Tuesday, May 3, 2016

அனனியா - சப்பிரா

'அனனியாசு - சப்பிரா' தம்பதியினரை நாம் திப 5:1-10ல் சந்திக்கின்றோம்.

'அனனியா' என்றால் 'ஆண்டவர் இரக்கமுள்ளவர்' என்றும், 'சப்பிரா' என்றால் 'கவர்ந்திழுப்பவர்' அல்லது 'நீலக்கல்' (நவரத்தினங்களில் ஒன்று) என்றும் பொருள். (அனனியா என்ற பெயர் திப நூலில் மற்ற இடங்களிலும் வருகிறது. காண். 9:10-18, 22:12, 23:2, 24:1. ஆனால் இவர்கள் யாவரும் வௌ;வேறு நபர்கள்).

தொடக்கக் கிறிஸ்தவ சமூகத்தில் உள்ள ஒரு குடும்பத்தின் தலைவனும், தலைவியுமே அனனியாவும், சப்பிராவும். இவர்களுக்குச் சொந்தமாக ஒரு நிலம் இருக்கின்றது. அந்த நிலத்தை நல்ல விலைக்கு விற்கின்றனர். விற்ற பணம் முழுவதையும் திருத்தூதரின் காலடியில் கொண்டு போய் வைக்காமல், பாதியை மட்டும் கொண்டு போய் வைக்கின்றார் அனனியா. இதற்கிடையில், 'இவ்வளவுக்குத்தான் விற்றோம் என்று நானும் சொல்லிவிடுகிறேன், நீயும் சொல்லிவிடு!' என்று தன் மனைவி சப்பிராவிடம் சொல்கின்றார். பணத்தை எண்ணிப் பார்த்த பேதுரு, 'அனனியா, இவ்வளவுக்குத்தான் விற்றீர்களா?' என்கிறார். அனனியாவும், இவர் என்ன வந்தா பார்த்தாரு என்று எண்ணிக்கொண்டு, 'ஆம்!' என்கிறார். 'நீ கடவுளிடமே பொய் சொன்னாய்!' என்று பேதுரு சொல்ல, அங்கேயே மடிகின்றார் அனனியா. இது தெரியாத மனைவி மூன்று மணி நேரங்கள் கழித்து அங்கே வருகின்றார். அவரிடம் அதே கேள்வி. அவருடையதும் அதே பதில். 'ஆண்டவரை நீங்கள் சோதிக்க உடன்பட்டதேன்!' எனச் சொல்ல, அங்கேயே உயிர்விடுகின்றார் சப்பிரா.

அ. 'ஒரு பகுதியைத் தனக்கென்று வைத்துக் கொண்டார் அனனியா'

தொடக்க கிறிஸ்தவர்கள் ஏன் சொத்துக்களை விற்றார்கள் என்பதை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும். திருத்தூதர்களின் போதனையில் மிக முக்கியமாக இருந்தது 'பருசியா' ('இரண்டாம் வருகை' அல்லது 'இறுதி நாள்'). அதாவது, உலகம் அழியப்போவதாகவும், இயேசு மீண்டும் அரசராக வரப் போகிறார் என்றும், நீதித்தீர்ப்பு உடனடியாக நடக்கப் போவதாகவும் உறுதியாக நம்பினார்கள் தொடக்கக் கிறிஸ்தவர்கள். ஆகையால்தான், நிலம் எதற்கு, சொத்து எதற்கு, வீடு எதற்கு, எல்லாம் அழியப்போகிறது என்றெண்ணி, இந்த நம்பிக்கை இல்லாத புறவினத்தாரிடம் அவற்றை விற்கின்றனர். விற்றதை பொதுவில் வைத்து, இயேசு வரும் வரை சமைத்து சாப்பிடுவோம் என்று முடிவெடுக்கின்றனர்.

இப்படி அவசர அவசரமாய் தன் நிலத்தை அடிமாட்டு விலைக்கு விற்றவர்தான் அனனியா. விற்ற பணத்தை எண்ணிக் கொண்டிருந்தபோது, அவர் மனத்தில் அந்த சந்தேக எண்ணம் உதிக்கிறது: 'ஒருவேளை இரண்டாம் வருகை இல்லையென்றால் என்ன செய்வது?' 'ஒருவேளை உலகம் அழியாமல் போனால் என்ன செய்வது?' என்ற கேள்விகள் ஒருபக்கமும், 'ஐயயோ, அவசரப்பட்டுவிட்டோமோ' என்ற குற்ற உணர்வும் அவரை வதைக்க, அவற்றின் கைதியாகி, பாதிப் பணத்தை தன் அலமாரியில் பதுக்குகின்றார். அதை மனைவியிடமும் சொல்லிவிடுகின்றார். ஆக, இவர் முழுமையான பொய்யர் அல்ல.

முன்பின் தெரியாத கிறிஸ்தவம் என்ற குதிரையின் மேல் இவ்வளவு பந்தயம் கட்டுவதா? இது ஓடுமா? பாதியிலேயே படுத்துக்கிடுமா? என்று கூட நினைத்திருக்கலாம்.

ஆ. 'அது விற்கப்படுவதற்கு முன் உன்னுடையதாகத்தானே இருந்தது. அதை விற்றபின்பும் அந்தப் பணம் உன்னுடைய உரிமையாகத்தானே இருந்தது?'
பேதுருவின் இந்த கேள்வி என்னை நிறைய யோசிக்க வைக்கிறது. 'உன் உரிமையை நீ ஏன் சாத்தானுக்கும், பொய்மைக்கும் விற்றாய்?' அல்லது 'நீ ஏன் உன் நேர்மையை விலைபேசினாய்?' என்று கேட்கின்றார் பேதுரு. நாம் எந்தப் பாவம் செய்தாலும், பொய் சொன்னாலும், களவு செய்தாலும் நம்மை நாமே அந்தப் பாவத்திற்கு விலை பேசுகிறோம். அங்கே நாம் நம்மேல் உள்ள உரிமையை இழந்துவிடுகிறோம். ஏனெனில் ஒன்று விலை குறித்து அதை நம்மைவிட்டுப் போனபின், அந்தப் பொருளின்மேல் நமக்கு எந்த உரிமையும் இல்லைதானே.

இ. 'அவள் அறிந்தாள்' - 'அவள் அறியவில்லை'

'அறிதல்' என்ற வார்த்தையை வைத்து இங்கே விளையாடுகின்றார் லூக்கா. அதாவது, கதையின் தொடக்கத்தில் தன் கணவன் பாதிப்பணத்தை வைத்துக் கொண்டு, மீதிப்பணத்தை பேதுருவிடம் கொண்டு செல்கிறார் என்பதை சப்பிரா அறிகின்றாள். ஆனால், தன் கணவன் இறந்துவிட்டான் என்பதை அவள் அறியவில்லை. மேலும், 'இளைஞர்கள் துணியால் மூடி எடுத்துச் சென்றார்கள்' என்று லூக்கா எழுதக் காரணமும் இதுவே. அவர்களின் ஊர் சின்ன ஊராகத்தான் இருந்திருக்கும். இறந்த ஒருவரை எடுத்துக்கொண்டு போகும்போது அவர் யாரென எல்லாருக்கும் தெரியும். ஆனால் மனைவிக்குத் தெரியக்கூடாது என்பதற்காக 'துணியிட்டு மூடுகின்றார்' லூக்கா. இதில் உள்ள irony என்னவென்றால், தன் அலமாரியில் துணியிட்டு பாதிப் பணத்தை மூடியதால் இங்கே தன் கணவன் துணியிட்டு மூடி அழைத்துச் செல்லப்படுகின்றான். அங்கே துணிக்குள் இருந்ததை இவள் அறிவாள். ஆனால், இங்கே இருப்பதை அவள் அறியவில்லை.

இறுதியாக,

இரண்டு கேள்விகள்:

1. பேதுருவுக்கு
'ஆமா...அந்த மீதிப் பணத்தை அவங்க வீட்டுல இருந்து எடுத்தீங்களா?'

2. அனனியாவுக்கு
எங்க ஊருல தெனாலிராமன் பூனை விற்ற கதை ஒன்று உண்டு. தன் நோயைக் குணமாக்கிய மருத்துவருக்கு தன் குதிரையை விற்று முழுப்பணத்தையும் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்ற தெனாலிராமன், தன் வீட்டுப் பூனையையும் சந்தைக்கு அழைத்துச் சென்று, 'பூனை விலை 100 வராகன்,' 'குதிரை விலை 10 வராகன்,' 'இரண்டையும் சேர்த்துத்தான் வாங்க வேண்டும்!' என்கிறார். விற்றாயிற்று. மருத்துவருக்கு 10 வராகன் கொடுத்தாயிற்று. அனனியா பாய், நீங்களும் இப்படி ஏதாவது creative-ஆ யோசிச்சிருக்கலாம்?


1 comment:

  1. விவிலியத்தில் வரும் நெருடலான பகுதிகளில் இதுவும் ஒன்று என்னளவில்.ஏற்கனவே தன் நிலத்தை அடிமாட்டு விலைக்கு விற்ற அனனியா, அதில் தனக்கென்று ஒரு பகுதியை வைத்துக்கொண்டு மீதியைப் பேதுருவிடம் கொடுத்ததாக அறிகிறோம். இதில் நெருடல் என்னவென்றால் " தன் சொத்தை முழுவதும் விற்று அதில் வரும் அனைத்தையும் பேதுருவிடம் தருவதாக ஒப்பந்தம் எதுவும் செய்திருந்தாரா என்பது தான். "தனக்குப்போகத்தான் தானதர்மம்" என்கிறோம்.அவரின் சொந்த பணத்தின் ஒரு பகுதியை அவர் வைத்துக்கொண்டதில் என்ன தப்பு? பேதுரு கேட்ட கேள்விக்கு உண்மையை ஒத்துக்கொண்டிருக்கலாம் தான்.ஆனால் அவரது சொத்தை அவர் விற்ற விபரத்தை ஏன் அடுத்தவர் அறியவேண்டும் எனக்கூட அவர் நினைத்திருக்கலாம்.தெனாலிஇராமன் செய்தது புத்திசாலித்தனம் எனில் அன்னியா செய்தது மட்டும் ஏன் பாவச்செயலாகச் சித்தரிக்கப்படுகிறது? அதற்கு இவ்வளவு பெரிய தண்டனை தேவையா? கணவனும் இறந்து, மனைவி சப்பிராவும் உயிர் துறக்குமளவிற்கு இது பெரிய விஷயமா? ஆம்! என்கிறது விவிலியம்...அன்னியா கூறிய பொய் அவரைத் தண்டனைக்குரியவராக சித்தரிக்கிறது.பொய் சொல்கையில் நாம் நம் நேர்மையை விலை பேசுகிறோம் என்கிறார் தந்தை. இன்றைய காலக்கட்டத்திற்கு இது எடுபடுமா? அப்படியாயானால் இன்றையப் பதிவின் பின் புலத்தில் வைத்துப்பார்த்தால் நம்மில் எத்தனை பேர் வாழத் தகுதியுள்ளவர்கள்? யோசிக்க வேண்டியதொரு பதிவிற்காகத் தந்தையைப் பாராட்டலாம்!!!

    ReplyDelete