தந்தை மற்றும் தாய் என்னும் உறவு நிலைகளை ஆண்டவர் என்னும் நிலைக்கு இணையாக வைக்கிறார் நீமொ நூலின் ஆசிரியர்.

'தந்தை' மற்றும் 'தந்த' ('கொடுத்த') என்னும் வார்த்தைகளுக்கு இடையே நெருங்கிய தொடர்பு இருக்கிறது. 'தந்தவர்'தான் தந்தை. தன் குழந்தைக்கான விதை தந்தவர். தன் குழந்தைக்காக தன் உழைப்பைத் தந்தவர். தன் வியர்வை தந்தவர். தன் எல்லாம் தந்தவர்.

ஒரு தந்தை தன் பிள்ளைக்குக் கொடுக்கும் மிகப்பெரிய 'தருதல்' 'ஒழுக்கமே!'

ஒழுக்கத்திற்கு என்று ஒரு முழு அதிகாரத்தை ஒதுக்கியிருக்கும் வள்ளுவர் பெருமான்,

'ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்' என்கிறார். (குறள் 131)

அதாவது, 'ஒழுக்கமே மேன்மையைத் தருவதாக இருப்பதால், அந்த ஒழுக்கம் உயிரைப் போலக் கருதப்படும்.'

ஒரு தாய் தன் குழந்தைக்கு உயிரைத் தருகிறாள் என்றால், அந்த உயிருக்கு இணையான ஒழுக்கத்தை தன் குழந்தைக்குத் தருகின்றார் தந்தை.

இரண்டாவதாக, அறநெறி.

அறநெறி என்பது நன்மை-தீமையைப் பகுத்தாய்ந்து, தீமையை விலக்கி, நன்மையைப் பற்றிக் கொள்வது. வெறும் பகுத்தாய்தல் அல்லது நன்மை-தீமை அறிதல் மட்டும் போதுமா? இல்லை. ஆய்ந்தபின் அதற்கேற்ற செயலில் ஈடுபட வேண்டும். இன்றைய சமூகவியல் வார்த்தைகளில் சொல்ல வேண்டுமானால், ஒரு மனிதரின் 'மனச்சான்று உருவாக்கத்தைப் பொறுத்தே அவரின் அறநெறி இருக்கின்றது.' இந்த மனச்சான்று உருவாக்கத்தில் மிக முக்கிய பங்கு வகிப்பவர் தாய்.

தந்தை-மகன் கடமைகளை பின்வருமாறு சொல்கிறார் வள்ளுவர்:

'தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து
முந்தி யிருப்பச் செயல்' (குறள் 67)

கற்றாரின் அவையில் முதலிடம் பெறும் அளவிற்கு நல்லொழுக்கம் மற்றும் அறிவுடன் மகனை வளர்க்க வேண்டியது தந்தையின் கடமை.

இதற்கு பதில் உதவியாக மகன் செய்ய வேண்டியது,

'மகன் தந்தைக்காற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான்கொல் எனும் சொல்' (குறள் 70)

இந்த மகனைப் பெறுவதற்கு இவனது தந்தை என்ன பாக்கியம் செய்தானோ என்று மற்றவர்கள் எண்ணுமளவிற்கு இருக்க வேண்டும் மகனின் வாழ்க்கை முறை.

இதையொட்டியே தாயின் மகிழ்வையும்,

'ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்' (குறள் 69) என்கிறார்.

- தன் மகனைப் பிறர் 'அறிவொழுக்கங்களில் சிறந்த சான்றோன்' எனச் சொல்லக் கேட்கும் தாய், அவனைப் பெற்றபொழுது அடைந்த மகிழ்ச்சியைவிட மிக்க மகிழ்ச்சி அடைவாள்.

ஒழுக்கம் மற்றும் அறநெறியை 'அருளின் மாலை' என்றும் 'கழுத்தணி' என்றும் உருவகப்படுத்துகின்றார் நீமொ ஆசிரியர்.

இந்த இரண்டு வார்த்தைகளும் போர்க்களத்திற்குச் செல்லும் ஓர் அரசனின் அணிகலன்களைக் குறிக்கின்றன. மணிமகுடம் ஓர் அரசனின் அதிகாரத்தைக் குறிப்பதாக இருந்தாலும், அதன் வேலை போர்க்களத்தில் அவன் தலையைப் பாதுகாப்பதே. அதுபோலவே, கழுத்தணியும் எதிரிகளின் வாள்வீச்சிலிருந்து அரசனின் உயிரைக் காப்பாற்றுகின்றது. இவை இரண்டும் வெறும் அலங்காரப் பொருள்கள் அல்ல. மாறாக, உயிர் காக்கும் கவசங்கள்.

ஆக, தந்தை மற்றும் தாயின் நற்பயிற்சி மற்றும் அறநெறி போன்றவையும், விரும்பினால் அணிந்து கொள்ளவும், விரும்பாவிட்டால் கழற்றிவிடவும், அல்லது மாற்றிவிடவும் என நாம் வைத்திருக்கும் அணிகலண்கள் அல்ல. மாறாக, அவை நம் இருப்பையும், வாழ்வையும் உறுதி செய்பவை.

இன்னும் சொல்வேன்...

1 comment:

  1. ' தந்தையர்களை' நினைவு கூறும் தினமான இன்று நீதிமொழிகள் நூலின் வழியாகத் தந்தை நமக்கு உயிர் கொடுத்த தந்தையர்களுக்கு மகுடம் சூட்டியிருப்பது சாலச்சிறந்ததே!ஒரு தந்தை தரும் பயிற்சியும்,ஒரு தாய் தரும் போதனையும் தான் ஒருவனின் தலைக்கு அணிமுடியம்,கழுத்துக்கு மணிமாலையும் எனக் கூறுகிறது நீதி மொழிநூல். ' தந்தவர்க்குப் பெயர் தான் தந்தை! ' எத்தனை உண்மையைத் தன்னுள் அடக்கியிருக்கும் அழகான வார்த்தை.நன்மக்களைப் பெற்ற பெற்றோரும்,நல்ல பெற்றோரைப்பெற்ற பிள்ளைகளும் உண்மையில் கொடுத்து வைத்தவர்கள்; இறைவனின் திருக்கரத்தால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.ஒரு அரசனின் உயிர்காக்கும் மணிமகுடம் மற்றும் கழுத்தணிக்கு இணையான, தாய் தந்தையிடமிருந்து நாம் பெற்ற நற்பயிற்சியும்,ஒழுக்க நெறியும் நம் விருப்பு,வெறுப்புக்கு அப்பாற்பட்டு நம்மோடு ஒட்டி உறவாட வேண்டியவை.ஏனெனில் அவை நம் 'இருப்பையும்,வாழ்வையும்' உறுதி செய்பவை. தங்குதடையின்றி தன் எண்ண ஓட்டங்களை அழகு தமிழில் மேற்கோள்கள் பல காட்டி எடுத்துரைத்துள்ள தந்தையை எத்துணை பாராட்டினும் தகும்!!!

    ReplyDelete