Thursday, May 26, 2016

யாக்கோபு

'நாம் ஒன்றிற்கு நேரம் செலவிட்டால் அது வளரும்.
நேரம் செலவிடாவிட்டால் அது அழியும்!'

- இது டார்வினின் பரிணாம வளர்ச்சி கொள்கை மற்றும் பகவத் கீதையின் ஒரு துளி.

ஆக, ஒன்றை நாம் வளர்க்க வேண்டுமெனில் அதற்கு நேரம் செலவழிக்க வேண்டும். ஒன்றை நாம் விட வேண்டுமெனில் அதற்கு நாம் செலவிடும் நேரத்தைக் குறைக்க வேண்டும்.

உதாரணத்திற்கு, சிகரெட் பழக்கத்தை நிறுத்த வேண்டுமென்றால், அதற்காக நாம் செலவழிக்கும் நேரத்தைக் குறைக்க வேண்டும். நேரம் குறைந்தால் பழக்கம் குறைந்துவிடும்.

பவுலும், பர்னபாவும் எருசலேம் சங்கத்தில் தங்கள் திருஅவையின் பிரச்சினையை முன்வைத்தார்கள் என்று நேற்று பார்த்தோம்.

இந்தப் பிரச்சினையை யாக்கோபு கையாளும் திறனை இன்று பார்ப்போம் (காண். திப 15:12-28).

அ. 'மற்றவர்கள் பேசுவதை முழுவதும் கேட்பது'

பவுலும், பர்னபாவும் பேசி முடிக்கும் வரை காத்திருக்கிறார் யாக்கோபு.

அவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே குறுக்கிடவோ, அல்லது 'அதெல்லாம் இல்ல! இப்படித்தான் செய்யணும்!' என தன் வாதத்தை முன்வைக்கவோ இல்லை.

அடுத்தவரை நாம் முழுமையாகக் கேட்கும்போது, அங்கே கேட்பவரின் பொறுமை மட்டும் அல்ல. மாறாக, கேட்கப்படுபவருக்கு நாம் தரும் மதிப்பும் வெளிப்படுகிறது.

ஆக, யாக்கோபு பொறுமைசாலி. மற்றவர்களை, குறிப்பாக மாற்று கருத்து கொண்டவர்களை, மதிக்கத் தெரிந்தவர்.

ஆ. 'பரந்த மனம்'

'கடவுளே இதை விரும்புகிறார். கடவுளே தன்னை வெளிப்படுத்துகிறார். அப்படியிருக்க நாம் மனிதர்கள் அதற்கு தடைபோட முடியுமா?' என்ற யாக்கோபின் கேள்வி, அவரின் கடவுள் பக்தியையும், தன்னேற்பையும் காட்டுவதோடு, அவரின் பரந்த மனத்திற்கும் சான்றாக இருக்கிறது.

இ. 'சமரசம் தேவையில்லை'

அதே நேரத்தில் புறவினத்தார் தங்களின் பழைய பழக்கங்களையும், வழிபாட்டு முறைமைகளையும் விட்டுவிட வேண்டும் என வலியுறுத்துகின்றார். ஆக, கிறிஸ்துவைத் தழுவுவது என்பதில் உரிமைகளும், கடமைகளும் ஒருசேர அமைந்திருக்கின்றன. ஒன்றை மட்டும் பிடித்தக்கொண்டு, மற்றதை விடல் ஆகாது.

இறுதியாக, பிரச்சினைக்கான தீர்வை அதற்கென நாம் நேரம் ஒதுக்கும்போதே கண்டுபிடிக்க முடிகிறது.

யாக்கோபு - இதில் திறமைசாலி!

1 comment:

  1. " நாம் நேரம் செலவிடும் ஒன்று வளர்வதும், நேரம் கொடுக்கப்படாத ஒன்று அழிவதும் விஞ்ஞானத்தால் நிருபிக்கப்பட்ட உண்மை."... இதன் பின்னனியில் பவுலும்,பர்னபாவும் முன்வைக்கும் பிரச்சனைகளை யாக்கோபு கையாளும் நேர்த்தியை விளக்குகிறது இன்றையப்பதிவு.பொறுமையும்,அடுத்தவரை மதிக்கத்தெரிந்த மனதும் கொண்ட ஒருவரால் மட்டுமே அடுத்தவரின் பிரச்சனையை கேட்க நேரம் ஒதுக்க முடிகிறது." அடுத்தவரை முழுமையாகக் கேட்கும்போது கேட்பவரின் பொறுமை மட்டுமல்ல, கேட்கப்படுபவருக்கு நாம் தரும் மதிப்பும் வெளிப்படுகிறது" ...அழகான உண்மை.இறைவன் நம்மிடம் பரந்த மனம் கொண்டவராய் இருக்கையில் நாமும் அதைப் பிறரோடு பகிர்ந்து கொள்ள அழைக்கப்படுகிறோம் என்பதும்,கிறிஸ்துவைத் தழுவ விரும்பும் ஒருவன் உரிமைகளோடு கடமைகளையும் சேர்த்தே கடைபிடிக்க எதிர்பார்க்கப்படுகிறான் என்பதும் இன்றையப் பதிவு நம்மிடம் பகிரவிரும்பும் செய்திகள்.இவற்றையெல்லாம் தன் வாழ்நாளில் கடைபிடித்த ' யாக்கோபு' மட்டுமல்ல,அவற்றை யாரும் எளிதாகப் பின்பற்றும் விதத்தில் எடுத்துரைக்கும் தந்தையும் கூட ஒரு 'திறமைசாலி' தான்.வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete