Friday, May 13, 2016

அனனியா - ஆண்டவர்

சவுல் (பவுல்) மனமாற்றம் அடைந்தவுடன் என்ன நடந்தது என்பதை வர்ணிக்கிறது திப 9:10-19.

தமஸ்கு நகர் செல்லும் வழியில் சவுலுக்கு தோன்றிய இயேசு, சற்று நேரத்தில் அனனியா என்னும் சீடர் ஒருவருக்குத் தோன்றுகின்றார். இங்கே நாம் 'அனனியா-சப்பிரா' தம்பதியினரைக் குழப்பிக் கொள்ள வேண்டாம். அவர் வேறு அனனியா. அவர் இறந்துவிட்டார். இவர் மற்றொரு சீடர். 'அனனியா' என்பது பொதுவாக வழங்கப்பட்ட பெயர்.

'அனனியா!'

'ஆண்டவரே, இதோ அடியேன்!'

'நீ எழுந்து நேர்த் தெரு என்னும் சந்துக்குப் போய் யூதாவின் வீட்டில் சவுல் என்னும் பெயருடைய தர்சு நகரத்தவரைத் தேடு. அவர் இப்பொழுது இறைவனிடம் வேண்டிக்கொண்டிருக்கிறார்.'

'ஆண்டவரே, இம்மனிதன் எருசலேமிலுள்ள இறைமக்களுக்கு என்னென்ன தீமைகள் செய்தான்...'

'நீ செல். அவர் பிற இனத்தாருக்கும் அரசருக்கும் இஸ்ரயேல் மக்களுக்கும் முன்பாக எனது பெயரை எடுத்துச் செல்ல நான் தேர்ந்தெடுத்துக் கொண்ட கருவியாய் இருக்கிறார்'

... ... ...

அனனியா - ஆண்டவர் உரையாடலில் நான் மூன்று விநோதங்களைக் கவனிக்கிறேன்:

அ. 'நேர்த்தெரு'

அதாவது, இவ்வளவு நாள்கள் பாதை மாறி, பாதை வளைந்து, பாதை திரும்பிச் சென்ற சவுலை, கடவுள் நேர்த்தெருவிற்குக் கொண்டு வருகின்றார். இங்கே அகுஸ்தினாரின் வாழ்வையும் நான் நினைத்துப் பார்க்கிறேன். அங்கும், இங்கும், எங்கும் அலைந்த அவரின் உள்ளத்தையும் ஆட்கொண்ட இறைவன், அவரோடு மல்லுக்கட்டி அவரை வழிக்குக் கொண்டுவருகின்றார்.

ஆ. 'மனிதர்கள் இறந்தகாலத்தை நினைக்கின்றனர். கடவுள் எதிர்காலத்தை நினைக்கிறார்.'

ஆண்டவரின் சீடர் அனனியாவுக்குக் கண் முன் நின்றது சவுலின் இறந்தகாலம் மட்டுமே. 'அவன் அப்படியிருந்தான், இப்படியிருந்தான், அடித்தான், வெட்டினான், அவனைப்போயா நீங்க சீடராக ஆக்குறீங்க!' என முணுமுணுக்கிறார் அனனியா. 'அவன் எப்படி இருந்தான் என்பது பற்றி எனக்குக் கவலையில்லை. பார்! அவன் இன்னும் எப்படி ஆகப்போகிறான்!' என்று அனனியாவை மாற்றுச் சிந்தனைக்கு அழைக்கிறார். இங்கே மனம் மாறுவது சவுல் மட்டுமல்ல. அனனியாவும் தான்.

இ. 'புற இனத்தார் முன், அரசர்கள்முன்!'

நமக்கு பெரிய வேலையை அல்லது பெரிய சவாலைக் கடவுள் கொடுத்து, நாம் அதனோடு மல்லுக்கட்டுவதைப் பார்த்து ரசிக்கின்றார். நம்மால் சமாளிக்க முடியும் என்பதற்காகத்தான் கடவுள் நமக்குப் பெரிய கஷ்டத்தைக் கொடுக்கின்றார். சவுலுக்கு கடவுள் கொடுக்கும் வேலையும் அப்படித்தான் இருக்கிறது. முன்பின் தெரியாதவர்களுக்கும், அரண்மனைகளில் வாழ்வோருக்கும் பணி செய்யக் கடவுள் அவரை அனுப்புகின்றார். 'சின்ன'ப்பரை தேர்ந்து கொண்ட கடவுள் அவருக்கு 'பெரிய' வேலையைக் கொடுக்கின்றார்.

1 comment:

  1. " நீ என்னைத் தேர்ந்து கொள்ள வில்லை; நான் தான் உன்னைத் தேர்ந்து கொண்டேன்! இன்றையப் பதிவைப் படித்தவுடன் எனக்கு நினைவில் வந்த வரிகள் இவைதாம்.ஆம்! அவரின் கடைக்கண் பார்வை படுபவர்களின் கடந்ந காலம் பற்றி அவருக்குக் கவலையில்லை.தன் அன்பின் அரவணைப்பினாலோ இல்லை அடி மேல் அடிகொடுத்தோ நம்மைத் தம்மவராக்குகிறார். அவரன்பில் நிலைத்திருக்க நாம் விளையாடும் ' மல்லுக்கட்டையும்' அவர் இரசிக்கிறார். எத்தனையோ காலம் பாதை மாறி,பாதை வளைந்து,பாதை திரும்பிச்சென்று சவுலையும், அங்கும்,இங்கும்,எங்குமென்று அலைந்த அகுஸ்தினாரையும் இறைவன் மல்லுக்கட்டித் தன் வழிக்குக் கொணர முடியுமென்றால் என்னையும் கூட மல்லுக்கட்ட அவரால் இயலுமா? ' சின்னவளான என்னிடமும் 'பெரிய' வேலையைக் கொடுக்க இயலுமா ?கண்டிப்பாக இயலும்.அதற்கு நான் தயாரா? யோசிக்க வேண்டிய நேரம்! யோசிக்கத் தூண்டிய ' காரணி'யான பதிவிற்காகத் தந்தைக்கு என் நன்றிகள்!!!

    ReplyDelete