Wednesday, May 4, 2016

பந்திக்கு முந்து

'நாங்கள் கடவுளது வார்த்தையைக் கற்பிப்பதை விட்டுவிட்டுப் பந்தியில் பரிமாறும் பணியில் ஈடுபடுவது முறை அல்ல...நாங்களோ இறைவேண்டலிலும், இறைவார்த்தைப் பணியிலும் உறுதியாய் நிலைத்திருப்போம்' (திப 6:2-4)

திப நூலின் 6ஆம் பிரிவிலிருந்து புறவினத்தாரை நோக்கி நற்செய்தி அறிவிக்கப்படுதல் தொடங்குகிறது. திரையை விலக்குமுன் லூக்கா ஒரு முக்கியமான நிகழ்வை இங்கே எழுதுகிறார்.

என்ன நிகழ்வு?

'கிரேக்க மொழி பேசும் கைம்பெண்கள் அன்றாட பந்தியில் முறையாகக் கவனிக்கப்படவில்லை!'

நம்ம வீட்டுல கல்யாண நிகழ்வு வைத்து, நாம் எல்லாரையும் விழுந்து விழுந்து கவனித்தாலும், 'என்னை அவன் கவனிக்கவே இல்லை!' என்று நம் சொந்த தாய்மாமன், சித்தப்பா, பெரியப்பா, சித்தி, அத்தை என்ற உறவினர் கூட்டம் இதுவரை நம்மை முறைத்துக்கொண்டு இருக்கும் அனுபவம் நமக்கு இருந்தால், இந்த பந்திப் பிரச்சினை எவ்வளவு பெரியதென்று நமக்குப் புரியும்.

யார் இந்த கிரேக்க மொழி பேசுவோர்?

'கிரேக்க மொழி பேசுவோர்,' 'எபிரேயம்-அரமேயம் மொழி பேசுவோர்' என்று இரண்டு குழுக்களைப் பதிவு செய்கிறார் லூக்கா. இவர்கள் இருவருமே யூதர்கள்தாம். பாலஸ்தீனாவிலேயே இருந்த யூதர்கள் எபிரேயம்-அரமேயம் பேசுபவர்கள். பாலஸ்தீனாவிலிருந்து போரினால் சிதறடிக்கப்பட்டு, அல்லது வேற்றினத்தாரோடு திருமண உறவு வைத்துக்கொண்டு, அல்லது வேற்று நாட்டில் பணி அல்லது படிப்புக்காக நெடுங்காலம் தங்க நேர்ந்து தங்கள் சொந்த தாய்மொழி மறந்து அந்நிய மொழி - அதாவது கிரேக்க மொழி பேசுவோர் மற்ற குழுவினர்.

எனக்கு இரண்டு பிள்ளைகள் இருந்து, ஒரு பிள்ளையின் பிள்ளைகள் மதுரையில் இருப்பதால் தமிழ் பேசுகின்றார்கள். மற்ற பிள்ளையின் பிள்ளைகள் நியுயார்க்கில் பிறந்ததால் அமெரிக்கன் (இது ஆங்கிலம் அல்ல) பேசுகிறார்கள். ஆக, என் வீட்டில் இப்போது இரு குழுவினர் இருப்பார்கள்: 'அமெரிக்கன்' பேசும் தமிழர்கள். 'தமிழ்' பேசும் தமிழர்கள். இந்த இரண்டு குழுக்களும் கோடை விடுமுறைக்காக (ஒரே மாதத்தில் விடுமுறை வருகிறது என வைத்துக்கொள்வோம்) என் வீட்டிற்கு வருகிறார்கள். சாப்பாட்டு அறையில் சாப்பாடு எடுத்து வைக்கும் என் வீட்டு புதிய இளவல் தட்டு வைத்துவிட்டு, ஸ்பூன்-ஃபோர்க் வைக்க மறந்துவிடுகிறாள். முன்பின் பழக்கம் இல்லாததால் அவள் அதைக் கண்டுகொள்ளவும் இல்லை. அமெரிக்கன் பேசும் தமிழர்கள் ஒரு நாள் பொறுக்கிறார்கள். இருநாள் பொறுக்கிறார்கள். மூன்றாம் நாள் என்னிடம் புகார் செய்கிறார்கள். நான் என்ன செய்வேன்? 'உங்களுக்காக நான் என் வேலையை விட்டுவிட்டு வந்து பார்த்துக் கொண்டே இருக்க முடியாது. அமெரிக்கன் கலாச்சாரமும் (அப்படி ஒன்று இருந்தால்!) அறிவும் உள்ள ஒருவரை நீங்களே கண்டுபிடியுங்கள். நீங்கள் இருக்கும் வரை அவரையே வேலைக்கு வையுங்கள்!' என்று சொல்லிவிட்டு நான் என் வேலையைப் பார்ப்பேன்.

இப்படித்தான் பிரச்சினை தீர்க்கப்படுகிறது.

அ. சாப்பாடுதானே! என்று திருத்தூதர்கள் இந்த பிரச்சினையைக் கண்டு கொள்ளாமல் விட்டுவிடவில்லை. அதற்காக, தங்கள் வேலையையும் சமரசம் செய்து கொள்ள விழையவில்லை. 'சாப்பாடும்,' 'ஆன்மீகமும்' ஒரே சமநிலையில் பார்க்கப்பட்டது. இது மார்க்சியத்தையும் தாண்டிய பார்வை. மார்க்சியம், சாப்பாட்டை கீழேயும் (base structure), ஆன்மீகத்தை மேலேயும் (super structure) வைத்துப் பார்க்கிறது. ஆனால் திருத்தூதர்கள் இதற்கு விடைகாணும் முறை எனக்கு வியப்பாக இருக்கிறது. 'பைபிள் படிங்க, செபமாலை சொல்லுங்க!' என அவர்கள் மாற்று வழி சொல்லவில்லை. செபமாலை செபித்தால் பசி அடங்காது என்பது அவர்களுக்குத் தெரியும். மேலும், அடுத்தவர்களின் பிரச்சினையை தங்கள் பிரச்சினைகளாக ஏற்று அதற்கு தீர்வு காண்கின்றனர்.

ஆ. புதியவர்களுக்கு எளிதில் வேலை. தொடக்கத்திருச்சபையில் அடுக்குமுறை அதிகாரம், வட்டம், சதுரம் என்ற மேலாண்மை என்று எதுவும் இல்லை. தேவைக்கேற்றாற்போல தங்கள் வட்டத்தை, சதுரத்தை மாற்றிக் கொண்டனர். பந்தியில் தொண்டு செய்ய என்று எழுவர் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அவர்களிடம் இருக்க வேண்டிய குணங்கள் இரண்டு: ஒன்று, தூய ஆவியால் நிரப்பப்பட்டிருக்க வேண்டும். இரண்டு, ஞானம் வேண்டும். இவர்கள் திருத்தொண்டர்கள் என்று இங்கே அழைக்கப்படவில்லை. 'திருத்தொண்டு' என்ற வார்த்தைதான் இங்கே பயன்படுத்தப்பட்டிருக்கிறதே தவிர, 'திருத்தொண்டர்' என்ற பணிநிலை கத்தோலிக்க திருமுகங்களின் காலத்தில்தான் வருகின்றது.

இ. திருத்தொண்டர்கள் முதன்மையானதை முதன்மையானதாக வைத்திருந்தனர். 'எங்கள் வேலை இறைவேண்டலும், இறைவார்த்தையைக் கற்பிப்பதுமே' என்று தங்கள் இலக்கில் தெளிவாக இருந்தனர். 'சரிப்பா, நம்ம ஆளுக்கு ஒருநாள் சுற்று எடுத்து இதை சரி பண்ணுவோம் என்றோ, அல்லது இதற்கு என்று நம்மில் 2 பேர் பொறுப்பாக இருக்கட்டும்' என்றும் சொல்லவில்லை. எதை அடுத்தவர்கள் செய்ய முடியுமோ அதை அவர்களிடம் கொடுத்துவிட்டு (delegation), தாங்கள் மட்டுமே செய்யக்கூடிய அல்லது தங்களால் மட்டுமே செய்யப்பட வேண்டிய வேலையைத் தாங்களே செய்கின்றனர். இது மிகப்பெரிய மேலாண்மைப் பாடம்.


1 comment:

  1. இன்றையப்பதிவில் நாம் அன்றாடம் வலம் வரக்கூடிய ஒரு பிரச்சனையை முன் வைத்து அதற்கு ஒரு தெளிவான தீர்வையும் திருத்தூதர்களின் வாயிலாக வெளிப்படுத்துகிறார் தந்தை.இறைவனின் வார்த்தையை எடுத்தியம்பும் திருத்தூதர்கள் அதைக் கேட்க வரும் மக்களின் ஆன்மீகப்பசியை மட்டுமின்றி அவர்களது வயிற்றுப்பசியையும் புரிந்து கொண்டு அதற்கு ஒரு தீர்வு காண விழைவது.....அதிலும் தங்களது தீர்வு தங்களின் 'இறைவார்த்தையை எடுத்துரைக்கும் பணிக்கு எந்தவிதத்திலும் முட்டுக்கட்டையாய் இருந்துவிடக்கூடாது'...என நினைத்த அவர்களின் மனப்போக்கு....இவை பிரச்சனைகளை அதனதன் தன்மையறிந்து புரிந்து கொண்டார்கள் என்பதை மட்டுமின்றி அவர்கள் எத்துணை தூரம் மக்களின் பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள் என்பதையும் காட்டுகிறது. " ஆத்துல ஒரு கால்; சேத்துல ஒரு கால்" என்றில்லாமல் அவரவருக்கு கொடுக்கப்பட்ட வேலையை சம்பந்தப்பட்டவரே செய்ய வேண்டும் என்ற அவர்களின் எண்ணம் எந்த வேலையையும் குறைத்து மதிப்பிடவில்லை என்பதையும் காட்டுகிறது. பந்தி பறிமாறும் வேலைக்குக்கூட தூய ஆவியின் பிரசன்னமும்,ஞானமும் தேவை எனில் இறைவார்த்தையை எடுத்துரைப்போரின் பின்புலம் எப்படிப்பட்ட தொன்றாக இருக்க வேண்டுமென மறைமுகமாக உணர்த்தப்புடுகிறது. இந்த திருத்தூதர் பணி நூலானது பிரச்சனைகளுக்கு மத்தியிலும் நாம் வாழ வேண்டிய கலையை எடுத்தியம்புகிறது.சின்னச் சின்ன விஷயங்கள் தான் நாளை நம்மைப் பெரிய நிலைக்கு கொண்டு செல்லும் என்பது அழகாக உணர்த்தப்படுகிறது.இவ்விஷயங்களை ஒரு திருத்தொண்டரின் நிலையிலிருந்து சிந்தாமல்,சிதறாமல் அள்ளித்தரும் தந்தையை இறைவன் சகல நலன்களாலும்,வரங்களாலும் நிரப்புவாராக!!!

    ReplyDelete