Tuesday, May 24, 2016

அந்தியோக்கியா

'நான் வாழும் ஒவ்வொரு நொடியையும் முழுமையாக வாழ வேண்டும்.
நான் சந்திக்கும் ஒவ்வொரு நபரையும் இறுதியாகச் சந்திப்பதுபோல எண்ணி முழுமையாக உறவாட வேண்டும்!'

இந்த இரண்டு வாக்கியங்களையும் வாழ்வாக்கியவர்கள் பவுலும், பர்னபாவும்.

நாம் ஒரு மியூசியத்திற்குச் செல்கிறோம் என வைத்துக்கொள்வோம். குறிப்பிட்ட கால அளவுக்குள் நாம் அதைப் பார்த்து முடிக்க வேண்டும். ஆனால், அதே மியூசியத்தை நாம் மீண்டும் அடுத்த வாரம் பார்ப்போம். இப்படிப்பட்ட சூழலில் நாம் முழுமையாக மியூசியத்தை ரசிப்போமா? இல்லை. 'அடுத்தமுறை பார்த்துக்கொள்ளலாம்!' என்று அரையும் குறையுமாகப் பார்த்து முடிப்போம்.

ஆனால், இந்த உலகம் என்ற மியூசியத்திற்குள் நமக்கு குறிக்கப்பட்ட ஆண்டுகள் மட்டுமே உள்ளன. மேலும், மீண்டும் இந்த மியூசியத்திற்கு வரும் வாய்ப்பு இல்லை. அப்படி என்றால் நம் வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும்? செய்கின்ற அனைத்தையும் முதல் முறை எனவும், இறுதி முறை எனவும் நினைத்து முழுமையாகச் செய்ய வேண்டும்.

அந்தியோக்கியாவிற்குச் செல்கின்றனர் பவுலும், பர்னபாவும் (காண். திப 14:21-28)

தாங்கள் செல்ல வேண்டிய பயணம் நீடியது என்றும், மீண்டும் இந்த ஊருக்கு திரும்பி வர வாய்ப்பில்லை என்றும் எண்ணுகின்ற பவுலும், பர்னபாவும், தாங்கள் சென்றாலும் மக்களின் நம்பிக்கை தொடர்ந்து எரிந்து கொண்டிருக்க, அவர்களுக்காக மூப்பர்களை ஏற்படுத்துகின்றனர்.

இந்தப் பண்பு இவர்களின் இரண்டு மதிப்பீடுகளைக் காட்டுகிறது:

அ. செய்கின்ற பணியை நிறைவாகச் செய்வது.

ஆ. நான் இல்லாவிட்டாலும், அடுத்தவரால் இந்த வேலையைச் செய்ய முடியும் என்று விட்டுக்கொடுப்பது - அதாவது, நானே தான் எல்லாம்! என்னால் மட்டுமே எல்லாம் முடியும்! என்ற மனநிலையை விட்டொழிப்பது.

இந்தப் பக்குவம் நமக்கும் இருந்தது என்றால்,

படிப்பது, படம் பார்ப்பது, உண்பது, உறவாடுவது, தூங்குவது - என எல்லாவற்றையும் முழுமையாகச் செய்ய முடியும்.

நான் உறவாடும் என் நண்பரோடு பேசுவது இதுதான் இறுதியானது என்று நினைத்து நான் பேசினால், அங்கே சண்டையிடுவதற்கும், வாதம் செய்வதற்கும் இடமில்லை.

ஒருவேளை நான் என் நண்பரோடு சண்டையிட்டு, அதுவே என் இறுதி நாளாகவும் இருந்துவிட, நான் எப்படி அவரோடு சமாதானம் செய்ய முடியும்?

அல்லது கொடுக்கப்பட்ட வேலையை அரைகுறையாகச் செய்து, நாளை சரி செய்து விடலாம் என நான் சொல்ல, அந்த நாளை காலையில் நான் எழுந்திராவிட்டால், அந்த வேலையை யார் சரி செய்ய முடியும்?

சிறிய மூச்சுக் காற்று போல குறுகி நிற்கும் வாழ்க்கையை நிறைவாக வாழ நம்மை ஊக்குவிக்கின்றது திருத்தூதர்களின் அந்தியோக்கியா பணி.

1 comment:

  1. " நான் வாழும் ஒவ்வொரு நொடியையும் முழுமையாக வாழவேண்டும்,நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபரையும் இறுதியாக சந்திப்பது போல் நினைத்து உறவாட வேண்டும்."..... நாம் வாழும் பூமிக்குள் இப்படி ஒரு விஷயம் இருப்பின் அது எத்துணை அழகானது.இந்த ' திருத்தூதர் பணிகள்' முழுவதும் கோலோச்சும் பவுலும்,பர்னபாவும் எத்தனை வாழ்க்கைப்பாடங்களை நாமும் வாழ்வாக்க நமக்கு முன் மொழிகின்றனர்.தாங்கள் செல்லும் பயணம் நீடியது எனவும்,திரும்பி வரவாய்ப்பில்லை எனவும் நினைத்து, தாங்கள் இல்லாத சூழலிலும் மக்களின் நம்பிக்கை தொடர்ந்து எரிந்து கொண்டிருக்க அவர்களுக்காக, அவர்களின் நன்மை கருதி காரியங்கள் செய்வதற்கு எத்தனை மனத்துணிச்சல் இருந்திருக்க வேண்டும் அவர்களிடம்! " இதுதான் என் இறுதி நிமிடம்" என நினைத்து வாழப் பழகிவிட்டால் அதுவே நாம் செய்யும் எதையும் எதையும் முழுமையாகச் செய்ய வித்திடும்." சிறிய மூச்சுக் காற்று போல குறுகி நிற்கும் வாழ்க்கையை நிறைவாக வாழ நம்மை ஊக்குவிக்கிறது திருத்தூதர்களின் அந்தியோக்கியா பணி"..... வார்த்தைகளைப் பொறுக்கி எடுத்து ஒரு மாலையாகத் தந்திருக்கும் நேர்த்திக்காகத் தந்தைக்குப் பாராட்டும்... நன்றிகளும்!!!

    ReplyDelete