Sunday, May 8, 2016

கமாலியேல்

'இவர்கள் திட்டமும் செயலும் மனிதரிடத்திலிருந்து வந்தவை என்றால் அவை ஒழிந்து போகும். அவை கடவுளைச் சார்ந்தவை என்றால் நீங்கள் அவற்றை ஒழிக்க முடியாது. நீங்கள் கடவுளோடு போரிடுபவர்களாகவும் ஆவீர்கள்' (காண். திப 5:34-39)

திருத்தூதர்கள் பேதுருவும், யோவானும் இரண்டு முறை யூத தலைமைச் சங்கத்தால் கைது செய்யப்படுகின்றனர்.

இரண்டாம் முறை கைது செய்யப்பட்டு அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது ஆண்டவரின் தூதர் சிறைக்கதவுகளைத் திறந்து அவர்களை விடுவிக்கின்றார். இப்படி விடுவிக்கப்பட்டவர்களை மீண்டும் கைது செய்து அழைத்து வருகின்றனர் தலைமைச் சங்கத்தார்.

தலைமைச்சங்கத்தாரின் கோபத்துக்கு இரண்டு காரணங்கள்:

ஒன்று, புதிய நம்பிக்கை வேகமாக வளர்ந்து கொண்டிருந்தது.

இரண்டு, இயேசுவின் இரத்தப்பழியை திருத்தூதர்கள் தங்கள்மேல் சுமத்தியது.

இந்த இரண்டு காரணங்களுக்காகத் திருத்தூதர்களைக் கொன்றழிக்கத் திட்டமிடுகின்றனர். அவர்கள் இப்படி திட்டமிட்டுக் கொண்டிருந்தபோது, அங்கிருந்த திருச்சட்ட ஆசிரியர் கமாலியேல் பேசியதைத்தான் நாம் மேலே வாசித்தோம்.

'கமாலியேல்' என்றால் 'கடவுளின் பரிசு' என்பது பொருள்.

ரபி ஹில்லேல் அவர்களின் பேரனும், ரபி சிமியோன் அவர்களின் மகனுமான கமாலியேல், திபேரியு, கலிகுலா மற்றும் கிளவுதியு காலத்தில் தலைமைச்சங்கத்தின் முதல்வராக இருந்தவர். எருசேலம் ஆலயம் உரோமையர்களால் அழிக்கப்படுவதற்கு சில ஆண்டுகளுக்கு முன் இறந்தார். திருத்தூதர் பவுல் இவரின் சீடர் என்பது குறிப்பிடத்தக்கது (காண். திப 22:3).

'கடவுள் அனுப்பிய பரிசாகவே' இங்கு வருகிறார் கமாலியேல்.

'நீங்கள் செய்ய எண்ணியுள்ளதைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள்!' என்று தம் சகாக்களைப் பார்த்துச் சொல்கின்ற கமாலியேல், இரண்டு வரலாற்று சான்றுகளை முன்வைக்கின்றார்.

அ. தெயுதா. இவன் தன்னையே பெரியவன் என்று சொல்லிக் கொண்டு ஏறத்தாழ 400 பேரை தன்னோடு சேர்த்துக் கொண்டவன். ஆனால் அவன் இறந்தபின் இயக்கம் ஒன்றுமில்லாமல் போய்விடுகின்றது.

ஆ. கலிலேயனான யூதா. இவனும் சிலரைச் சேர்த்துக் கொண்டு கிளர்ச்சி செய்கிறான். ஆனால், இவன் இறந்தபின் இவனது கூட்டாளிகள் சிதறுண்டு போகின்றனர்.

இந்த இரண்டு சான்றுகளையும் சொல்லிவிட்டு, அவர் தொடர்ந்து சொல்வது ஓர் இறைவாக்காகவே இருக்கின்றது:

அ. 'இவர்களின் திட்டமும் செயலும் மனிதரிடமிருந்து வந்தால் அவை அழிந்துபோகும்.'
ஆ. 'கடவுளிடமிருந்து வந்தால் அவற்றை ஒழிக்க முடியாது. மேலும் ஒழிக்க நினைப்பவர்கள் கடவுளோடு போரிடுபவர்களாவர்.'

கிறிஸ்தவத்திற்கான அமிலச் சோதனையாக மாறிவிடுகிறது இந்த வார்த்தைகள். அன்று முதல் இன்று வரை அதை அழித்துவிட உள்ளிருந்தும், வெளியிலிருந்து நிறையப்பேர் புறப்பட்டு வந்தாலும், அது இன்றும் தலைநிமிர்ந்து நிற்கிறது. கடவுளிடமிருந்து இது வந்தது என்பதற்கு இதுவே ஓர் அடையாளம்.

கமாலியேல் நிகழ்வு நமக்கு இரண்டு பாடங்களை முன்வைக்கின்றது:

அ. கமாலியேலின் நிதானமும், விவேகமும். தலைமைச்சங்கம் அல்லது வழக்காடு மன்றத்தில் கூச்சல் குழப்பமும் மிகுந்திருக்கும். மக்கள் தங்கள் அறிவினால் அன்றி, தங்களின் உணர்வுகளாலேயே வழிநடத்தப்படுவர் இங்கு. 'வெட்டுவோம்,' 'குத்துவோம்,' 'கொல்வோம்' என்று மக்கள் சத்தம் போட்டுக் கொண்டிருக்க, நிதானமாகவும், விவேகமாகவும் இந்த பிரச்சினையைக் கையாளுகின்றார் கமாலியேல். நம் வாழ்வில் வரும் பிரச்சினைகள் -  சின்னதோ, பெரியதோ - நாம் சத்தம் போடுவதாலோ, அழுது புலம்புவதாலோ தீரப்போவதில்லை. சில நேரங்களில் அவை பெரிதாகவிடவும் வாய்ப்பிருக்கின்றது. இந்த நேரங்களில் நிதானமாகவும், விவேகமாகவும் சிந்தித்து முடிவெடுத்தல் நலம்.

ஆ. 'திட்டம், செயல்' - இந்த இரண்டிற்கும் ஊற்று இறைவன். இந்த இரண்டின் ஊற்றாக இறைவன் இருந்தாலும் அவை அழிவதில்லை. ஏனெனில், அழிவுறும் மனிதர்களிடமிருந்து புறப்படும் எதுவும் அழிவுறும் தன்மையையே கொண்டிருக்க முடியும்.

இறுதியாக, ஓர் எச்சரிக்கை.

கமாலியேலின் வார்த்தைகளை அப்படியே திருப்பிப் போட்டு, 'இது கடவுளிடமிருந்து வந்ததாக இருக்க வேண்டுமென்றால், அது நீடிக்க வேண்டும்' என்பதற்காக வன்முறை வழியாகவும், இரத்தம் சிந்தியும் ஒருவரின் நம்பிக்கையையும், இருப்பையும் முன்வைப்பது சால்பன்று.

'கமாலியேல்' - 'கடவுளின் பரிசு'

1 comment:

  1. இன்றையப்பதிவு நமக்குச் சொல்ல வரும் செய்தி..." இறைவனோடு கைகோர்த்து நிற்கும் எதுவும் தலை நிமிர்ந்து நிற்கும்; அப்படியின்றி அது மனிதனைச் சார்ந்ததெனில் கால ஓட்டத்தில் ஒழிந்து போகும்".இதற்கு அடையாளமாகத் தந்தை கிறிஸ்துவத்தை முன்வைக்கிறார்.ஆம்! கிறிஸ்துவத்தை அழித்துவிட உள்ளிருந்தும்,வெளியிலிருந்தும் அநேகம் சக்திகள் வந்திடினும் அது இன்றும் தலை நிமிர்ந்து நிற்கிறது,கடவுளிடமிருந்து வந்த ஒன்று எனும் காரணத்தால்....."கமாலியேல்'...'கடவுளின் பரிசு'.....நம்முடைய வாழ்க்கை ஓட்டத்திலும் நாம்நெறி பிறழ்கையில்,தவறிழைக்கையில் எத்தனையோ கமாலியேல்கள் நமக்கு அனுப்பப்படுகிறார்கள். அவர்களை இனம் கண்டு கொள்ளும் ஞானம் நம்மிடம் உள்ளதா? நம்மைச்சுற்றியுள்ளோர் தடம் புரண்டு நிற்கையில் அவர்களை சரியான பாதையில் புரட்டிப்போடும் கமாலியேல்களாக நாம் என்றாவது இருந்திருக்கிறோமா?நமது வாழ்க்கையில் விவேகம்,நிதானம்,திட்டம்,செயல் இவற்றிற்கு முன்னுரிமை அளிக்கிறோமா?? யோசிப்போம்.நம் வாழ்க்கையின் ' கமாலியேல்களைக்'கண்டு கொள்ளும் ஞானத்தை இறைவனிடம் கேட்போம். நல்லதொரு பதிவிற்காகத் தந்தைக்கு நன்றி!!!

    ReplyDelete