Sunday, May 22, 2016

இக்கோனியா

'இக்கோனியாவிலும் இப்படியே நிகழ்ந்தது...ஆயினும் அவர்கள் அங்குப் பல நாள் தங்கி ஆண்டவரைப் பற்றித் துணிவுடன் பேசினார்கள்.' (காண். திப 14:1-7)

நேற்றைய வலைப்பதிவில், 'திருத்தூதர்கள் தாங்கள் ஏற்றுக்கொள்ளப்படாதபோது, தங்கள் கால்களின் தூசியை உதறிவிட்டு அடுத்த ஊருக்குச் சென்றார்கள்' என்று எழுதினோம்.

அங்கே ஒரு கேள்வியை விட்டாயிற்று:

அதாவது, ஒருவேளை எல்லா நகரங்களிலும் அவர்களுக்கு எதிர்ப்பு இருந்திருந்தால், அவர்கள் அடுத்தடுத்த நகருக்கு ஓடிக்கொண்டே இருந்தால், கிறிஸ்துவின் நற்செய்தியை எப்படி அறிவிக்க முடியும்?

அதற்கான விடை திப 14:1-7ல் கிடைக்கிறது.

'இக்கோனியாவிலும் இப்படியே நிகழ்ந்தது' என பதிவு செய்கிறார் லூக்கா.

எப்படி நடந்தது?

யூதர்கள் பொறாமை கொண்டு திருத்தூதர்களை அழிக்க நினைக்கின்றனர்.

ஆனால், இம்முறை திருத்தூதர்கள் அந்த ஊரை விட்டு ஓடவில்லை.

இயேசுவின் மற்றொரு போதனையை இங்கே செயல்படுத்துகிறார்கள்: 'உங்களை ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தையும் காட்டுங்கள். ஒரு கிமீ தூரம் வரக் கட்டாயப்படுத்தினால் இரண்டு கிமீ தூரம் செல்லுங்கள். மேலாடையை எடுத்துக்கொள்ள விரும்புபவருக்கு உள்ளாடையையும் கொடுத்து விடுங்கள்!'

மொத்தத்தில், 'துணிவோடு இருங்கள்!'

அதாவது, அடுத்தவர்களின் செயல்பாடு நம் செயல்பாடைப் பாதிக்கக் கூடாது.

உதாரணத்திற்கு, நான் ஒரு செய்தித்தாள் கடைக்குப் போகிறேன் என வைத்துக்கொள்வோம். நான் சரியான சில்லறை கொடுத்து வாங்கினாலும், அந்த கடைக்காரார் வேண்டா வெறுப்பாக என்மேல் எரிந்து விழுகிறார் என வைத்துக்கொள்வோம். என் தொடர் செயல்பாடு எப்படி இருக்க வேண்டும்? அவர் என்மேல் எரிந்து விழுகிறார் என்பதற்காக நான் வேறு கடைக்குச் செல்ல வேண்டுமா? அப்படி நான் செல்லத் தொடங்கிவிட்டால், அவரின் செயலுக்கு எதிர்செயலாக என் செயல் அமைந்துவிடும். 'நான் எங்கே செய்தித்தாள் வாங்க வேண்டும்' என்பதை அவரின் செயல் தீர்மானிப்பதாக ஆகிவிடும். மாறாக, கொஞ்சம் துணிவோடு அவரின் எரிச்சலை எதிர்கொண்டேன் என்றால், என் செயல் அவரின் எரிச்சலையே மாற்றக் கூடிய வாய்ப்பும் இருக்கிறது.

இப்படித்தான் நடக்கிறது திருத்தூதர்களின் வாழ்விலும்.

மக்களின் செயலுக்கு எதிர்செயல் ஆற்றாமல், அவர்களின் வெறுப்பிலிருந்து தப்பி ஓடாமல், அவர்களை நேருக்கு நேர் எதிர் கொள்கின்றனர்.

இதற்கு நிறைய துணிச்சல் தேவை.

அந்தத் துணிச்சலுக்கு உறுதுணையாக ஆண்டவரும் அவர்களோடு சேர்ந்து அரும் செயல்கள் ஆற்றுகின்றார்.

ஆக, தங்கள் பணிக்கு பிரமாணிக்கமாக இருக்கும் திருத்தூதர்கள் பவுல் மற்றும் பர்னபாவுக்கு ஆண்டவரும் பிரமாணிக்கமாக இருக்கின்றார்.

1 comment:

  1. " குட்டக்குட்ட குனிபவனும் முட்டாள்; குனியக் குனியக் குட்டுபவனும் முட்டாள்"... இவ்வார்த்தைகளைத் தான் மெய்ப்பித்திருக்கின்றனர் துருத்தூதர்கள் பவுலும்,பர்னபாவும் யூதர்களுக்குப் பயந்து ஊர் மாற்றி ஊர் செல்லும்போது.ஆனால் அதே யூதர்களின் செயல்பாடுகளை எதிர்கொள்ள அவர்களுக்குள்ளும் துணிச்சல் பிறக்கிறது இறைவனின் துணையோடு; அவர்களுக்குள் பிறந்த துணிச்சலோடு. " என் செயல்பாட்டைத் தீர்மானிக்க என்னைத் தவிர யாருக்கு உரிமை இருக்கிறது?" ஒரு நல்ல காரியம் செய்ய முடிவெடுக்க முடியாது மனம் ஊசலாடுகையில் நம்மை நாமே கேட்க வேண்டிய கேள்வி இது.நம் துணிச்சலுக்கு உறுதுணையாக இறைவனும் கைகோர்ப்பார்.தங்கள் பணியில் பிரமாணிக்கமாக இருந்த பவுல் மற்றும் பர்னபாவுக்கு பிரமாணிக்கம் காட்டிய இறைவன்,அதே பிரமாணிக்கத்தை நம் வாழ்விலும் காட்டுவார். அன்றாட வாழ்வை வாழும் முறையை ஆணித்தரமாகக் கூறிய தந்தைக்கு நன்றிகள்!!!அனைவருக்கும் இந்த வாரம் இனிமை சேர்க்கட்டும்!!!

    ReplyDelete