Thursday, May 19, 2016

சாதாரண கைகள்

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுக்கொண்டு இருக்கின்றன.

வாக்கு எந்திரத்தில் மக்கள் வைத்த கை இன்று தலைவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களைப் பணிக்கு அனுப்புகின்றது.

தொடக்கத் திருஅவையில் திருப்பணியில் அமர்த்துவது என்பது மிக எளிய, ஆனால் அர்த்தமுள்ள, சடங்காக இருந்தது.

முதல் ஏற்பாட்டில் அருள்பொழிவு செய்யும்போது, ஒருவரின் கைகள் நிரப்பப்பட்டன (காண். நீத 18). கைகளுக்கும் அருள்பொழிவுக்கும் நிறைய தொடர்பு இருக்கிறது.

பர்னபாவும், சவுலும் தங்கள் முதல் தூதரைப் பயணத்தைத் தொடங்குகின்றனர் (காண். திப 13:1-3). இங்கே அவர்களை இப்பயணத்திற்கு வழியனுப்புவோர் யார்?

மிகவும் சாதாரண மக்கள்.

சிமியோன், லூக்கியு, மனாயீன் என்பவர்கள் - இவர்களின் பெயரையே நாம் இங்கேதான் கேள்விப்படுகிறோம். இவர்கள் இறைவாக்கினராகவும், போதகராகவும் இருக்கின்றனர். இவர்கள் நடுவில் இருந்த பர்னபாவையும், சவுலையும் கடவுள் தனிப்பட்ட பணிக்கென தேர்ந்து கொள்கிறார்.

பணி அமர்த்துதல் மூன்று நிலைகளில் நடைபெறுகிறது:

அ. நோன்பிருத்தல்
ஆ. இறைவேண்டல் செய்தல்
இ. கைகளை வைத்து அருள்பொழிவு செய்தல்

ஒருவரின் ஒட்டுமொத்த ஆளுமையும், ஆற்றலும் அவரின் உள்ளங்கைகளில் பிரதிபிலிக்கிறது என்கிறது ஜப்பானின் 'காந்த சக்தி' ஆராய்ச்சி நிறுவனம். நாம் பயன்படுத்தும் எல்லாப் பொருள்களும் நம் கைகளின் நீட்சியே - சுத்தியல், பேனா, கத்தி, செல்ஃபோன், கணிணி.

தொடுதல் - இதற்கு இரண்டு குணங்கள் உண்டு. இது காயப்படுத்தவும் செய்யவும். காயத்திற்கு மருந்திடவும் செய்யும். அடிக்கவும் செய்யும். அரவணைக்கவும் செய்யும்.

அருள்பணி நிலை மிக சாதாரண அளவில்தான் தொடங்கியிருக்கிறது. அது காலப்போக்கில் ரொம்ப கடினமாக்கப்பட்டுவிட்டது.

கடவுளின் ஆற்றல் இயங்குவதற்கு சாதாரண கைகள்போதும்!

1 comment:

  1. 'சாதாரண' கைகள் 'அசாதாரண'மாய்மாறும் விந்தை குறித்து விவரிக்கிறது இன்றையப்பதிவு.பர்னபாவையும்,சவுலையும் தன் பணிக்கென அழைத்தது போன்றே இன்றும் நம் மக்களில் சிலரை நம்மிலிருந்து பிரித்தெடுத்து அழைக்கிறார் இறைவன். இவர்களைத் திருநிலைப் படுத்துவோர் இவர்களுக்காக நோன்பிருந்து, இவர்களில் இறைவன் இறங்கி வர வேண்டி,இவர்கள் மீது தங்கள் கைகளை வைத்து அருள் பொழிவு செய்கையில் நம்மிடமிருந்து சென்ற நம் சாதாரணர்கள், அசாதாரணர்களாகின்றனர்.இங்கே அருள் பொழிவு பெறுபவர் மட்டுமின்றி,அதைச் செய்பவரும் உயர்ந்து நிற்கிறார்." நாம் பயன் படுத்தும் பொருட்கள் அனைத்தும் நம் கைகளின் நீட்சியே" என்பதும்," ஒருவரைக் காயப்படுத்தக் கூடிய தொடுதலுக்கு அந்தக் காயத்திற்கு மருந்திடவும் முடியும்" என்பதும் இன்றையப் பதிவிற்கு பெருமை சேர்க்கும் வரிகள்.." நோன்புடன் கூடிய இறைவேண்டல் சக்தி வாய்ந்தது " என்பதை விவிலியத்தின் வாயிலாக நாம் அறிந்தும், நம் முன்னோர்கள் அளவிற்கு நம்மால் அதைச்செய்ய இயலவில்லை...பல காரணங்களுக்காக என்பது வருந்தத்தக்க விஷயம். அனைத்திற்கும் மேல் " மிகச் சாதாரண அளவில் தொடங்கிய அருள் பணியாளர்களிடம் கடவுளின் ஆற்றல் இயங்குவதற்கு சாதாரண கைகள் போதும்" என்பது இன்றையப் பதிவிற்கு சிறப்பு சேர்க்கும் விஷயம்.' அருள் பொழிவின்' மகிமையை அழகாக எடுத்தியம்பிய தந்தைக்கும்,அனைத்து அருட்பணியாளர்களுக்கும் வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete