Saturday, May 7, 2016

அழகுவாயில்

பேதுரு அவரிடம், 'வெள்ளியும் பொன்னும் என்னிடமில்லை. என்னிடம் உள்ளதை உமக்குக் கொடுக்கிறேன். நாசரேத்து இயேசுவின் பெயரால் எழுந்து நடந்திடும்' என்று கூறி, அவரது வலக்கையைப் பற்றிப் பிடித்துத் தூக்கிவிட்டார். உடனே அவரது காலடிகளும் கணுக்கால்களும் வலுவடைந்தன. (காண். திப 3:1-10)

எங்கே பணியைத் தொடங்கினால் அது அதிக மக்களிடம் போய்ச் சேரும் என்பதைத் தெளிவாக அறிந்திருக்கின்றனர் பேதுருவும், யோவானும்.

இவர்களின் முதல் அறிகுறி எருசலேம் ஆலயத்தின் 'அழகுவாயில்' அருகே நடக்கின்றது. எருசலேம் ஆலயத்தைச் சுற்றி 12 வாயில்கள் இருந்தன. 'அழகுவாயிலை' 'அலங்கோலமாக்கிய' ஒரு ஊனமுற்றவருக்குத்தான் முதல் அறிகுறி நடந்தேறுகிறது. 'அழகுவாயிலில்' அவர் அமரக் காரணம் அந்த வாயில் வழியாகத்தான் பலர் ஆலயத்திற்குள் நுழைவர், வெளியேறுவர். மேலும், அந்த நபர் எல்லாருக்கும் அறிமுகமானவராயிருக்கிறார். எல்லாரிடம் உதவி கேட்டிருப்பதால் அவரை எல்லாரும் நினைவில் கொண்டிருந்தனர். பிற்பகல் மூன்று மணிக்கு ஆராதனை செய்ய கோவிலுக்கு வந்த திருத்தூதர்கள் பேதுருவையும், யோவானையும் உற்றுப்பார்க்கின்றார் இவர். தொடக்கக் கிறிஸ்தவர்கள் முதலில் யூதர்களாகவே இருந்தனர். ஆக, ஆலயத்திற்கும் சென்றனர்.

'ஏதாவது கிடைக்கும்' என்று உற்றுப்பார்க்கின்றார் இவர்.

'வெள்ளியும், பொன்னும் இல்லை' என்கிறார் பேதுரு.

இங்கே லூக்காவின் வார்த்தை விளையாட்டைக் கவனிப்போம். நாம் ஒருவரிடம் 'என்னிடம் இது இல்லை' என்று சொல்லும்போது, மேலிருந்து தொடங்கி கீழ் செல்வோம். உதாரணத்திற்கு, சாப்பாடு இல்லை, உடை இல்லை, உறைவிடம் இல்லை, வண்டி இல்லை, ஐஃபோன் இல்லை எனச் சொல்வோம். இங்கே முதன்மையானது உணவு. தேவையற்றது ஐஃபோன். ஆனால் பேதுருவோ, 'பொன், வெள்ளி' என்று சொல்வதற்குப் பதிலாக, 'வெள்ளி, பொன்' என்கிறார். ஆக, இந்த வரிசையில் இதைவிட மதிப்புக்குரிய ஒன்று வரப்போகிறது என்பதை இவ்வார்த்தைகள் முன்குறித்துக் காட்டுகின்றன. 'வெள்ளி, பொன், இயேசுவின் பெயர்' - இயேசுவின் பெயர் வெள்ளி, பொன் என இன்னும் அதிகம் மதிப்பு பெற்றதாகிவிடுகிறது.

இயேசு தன் வாழ்வில் செய்த அறிகுறிகள் அவர் தன் பெயரால் நிகழ்த்தியவை. ஆனால், இன்றுமுதல் அறிகுறிகள் இயேசுவின் பெயரால் செய்யப்படுகின்றன. இயேசுவிடமிருந்து இறையரசுப்பணி அவரின் திருத்தூதர்கள் கைகளுக்கு வருகின்றது.

பேதுரு இயேசுவின் பெயரை மட்டும் சொல்லாமல், ஊனமுற்றவரைத் தூக்கிவிடுகின்றார்.

ஆக, ஒரு அறிகுறி நம் வாழ்வில் நடக்கவேண்டுமென்றால் அதற்கு மூன்று முக்கிய அம்சங்கள் இருக்க வேண்டும் என்பதை இந்நிகழ்வு நமக்குச் சொல்கிறது:

அ. 'நம்பிக்கை.' இது ஊனமுற்ற இனியவரிடம் நிறைய இருந்தது.

ஆ. 'இயேசுவின் பெயர்.' இதை திருத்தூதர்கள் உச்சரிக்கின்றனர்.

இ. 'தூக்கிவிடுதல்.' இதை நாம் மற்றவருக்கும், மற்றவர் நமக்கும் செய்ய வேண்டும்.

முதல் இரண்டு பண்புகள் இருந்தும், மூன்றாவது இல்லையென்றால் அறிகுறி நடப்பதில்லை.

ஆக, நான் என் கையை நீட்டி எனக்கருகிருப்பவரைத் தூக்கிவிடும்போது நானும் அறிகுறி நடக்கக் காரணமாகிறேன்.

1 comment:

  1. ' அழகு வாயிலின் ஊனமுற்றவன்'..எல்லோருக்கும் பரிட்சயமானவன் தான்.இங்கு புதிதாகப் படுவது தந்தையின் வார்த்தை விளையாட்டு.ஆம்! பொதுவாக நம்மிடம் உதவி கேட்பவர்களிடமிருந்து தப்பிக்க நாம் சொல்வது ...'ஐயோ,சில்லறை இல்லையே!' என்பதுதான். ஆனால் இங்கே பேதுரு ' வெள்ளியும்,பொன்னும் எங்களிடம் இல்லை' என்று சொல்வதன் பின்னால் ஒளிந்திருக்கும் 'இயேசு' எனும் பெயரையும், இப்பெயரில் ஒளிந்திருக்கும் மாட்சியையும் விளக்கவே அவ்வாறு கூறியதாக தந்தையின் விளக்கம் நமக்குச் சொல்கிறது.கூறியதோடு நின்று விடாமல் அவனைத்தூக்கி விடுவதையும்,குணப்படுத்துவதையும் பார்க்கிறோம்.ஆம்! 'நம்பியவருக்கே நடக்கும்' எனும் சொலவடைக்கிணங்க இயேசுவின் பெயரோ, இல்லை நம்மை இக்கட்டிலிருந்து தூக்கிவிட ஆட்களோ இருப்பினும் நம்மிடம் ' 'நம்பிக்கை' இல்லையெனில் எதுவும் நடக்க வாய்ப்பில்லை எனவும்,நமக்கருகிருப்பவரை நாம் தூக்கி விடும்போது 'இயேசு' செய்த அதே அறிகுறிகளை நாமும் செய்கிறோம் எனவும் கூறுகிறது இன்றையப்பதிவு.நம்மருகில் உள்ள ஒரு சகோதரனுக்கு ஒரு நற்செயல் புரிவதன் மூலம் நாமும் ' தெய்வமாகிறோம்' எனில் அதற்கு நாம் ஏன் தயங்க வேண்டும்.'அழகானதொரு' பதிவிற்காகத் தந்தைக்கு நன்றிகள்! அனைவருக்கும் ஞாயிறு வாழ்த்துக்கள்!! இந்த உலகை உயிரோட்டமாக வைத்துக் கொண்டிருக்கும் அனைத்து அன்னையர்களுக்கும் 'அன்னையர் தின' வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete