Friday, May 20, 2016

எலுமிச்சம் பழம்

நீண்ட பயணங்கள் - சுற்றுலா, திருயாத்திரை - செல்வதற்கு முன் பேருந்தின், சிற்றுந்தின் சக்கரங்களுக்குக் கீழ் எலுமிச்சம் பழத்தை வைத்து ஏற்றிப் புறப்படும் பழக்கம் இன்னும் நம் ஊரில் இருக்கின்றது.

பயணத்திற்கு தடையாக இருக்கும் தீய சக்திகள் எல்லாவற்றையும் இந்த எலுமிச்சம் பழங்களுக்குள் அடக்கி, அவற்றை சக்கரத்தால் நசுக்கிவிட்டால், பயணத்தில் தடங்கல் எதுவும் இருக்காது என்பதும், தீய சக்திகள் நம் வாகனத்தை நெருங்காது என்பதும் நம்பிக்கை.

லூக்காவிற்கும் இந்த நம்பிக்கை இருந்திருக்குமோ என்று எனக்கு சந்தேகம் வருகிறது.

பவுலும், பர்னபாவும் தங்கள் முதல் தூதுரைப் பயணத்தைத் தொடங்குகின்றனர்.

இவர்களின் முதல் மற்றும் நீண்ட பயணம் என்பதால் இவர்கள் தொடக்கத்திலேயே ஒரு தீய சக்தியை எதிர்கொள்கின்றனர்.

ஒரு மந்திரவாதி பற்றி எழுதுகின்றார் லூக்கா (காண். திப 13:6-12) 'எலிமா' என்பது அவரின் பெயர். 'எலிமா' என்றாலே மந்திரவாதி. ஆக, இது அவரின் காரணப்பெயராக அல்லது பொதுப் பெயராகக் கூட இருக்கலாம்.

'அவன் அவரது கவனத்தைத் திருப்ப முயன்றான்' என எழுதுகின்றார் லூக்கா.

நாம் சுற்றுலா செல்லும்போது தீய சக்திகள் நம் ஓட்டுநரின் கவனத்தைத் திசை திருப்புகின்றன என்பது நம் எலுமிச்சம் பழ நம்பிக்கை.

அவன் என்ன செய்தான்? எப்படி திசை திருப்பினான்? - என்பது பற்றி எந்தக் குறிப்பும் இல்லை.

ஆனால், பவுல் அவனைச் சபிக்கின்றார்:

'நீ கதிரவனைக் காணமாட்டாய்!'

'கதிரவனைக் காணுதல்' என்றால் 'உயிரோடு இருத்தல்' என்பது பொருள் (காண். சபை உரையாளர் 11:7). ஆனால், நம்ம எலிமா சாகவில்லை. கண் பார்வை மட்டும் போகிறது.

'அவன் தன்னைக் கைப்பிடித்து நடத்துவதற்கு ஆள் தேடினான்' என நிகழ்வை முடிக்கின்றார் லூக்கா.

அதாவது, அடுத்தவர்களுக்கு திசை காட்டிய - திசை திருப்பிய - ஒருவனுக்கே இப்போது திசை காட்டு ஓர் ஆளின் துணை தேவைப்படுகிறது.

மேலும், இந்த இடத்தில் பவுலை லூக்கா ஆண்டவரின் அளவுக்கு உயர்த்துகின்றார்.

அதாவது, ஆண்டவரைக் கண்ட சவுலுக்கு (பவுலுக்கு) பார்வை போனது. இங்கே பவுலைக் கண்ட எலிமாவுக்கு பார்வை போகிறது.

நாம் எலிமா மாதிரி இல்லாமல் மற்றவர்களை இறைவனை நோக்கி மட்டும் திசை திருப்பலாமே!


1 comment:

  1. " ஆண்டவரைக்கண்ட சவுலுக்குப் பார்வை போனது; இங்கே பவுலைக்கண்ட எலிமாவிற்குப் பார்வை போகிறது." முதலாவது...சவுல் இறைவனின் இரக்கம் பெற்றுப் பவுலாக மாற.இரண்டாவது.... இறைவனின் தூதர்களைத் திசை திருப்பிய தீய சக்தியான எலிமாவிற்குத் தண்டனையாக. நம் வாழ்விலும் அன்றாடம் பயம்,அவநம்பிக்கை,கோழைத்தனம் போன்ற தீய சக்திகள் நம்மை ஆட்டுவிக்கையில் அந்த தீய சக்திகளை விரட்டும் எலுமிச்சம் பழமாக நாம் முன்வைப்பது எதை? என் வாழ்வின் எலுமிச்சம் பழமாக நான் கருதுவது திருப்பாடல்கள் 91 மற்றும் 121. ஒரு பயணம் தொடங்குவதற்கு முன் " தீமை உன்னை அணுகாது.துன்பம் உன் உறைவிடத்தை நெருங்காது.ஏனெனில் நீ செல்லும் இடங்களிலெல்லாம் உன்னைக் காக்கும்படித் தம் தூதருக்கு உன்னைக்குறித்து கட்டளை இட்டார்."..... இதற்கு மேல்.....இந்த வார்த்தைகளை மனத்தின் ஆழத்திலிருந்து நாம் உச்சரிக்கையில் எந்தத் தீய சக்தி நம்மை நெருங்க இயலும்? நாமும் கூட நம் வாழ்வில் அடுத்தவர்களை இறைவனை விட்டுத் திசை திருப்பும் தீய சக்தியாய் இல்லாமல்,அவர்களை இறைவனை நோக்கித் திருப்பும் நல்ல சக்திகளாக இருக்க வரம் கேட்போம்.வாழ்க்கையின் சத்தான ஒரு சாராம்சத்தைத் தந்த தந்தைக்கு நன்றியும்....வாழ்த்துக்களும்!!!

    ReplyDelete