Friday, May 6, 2016

சைமனி

ஆங்கிலத்தில் 'simony' ('சைமனி') என்ற ஒரு வார்த்தை உண்டு.

இந்த வார்த்தை உருவான கதையைச் சொல்கிறது திப 8:9-24

சிதறிய மக்கள் தாங்கள் சென்ற இடமெல்லாம் நற்செய்தி அறிவித்தார்கள் - என்கிறார் லூக்கா.

சிதறிய மக்கள் போகுமிடத்தில் தங்கள் வயிற்றுக்குத் தேவையானதைப் பார்க்காமல் இப்படி நற்செய்தி அறிவித்தார்கள் என்று வாசிப்பது ஆச்சர்யமாக இருக்கிறது.

பிலிப்பு சமாரியா பகுதியில் இவ்வாறு நற்செய்தி அறிவிக்கப்படுகிறது.

அந்த ஊரில் சீமோன் என்ற மந்திரவாதி இருக்கிறார். இவர் தன் மாயவித்தைகளால் மக்களை மயக்கி வைத்திருக்கின்றார். இந்த நேரத்தில் இங்கே உருவான புதிய திருச்சபையைக் காண திருத்தூதர்கள் பேதுருவும், யோவானும் வருகின்றனர். இதுவரை அங்கே இருந்தவர்கள் திருமுழுக்கு மற்றும் பெற்றிருந்ததால், இந்த இரண்டு தூதர்களும் அவர்களுக்கு தூய ஆவியானவரைக் கொடுக்க நினைத்து, அவர்கள் மேல் கைகளை வைத்து செபிக்கின்றனர். அவர்களும் தூய ஆவியைப் பெற்றுக்கொள்கின்றனர்.

இதைப் பார்த்துக் கொண்டிருக்கும் நம்ம மந்திரவாதி சீமோனுக்கு ஒரு குட்டி ஆசை.

'நானும் கைகளை வைத்து அடுத்தவர்கள்மேல் தூய ஆவி பொழிய வைக்கலாமே!' என நினைத்தவர் திருத்தூதர்களிடம் போய், 'நான் யார்மீது கைகளை வைப்பேனோ அவரும் தூய ஆவியைப் பெற்றுக்கொள்ளும்படி எனக்கும் இந்த அதிகாரத்தைக் கொடுங்கள்' என்று கூறி, அதற்காக பணம் கொடுக்க முன்வருகிறார்.

காச வாங்கினோமா, கல்லாவை நிரப்பினோமா என்று இல்லாமல், நம்ம மிஸ்டர் பெர்ஃபெக்ட் பேதுரு, 'கடவுளது கொடையைப் பணம் கொடுத்து வாங்க எண்ணியதால் நீயும் உன் பணத்தோடு நாசமாய்ப் போ. உன் உள்ளம் கடவுளின்முன் நேர்மையற்றதாய் இருப்பதால், இதில் உனக்குப் பங்குமில்லை. உரிமையுமில்லை. இப்போதே உனது தீய போக்கைவிட்டு நீ மனம் மாறி ஆண்டவரிடம் மன்றாடு. ஒருவேளை உன் உள்ளத்தில் எழுந்த இந்த எண்ணம் மன்னிக்கப்படலாம். ஏனெனில் நீ கசப்பு நிறைந்தவனாய் தீமைக்கு அடிமையாயிருப்பதை நான் காண்கிறேன்!' என்று சபிக்கிறார்.

சீமோன் உடனடியாக மனம் திரும்புகின்றார். 'நீங்கள் கூறிய கேடு எதுவும் எனக்கு நேரிடாதவாறு எனக்காக ஆண்டவரிடம் மன்றாடுங்கள்' என்கிறார்.

சீமோன் வாங்க நினைத்தது தூய ஆவியை அல்ல. மாறாக, தூய ஆவியைக் கொடுக்கும் அருள்நிலையை. அதாவது, திருஅவை வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால், சீமோன காசு கொடுத்த பிஷப் ('ஆயர்') ஆக நினைத்தார்.

ஆக, 'சைமனி' என்றால் 'அருளை வழங்கும் ஒரு பதவி அல்லது பொறுப்பு அல்லது அதிகாரத்தை' விலைகொடுத்து வாங்குவது.

அந்தக் காலத்திலேயே திருஅவையின் அருள்பணி நிலைகள் கண்களுக்குக் கவர்ச்சியாய் தெரிந்திருக்கின்றன என்பதே இங்கே புலனாகிறது.

1 comment:

  1. 'சைமனி' எனும் வார்த்தையைப் பார்த்தவுடன் 'சைமனுக்கு' நிகரான பெண்பால் பெயர்; ஒரு பெண்ணைப்பற்றிய பதிவு என நினைத்தேன். படித்தபின் என் நினைப்பு சரியல்ல என உணர்ந்தேன். தன் மாயமந்திரத்தால் செய்யமுடியாத ஒன்றை பேதுருவும், யோவானும் செய்வார்கள் என நம்பி மாயவாதி சீமோன் அவர்களிடம் வந்த வரை மெச்ச வேண்டிய விஷயம் தான். தேர்வுகளில் மதிப்பெண்களைக் கூட்டிப்போடுவதற்காக ஆசிரியப் பெருமக்களுக்குக் கையூட்டுக் கொடுப்பதைக் கேள்விப்பட்டிருப்போம்.ஆனால் இங்கு நாம் பார்ப்பது ஆசிரியரையே விலைக்கு வாங்க நினைப்பது போல் உள்ளது.பதவி,பணம் இவற்றின் மேல் மனிதனுக்குள்ள மோகம் இன்றைய மனிதனைமட்டுமல்ல; அதன் வேர் ஆதித்திருச்சபையிலிருந்தே பரவிப் பெருகிக் கிளைவிட்டு அதன் அங்கத்தினர்களை ஆட்டி வைத்துள்ளது என்பது புரிகிறது.சில விஷயங்கள் வெளிச்சத்திற்கு வருவதை விட இருளில் இருப்பதே மேல்.மீண்டும் என் மனத்தில் பளிச்சிடும் எண்ண ஓட்டம்...."Ignorance is bliss". " சைமனி" என்ற புதுவார்த்தையையும்,அதன் பொருளையும் தந்த தந்தைக்கு நன்றி!!!

    ReplyDelete