Saturday, May 21, 2016

பிசிதியா

பிசிதியாவிற்கு பவுலும் பர்னபாவும் சென்ற போது, அங்கிருந்த யூதர்களின் செபக்கூடத்திற்குச் செல்கின்றனர்.

பிசிதியா யூதர்கள் அதிகமாக வாழ்ந்த இடம். இவர்களின் வருகையை அறிந்து செபக்கூடத் தலைவர், 'சகோதரர்களே, மக்களுக்கு ஏதாவது சொல்ல வேண்டுமென்றால் சொல்லுங்கள்!' என அழைக்கின்றார்.
இரண்டு நாட்கள் அவர்கள் விரட்டி விரட்டி நற்செய்தியைக் கேட்கிறார்கள்.

ஆனால் மூன்றாம் நாள் என்ன நடக்கிறது என்றால், அவர்கள் பின்னால் வந்த கூட்டம் அப்படியே அவர்களுக்கு எதிராக திரும்புகிறது.

'இது புதிய சிந்தனை,' 'இது புதிய நம்பிக்கை' என்று திருத்தூதர்களை நாடி வந்தவர்கள் ஒரு கட்டத்தில் இவர்கள்மேல் பொறாமை கொண்டு இவர்களை தங்கள் நகரை விட்டுத் துரத்துகின்றனர். அப்படி துரத்தப்பட்ட திருத்தூதர்கள் தங்கள் கால்களில் ஒட்டியிருந்த தூசியைத் தட்டிவிட்டு அடுத்த நகருக்குச் செல்கின்றனர்.

இந்த நிகழ்வு நமக்கு இரண்டு பாடங்களைக் கற்பிக்கிறது:

அ. சமநிலை

'வாங்க! வாங்க!' என்று மக்கள் சொன்னபோது, மகிழ்ச்சியால் துள்ளவோ, 'போங்க! போங்க!' என்று அதே மக்கள் சொன்னபோது, வாடி வதங்கவோ இல்லை பவுலும், பர்னபாவும். மக்களின் இந்த இரண்டு செயல்களையும் ஒரே உணர்வோடு எடுத்துக்கொள்கின்றனர். தன்னைப் பற்றி முழுமையாக உணர்ந்த, தன் திறன்கள் மற்றும் ஆற்றல்களை உணர்ந்த ஒருவரால் மட்டுமே இந்த சமநிலை உணர்வைப் பெற முடியும்.

ஆ. காலில் தூசி

மேலேயுள்ள சிந்தனையை ஒட்டியதே இது. அதாவது, தங்கள் மேல் காட்டப்பட்ட வெறுப்பு, கண்டுகொள்ளாத்தன்மை, கோபம் அனைத்தையும் அவர்கள் அங்கேயே விட்டுச் செல்கின்றனர். அடுத்த ஊருக்கு எடுத்துச் செல்லவில்லை. நாம் நம் அன்றாட செலவினங்களை எழுதும்போது, முன்னிருப்பு என்று சொல்லி, முந்தைய மாதத்தில் எஞ்சியதை எடுத்துக் கொண்டு வந்து முதலில் வைப்போம். ஆனால், அதை  கணக்குப்பதிவியலோடு நிறுத்திக் கொள்ளல் வேண்டும். உறவுநிலைகளிலும், வாழ்க்கை நிகழ்வுகளிலும், நாம் ஏற்கனவே கொண்டிருந்த எதிர்மறை உணர்வுகளை முன்னிருப்பாக அடுத்த நாளுக்கு, அடுத்த இடத்துக்குக் கொண்டு சென்றால், அது அந்தப் பக்கத்தில் உள்ள ஒட்டுமொத்த வரவு, செலவைப் பாதிக்கிறது.

1 comment:

  1. பிசிதியாவில் பவுல்,மற்றும் பர்னபாவின் நற்செய்தியைக் கேட்டு மகிழ்ந்தவர்கள் திடீரென அவர்கள் மேல் கொண்ட பொறாமையின் உந்துதலால் அவர்களைத் தங்களிடமிருந்து துரத்த ,திருத்தூதர் இருவரும் தங்களது கால்களின் தூசியைத்தட்டி விட்டு அடுத்த நகருக்குச் செல்வதாகக் கூறுகிறது இன்றையப்பதிவு. இப்படிப்பட்ட தொரு நிகழ்வு நம் வாழ்க்கைப்பாதையை வருடுகையில் அதைச் சந்திக்கும் சூட்சுமத்தை எடுத்துரைக்கிறார் தந்தை. 1. வெற்றி கண்டு துள்ளாமலும்,தோல்வி கண்டு துவளாமலும் இரண்டையும் ஒரே சமநிலையில் பாதிப்பது தன்னைத் ,தன் நிறைகுறைகளோடு, முழுமையாக உணர்ந்த ஒருவனால் மட்டுமே முடியும்.2." நாம் அன்றாடம் எழுதும் வரவு,செலவுக் கணக்கின் ஆரம்பத்தில் எழுதும் முந்தைய நாளின் முன்னிருப்பைப் போன்று நம் உறவு நிலைகளின் எதிர்மறை உணர்வுகளை முன்னிருப்பாக அடுத்த நாளுக்குக் கொண்டு சென்றால் அது அந்தப் பக்கத்தின் ஒட்டு மொத்த வரவு,சலவைப் பாதிக்கிறது"இங்கு இரண்டாவதாகத் தந்தை சுட்டிக்காட்டும் விஷயம் நம் அனைவருக்குமே இன்றைய வாழ்க்கையின் சுமுகமான உறவு முறைக்குத் தேவையானதொன்று.குப்பைகளைச் சேர்த்துக்கொண்டே போவதால் யாருக்கென்ன லாபம்? அதனதன் கணக்கை அன்றன்றே சரிபண்ணிவிடுவதே வாழ்க்கையின் மகிழ்ச்சிக்கு வித்திடுவதாகும் எனும் உயர்ந்த சிந்தனையை நம் அன்றாட வாழ்க்கை நிகழ்வுகளோடு தந்தை இணைத்துக் கொடுத்திருக்கும் விதம் அழகு. ."வாசிப்பதற்கு மட்டுமே அல்ல ' விவிலியம்''. அதை வாழ்க்கையாக்கவும் வேண்டும் " . என்ற நல்ல விஷயத்தைப் போகிற போக்கில் அள்ளித் தெளித்துள்ள தந்தைக்கு நன்றியும்! பாராட்டும்!!!

    ReplyDelete