Wednesday, April 8, 2015

டுலிப்ஸ் மலரும் ரோஜா மலரும்

ஐக்கிய அமெரிக்காவில் சில பூங்காக்களில் பூத்திருக்கும் டுலிப்ஸ் பூக்கள் பற்றி என் அம்மா சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன்.

ஐக்கிய அமெரிக்காவுக்கு டுலிப்ஸ் பூக்கள் நெதர்லாந்து நாட்டிலிருந்துதான் செல்கின்றன என்பதை நான் நேற்றுதான் கண்டுபிடித்தேன்.

விமானம் தரையிறங்கும்போது கீழே பூத்திருக்கும் டுலிப்ஸ் மலர்களைக் காட்டுவதற்காக இரண்டு பக்கவாட்டிலும் சாய்த்து விமானத்தை ஓட்டிக் காட்டுவார்கள்.

டுலிப்ஸ் மலர்களை வெளியில் பார்த்துக்கொண்டிருந்தாலும் விமானத்தின் உள்ளே படிப்பதற்கு வைக்கப்பட்டிருந்த ஒரு புத்தகம் என்னை ரொம்ப கவர்ந்தது.

இந்தப் புத்தகத்தின் மையம் 'ரோஜா பூ'. ரோஜாப்பூ பற்றிய பல்வேறு நபர்களின் கூற்றுக்களைக் குறிப்பிட்டு பல நாடுகளில் பூக்கும் பலவித ரோஜாக்களின் அணிவகுப்பின் புகைப்படங்கள் பக்கங்களை அலங்கரித்தன.

இந்தப் புத்தகங்களில் எனக்குப் பிடித்த சில வாசகங்களை இன்று பதிவு செய்ய விரும்புகிறேன்:

1. 'பெயரில் என்ன இருக்கிறது?
நாம் ரோஜாவை வேறு பெயர் சொல்லி அழைத்தால் அதன் மணம் குறைந்துவிடுமா?'
(ஷேக்ஸ்பியர்)

நமக்கு மிகவும் பரிச்சயமான கூற்றுதான். ரோமியோ-ஜூலியட் காதல் நாடகத்தில் ஜூலியட்டின் குடும்பப் பெயர் ரோமியோவின் காதலுக்குத் தடையாக மாறுவதால் அந்தப் பெயரை மாற்றம் செய்துவிடலாம் என்ற பேச்சு வரும்போது ரோமியோ சொல்லும் வார்த்தைகளே இவை. ரோஜாவின் பெயர் அதன் குணத்தை எந்தவகையிலும் பாதிப்பதில்லை. ஆக, நாம் பெயரிடும் மனிதர்கள் அல்லது பொருட்களையும் தாண்டி அவைகளின் குணங்கள் இருக்கின்றன. ஒன்றின் பெயரை வைத்து நாம் ஒன்றின் குணத்தை வரையறுத்துவிட முடியாது. 'ஐஃபோனை' வேறு பெயர் சொல்லி அழைத்தாலும் அதன் குணம் அல்லது பயன்பாடு மாறிவிடுமா என்ன?


2. 'முட்கள் இல்லாத ரோஜாக்கள் என்று எதுவும் இல்லை.
ஆனால் ரோஜாக்கள் இல்லாத முட்கள் பல இருக்கின்றன.'
(ஷோப்பன்ஹவர்)

ரோஜாக்களை நாம் கைகளில் ஏந்தும்போது அவைகளின் முட்கள் நம் கைகளைப் பதம் பார்த்தாலும் நாம் அவைகளைக் கைகளில் ஏந்தி நிற்கிறோம். முட்கள் குத்தும் வலி மறைந்து ரோஜாவின் அழகும், மணமும் மட்டுமே நம்மை நிறைக்கிறது. ஆனால் ரோஜாக்கள் இல்லாத முட்கள் காயப்படுத்த மட்டுமே செய்கின்றன. ஆக, நம்மிடம் ரோஜாவைப் போல பல நல்ல குணங்கள் இருந்து, முட்களைப் போல சில கெட்ட குணங்கள் இருந்தாலும் மற்றவர் பொறுத்துக் கொள்வர். ஆனால், நல்ல குணங்களே இல்லாமல், வெறும் கெட்ட குணங்கள் மட்டும் இருந்தால் வாழ்க்கை எவ்வளவு துன்பமாக இருக்கும்?

3. 'ரோஜாவுடன் நீ செலவிட்ட நேரமே
அந்த ரோஜாவை முக்கியத்துவம் கொண்டதாக மாற்றுகிறது!'
(அந்த்வான் தெ சாங்க்ட்-எக்ஸ்பரி)

பூங்காக்களில் ரோஜாக்கள் முதன்மையானதாகக் கருதப்படக் காரணம் அவைகளோடு மக்கள் தங்கள் நேரத்தைச் செலவிடுகிறார்கள் என்பதுதான். யாரும் நுழையாத காட்டுக்குள் பூத்திருக்கும் ரோஜா மதிப்பு பெறுவதில்லை. ஏனெனில் அவற்றோடு யாரும் தங்கள் நேரத்தைச் செலவழிப்பதில்லை. திருமண நிகழ்வுகளில் நிறைய ரோஜாப்பூக்களை வைப்பது எதற்காக? நிறையப் பேர் அவற்றை ரசிக்கிறார்கள் என்பதால்தான். மற்றொரு வகையில் நாம் அன்பு செய்யும் அனைவருமே ரோஜாக்கள். ஒவ்வொரு ரோஜாவுடனும் நாம் எவ்வளவு நேரம் செலவழிக்கிறோம் என்பதைப் பொறுத்தே அந்த ரோஜா உறவிற்கு நம் வாழ்வில் முக்கியத்துவம் இருக்கின்றது.

4. 'ரோஜாவின் வேர்களை மைக்ராஸ்கோப் கொண்டு ஆராய்வதை விட
ரோஜா தரும் மகிழ்வை அனுபவிப்பதை மேல்!'
(ஆஸ்கர் ஒய்ல்ட்)

ரோஜாவின் அழகை அனுபவிப்பதை விட்டுவிட்ட அதன் வேர்களில் மைக்ரோஸ்கோப் வைத்து, அதில் எவ்வளவு மண் இருக்கிறது என்றும் மண்ணில் எவ்வளவு புழு இருக்கிறது என்றும், வேர்களில் எவ்வளவு சகதி படிந்திருக்கிறது என்றும் ஆராய்ந்து பார்த்தால், நம் மனம் வேர்களின் அழுக்கைப் பார்த்துவிட்டு, ரோஜாவின் அழகை மறுத்துவிடக் கூடும். மற்றொருவிதமாகப் பார்த்தால், ஒவ்வொரு ரோஜாவிற்குப் பின்னும் இருக்கும் வேர்கள் கசப்பானதாக அல்லது அழுக்கானதாக இருக்கும். இந்த அழுக்கையும், கசப்பையும் கூட ரோஜா அழகாகவும், மென்மையாகவும் மாற்றிவிடுகிறது. நம் உறவுகளும் ரோஜாக்கள் தாம். அவர்களின் வேர்கள் சில நேரங்களில் கசப்பாகவும், அழுக்காகவும் நம் கண்களுக்குத் தோன்றினாலும், நம் கைகளுக்கு அவர்களின் ஸ்பரிசம் ஆறுதலாகவும், இதமாகவும்தானே இருக்கின்றன!

5. 'ஒரு சிகப்பு ரோஜா, தான் சிகப்பு ரோஜாவாய் இருக்க வேண்டும்
என நினைப்பது தன்னலம் அல்ல.
மாறாக, தன் தோட்டத்தில் இருக்கின்ற எல்லா ரோஜாக்களும்
தன்னைப் போலவே சிகப்பாகவும், ரோஜாவாகவும் இருக்க வேண்டும்
என நினைப்பதே தன்னலம்!'
(ஆஸ்கர் ஒய்ல்ட்)

ஒரு தோட்டத்தின் அழகே அதன் பன்முகத்தன்மையில் தான் இருக்கின்றது. ஒரு பூ மற்றொரு பூவிடமிருந்து நிறத்தில், உருவில் மாறுபட்டு இருப்பதால் தான் தோட்டத்திற்கு அழகு கூடுகின்றது. ஒரு தோட்டத்தில் எல்லா பூக்களும் ஒரே நிறத்திலும், ஒரே உருவத்திலும் இருந்தால் எவ்வளவு நேரம்தான் அதை நாம் ரசிக்க முடியும். ஒரு ரோஜா தன்னைப் போலவே அடுத்த ரோஜா தன்னைப் போலவே இருக்க வேண்டும் என நினைப்பது தோட்டத்தின் அழகையும், தோட்டம் அமைக்கப்பட்டதன் நோக்கத்தையும் அழித்துவிடுகிறது. வாழ்க்கை என்னும் தோட்டத்தில் அல்லது இந்த உலகம் என்னும் தோட்டத்தில் நாம் எல்லாரும் வேறுபட்டு நிற்பதுதான் பூமித்தாயின் முகத்திற்கு அழகு சேர்க்கிறது. நமது உறவுகளில் என்னைப் போலவே அடுத்தவரும் இருக்க வேண்டும் என நினைப்பது என் தன்னலம் மட்டுமல்ல. அது படைப்பிற்கு எதிரான குற்றம்.

ஒரு ரோஜாப்பூவில் இத்துணை விடயங்களா என்று ஆச்சர்யப்பட வைத்தது இந்த நூலும், அதில் நான் கண்ட கூற்றுக்களும்!


1 comment:

  1. 'ரோஜா' மலரைப்பார்க்கையில் என் நினைவுக்கு வருவதெல்லாம். 'இறைவன் அழகிய ரோஜாவோடு முள்ளையும் இணைத்து வைத்திருப்பது, அழகு இருக்கும் இடத்தில் ஆபத்தும் இருக்கும் என்பதை உணர்த்த'.....யாரோ சொல்லக்கேட்டது.ஆனால் இன்று தந்தை இம்மலரைப்பற்றிய பலரின் கூற்றுக்களைத் திரட்டிக்கொடுத்திருப்பது மிக இரம்மியமாக உள்ளது. "என்னதான் ரோஜா முள்ளோடும் அதன் வேர்கள் அழுக்கோடும் இருப்பினும் நாம் இரசிக்க வேண்டியதெல்லாம் அம்மலர்களின் ஸ்பரிசம் நமக்குத் தரும் ஆறுதலும்,இதமும்தான்";" வாழ்க்கை எனும் தோட்டத்தில் வெவ்வேறு மலர்களாகிய நாம் அனைவரும் வேறுபட்டு நிற்பதுதான் தோட்டத்திற்கு அழகு சேர்க்கிறது"......இவை போன்ற தந்தையின் ஒப்பீடும், கருத்துக்களும் தோட்டத்தின் மலர்களை எல்லாம் ஒன்று சேர்த்து ஒரு அழகிய மாலையாகத் தொடுத்து வழங்கியது போலிருந்தது. அதன் மணத்தையும் கூட நுகர முடிந்தது. தந்தையே ! தங்களின் கழுத்தில் ஒரு மாலை அணிவித்து 'மரியாதை' செய்ய வேண்டும் போல் தோன்றுகிறத..ஆண்டவனின் படைப்பில் உள்ள ஓரவஞ்சனைகளில் ஒன்று 'ட்யூலிப்' போன்ற மலர்களை மேலை நாட்டவர் மட்டுமே இரசிக்க வைத்திருப்பது.

    ReplyDelete