Monday, May 16, 2016

கொர்னேலியு

யூதர்கள் தூய்மையானவர்கள். யூதரல்லாத அனைவரும் தீட்டானவர்கள்.

'தூய்மை-தீட்டு' என்ற இரு வார்த்தைகள்தாம் மனித பிரிவுகளுக்கே காரணம்.

ஆணைத் தூய்மை என்றும், பெண்ணைத் தீட்டு என்றும் சொல்கிறோம்.

ஒரு சாதியைத் தூய்மை என்றும், மறு சாதியை தீட்டு என்றும் சொல்கிறோம்.

'தூய்மை' 'தீட்டு' இரண்டும் நெருங்கி வரக்கூடாது என்பதில் மிகவும் கருத்தாய் இருக்கிறோம்.

அப்படி இருந்த பேதுருவைப் புரட்டிப்போடுகிறது ஒரு காட்சி. கொர்னேலியு என்ற புறவினத்து உரோமையரை எதிர்கொள்ள பேதுரு காட்சியின் வழியாக அறிவுறுத்தப்படுகின்றார் (காண். திப 10:1-33).

இரண்டு காட்சிகள்.

முதல் நாள். பிற்பகல் மூன்று மணி. கொர்னேலியு காட்சி காண்கின்றார்.

'நீ போய் பேதுரு என்னும் பெயர் கொண்ட சீமோனை வரச் செய்!'

இரண்டாம் நாள். பிற்பகல் பன்னிரண்டு மணி. பேதுரு காட்சி காண்கின்றார்.

'கொர்னேலியுவின் வீட்டிற்குப் போ!'

கொர்னேலியு ஒரு உரோமையர். புறவினத்தார். என்னதான் பெரிய படைத்தலைவன் என்றாலும், அவர் யூதர்களைப் பொறுத்தவரையில் தீண்டத்தகாதவர்.

'தூய்மையானது எனக் கடவுள் கருதுவதை தீட்டாகக் கருதாதே!' என்பதுதான் பேதுரு கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்.

பேதுரு மட்டுமல்ல. இது நாம் ஒவ்வொருவரும் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்.

ஆனால் பாகுபாடு என்ற ஒன்று இருக்கும் வரைதான் மனித சமூகம் முன்னேறிச் செல்லும் என்பது சமூகவியலாரின் கருத்து.

ஒன்றை மட்டும் கற்றுக்கொள்ளலாம்:

'மனிதர் பார்ப்பதுபோல பார்க்காமல் கடவுள் பார்ப்பது போல பார்க்கும் பார்வை பெறுதல் சால்பு'

பேதுருவைப் பார்த்த கொர்னேலியு அவரின் கால்களில் விழுகின்றார்.

அப்போது பேதுரு சொல்லும் வார்த்தைகள் அவரின் பாவ அறிக்கையாக இருக்கின்றன: 'எழுந்திடும், நானும் ஒரு மனிதன்தான்.' ஆம். இவ்வளவு நாட்கள் பேதுரு மனிதர் பார்ப்பதுபோலத்தான் பார்த்தார். இனி அவர் இறைவன் பார்ப்பது போலப் பார்க்க வேண்டும்.

1 comment:

  1. இன்றைய நாட்டு நடப்பிற்கு சவுக்கடி கொடுப்பது போன்றதொரு பதிவு. அதிகாரத்தின் பெயரால்,ஜாதியின் பெயரால்,பணபலத்தின் பெயரால், மதத்தின் பெயரால்......இப்படி பல தரப்பட்ட ஏற்றத்தாழ்வுகளால் ஒரு மனிதனிடமிருந்து இன்னொருவனை வேற்றுப்பார்வையோடு பிரித்துப்பார்க்கும் எவருமே இன்றைக்குக் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்.இதைப் பற்றிப் பேசும் அளவுக்கு இதைக் களைதல் அத்தனை எளிதல்ல என நினைப்பவர்களுக்கு " தூய்மையானது எனக் கடவுள் கருதுவதைத் தீட்டாகக் கருதாதே!"... என்ற வார்த்தைகள் தான் வேதம். இன்றையப் பதிவில் போற்றப்படவேண்டியது கொர்னேலியுவின் 'தாழ்மையா?'இல்லைப் பேதுருவின் ' பெருந்தன்மையா?'... இரண்டுமே தான்.அடுத்தவரின் அழுக்கைப் பார்க்கும் நம் புறக்கண்களை விட, நம்மிடமுள்ள அழுக்கைப் பார்க்கும் அக்க்கண்களுக்காக இறைவனிடம் வரம் கேட்போம்.இன்றையத் தேவையறிந்து வந்த ஒரு பதிவிற்காகத் தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete