Friday, May 6, 2016

ஸ்தேவான்

‘கிரேக்க மொழி பேசும் இளம்பெண்கள்’ பந்தியில் கவனிக்கப்படாததால் என்னவோ, திருத்தொண்டிற்காகத் தேர்ந்தெடுக்கப்படும் ஏழு பெயர்களும் கிரேக்கப் பெயர்களாகவே இருக்கின்றன:

ஸ்தேவான், பிலிப்பு, பிரக்கோர், நிக்கானோர், தீமோன், பர்னபா, நிக்கோலா.

இவர்களில் ஸ்தேவானுக்கு மட்டும் 68 வசனங்களை ஒதுக்குகின்றார் லூக்கா.

‘ஸ்தேஃபானுஸ்’ என்றால் கிரேக்கத்தில் ‘மணிமுடி’ என்று பொருள். ஆகையால்தான், தமிழில் இவரை ‘முடியப்பர்’ என அழைக்கின்றோம்.

பந்தியில் பரிமாறுவதற்காக ஏற்படுத்தப்பட்ட ஸ்தேவானை பெரிய அருளுரை நிகழ்த்துபவராகவும், நல்ல பேச்சாளராகவும் முன்வைக்கின்றார் லூக்கா. ஆக, திருத்தொண்டிற்காகத் தெரிவு செய்யப்பட்டவர்கள் பலதிறன்கள் கொண்டவர்களாக இருந்திருக்கிறார்கள் என்பதற்கு ஸ்தேவானின் இந்த அருளுரை ஓர் எடுத்துக்காட்டு.

அ. ஸ்தேவானின் அருளுரை இஸ்ரயேல் மக்களின் மீட்பு வரலாற்றின் ஏழு முக்கியமான நிகழ்வுகளைத் தொகுத்து வழங்குகிறது:

1. ஆபிரகாமின் கானான் பயணம்
2. யாக்கோபின் எகிப்துப் பயணம்
3. யோசேப்பின் வழி நடந்த மீட்புச் செயல்
4. மோசே வழி வந்த மீட்பு
5. கன்றுக்குட்டியால் இஸ்ரயேல் செய்த பாவமும், கடவுளின் கோபமும்
6. சந்திப்புக் கூடாரத்தில் தணிந்த கடவுளின் கோபம்
7. தாவீது, சாலமோன் வழி ஆண்டவரின் ஆலயம்

இந்த ஏழு நிகழ்வுகளின் நிறைவாக இருப்பவர் இயேசு என்பதை தான் இறக்குமுன் சொல்லி முடிக்கின்றார் ஸ்தேவான்.

ஆ. ஸ்தேவான்-இயேசு ஒற்றுமை

ஸ்தேவானுக்கும், இயேசுவுக்கும் மூன்று ஒற்றுமைகளைப் பதிவு செய்கின்றார் லூக்கா.

1. இருவருமே நகருக்கு வெளியே இறக்கின்றனர்.
2. இருவருமே, ‘என் ஆவியை ஏற்றுக்கொள்ளும்’ என்று தங்கள் உயிரைக் கையளிக்கின்றனர்.
3. இருவருமே, ‘இந்தப் பாவத்தை இவர்கள்மேல் சுமத்தாதேயும்!’ என்று தங்களைக் கொன்றவர்களுக்காக பரிந்து பேசுகிறார்கள்.

இ. ஸ்தேவான் நிகழ்வு எதற்காக?

ஒன்று, கிரேக்க மொழி பேசுவோர் - எபிரேய மொழி பேசுவோர் என எல்லாருமே சான்று பகர்வதில் சிறந்து விளங்கினார்கள் என்று காட்டுவதற்காக.

இரண்டு, சவுல் என்ற முக்கியமான கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்துவதற்காக. ஏனெனில், “சாட்சிகள் தங்கள் மேலுடைகளைச் சவுல் எனும் இளைஞரிடம் ஒப்படைத்தார்கள்” (7:58) என எழுதுகின்றார் லூக்கா. ‘இதோ, இதை வைத்திருப்பா! நாங்க வந்து வாங்கிக்கொள்கிறோம்!’ என்று சொல்லி சவுலிடம் அவர்கள் ஒப்படைக்கவில்லை. மாறாக, ‘ஆடை என்பது ஒரு சான்று அட்டை போல’ பயன்படுத்தப்படுகிறது இங்கே. சவுல் ஏற்கனவே இந்த புதிய நம்பிக்கையை அழிக்கும் பொறுப்பை ஏற்றவராக இருந்திருக்க வேண்டும். இவரிடம் தங்கள் ஆடையை ஒப்படைப்பதன் வழியாக தங்களையும் அந்த எதிர்ப்பு இயக்கத்தில் இணைத்துக் கொள்கிறார்கள் சாட்சிகள்.

இறுதியாக, ‘சவுல் என்ற இளைஞன்.’

தன் பணிக்கான கடவுளின் தெரிவு இப்படித்தான் இருக்கிறது. தான் விரும்பியவர்களை அவர் தெரிவு செய்து, அவர்களை தன் கையில் வைத்துப் புதிய உருவமாகப் பிசைகின்றார். ‘ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது’ என்றறிந்த கடவுள், ‘வளைக்கக்கூடிய’ வயதிலேயே சவுலை தன் பக்கம் வளைத்துப் போடுகின்றார்.

2 comments:

  1. பந்தி பரிமாறுவதற்காக அழைக்கப்பட்ட எழுவரில் ' ஸ்தேவான்' என்றமுடியப்பரை
    இயேசுவுடன் ஒப்பிட்டுக் காட்டுகிறார் தந்தை.அதுமட்டுமின்றி இறைவன் தனக்கு வேண்டியவர்களை, தான் விரும்பியவர்களைத் தன் பணிக்காகத் தெரிவு செய்து குயவன் கை மண்ணான அவனை அழகிய வடிவத்தில் வார்த்தெடுப்பதாகவும் உணர வைக்கிறார்.எதை வைத்து இவர்களைத் தெரிந்தெடுக்கிறார்?! ஆடுமேய்க்கும் தாவீதும்,இன்றையப் பதிவில் வரும் பல திறமை படைத்த ஸ்தேவானும், கிறிஸ்தவர்களைத் துன்புறுத்திய பவுலாய் மாறிய சவுலும், மீன் பிடித்துக்கொண்டிருந்த சிமியோனான பேதுருவும் இதில் அடக்கம் எனில் இவர்களில் நாம் யார்? பிசையக் கூடியதை பிசைய வல்லவர்; வளைக்கக்கூடியதை வளைக்க வல்லவர் அவர்! இதில் நாம் எந்த இரகம்? ஏற்கனவே அவரால் அழைக்கப்பட்ட நாம்,இன்னும் அவருக்கு அருகில் நெருங்க நம்மை நாமே தகுதியுள்ளவர்களக்குவோம் எனக் கூற வரும் பதிவிற்காகத் தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete
  2. Dear Father,Congrats very wonderful message on "ஸ்தேவான்".May GOD inspire you more and more to inspire lot of our hearts.

    ReplyDelete