Saturday, April 18, 2015

உன் மீது என் கைகளை வைத்து

நாளை என் குருத்துவ அருட்பொழிவு நாள்.

ஏப்பிரல் 19, 2009 ஆம் ஆண்டு மதுரை தூய பிரிட்டோ மேனிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில் என் நண்பர்கள் டைட்டஸ், வரன், மதன் பாபு, லாரன்ஸ், இன்னாசி, திருத்துவராஜ் மற்றும் பிரின்ஸோடு இணைந்து அருட்பணியாளராக, மதுரை உயர்மறைமாவட்டத்திற்கு, பேராயர் மேதகு. பீட்டர் ஃபெர்ணான்டோ அவர்களால் திருநிலைப்படுத்தப்பட்டேன்.

உள்ளங்கைகளில் பூசப்பட்ட கிறிஸ்மா தைலத்தின் ஈரம் இன்னும் காயவில்லை. அதற்குள் ஆறு வருடங்கள் ஓடி விட்டன.

நம் வாழ்க்கையில் நாம் ஊரறிய இரண்டு முறை பவனி வருகிறோம் என்பார் கண்ணதாசன் - நம் திருமண நிகழ்வன்று முதன்முறை, நம் இறப்பின் போது இரண்டாம் முறை.

அருள்நிலை இனியவர்களுக்கு அர்ப்பணத்தின் அல்லது திருநிலைப்பாட்டின் நாள் தானே திருமண நாள். அன்று தான் நாங்கள் 'இன்பத்திலும், துன்பத்திலும், உடல்நலத்திலும், நோயிலும்!' என்று எங்கள் மறைமாவட்டத்தையே, துறவற சபையையோ கரம் பிடிக்கிறோம்.

ஆண்டுகள் ஆறு கடந்தாலும், அன்று நடந்தவை எல்லாம் இன்றும் பசுமையாக இருக்கின்றன.

இந்த ஆறாம் ஆண்டின் சிறப்பு என்னவென்றால், அருட்பொழிவு பெற்ற நாளைப் போலவே இந்த ஆறாம் ஆண்டு நாளும் ஞாயிற்றுக் கிழமை என்பதுதான்!

'அவரோடு!' (மாற்கு 3:15) என்பதுதான் எனது அருட்பொழிவு விருதுவாக்கு.

புதிய வெள்ளை அங்கி. புதிய மல்லிகை மாலை. புதிய திருவுடை. புதிய ரசப்பாத்திரம். புதிய காலணிகள். புதிய புன்னகை என பேராயர் இல்லத்திலிருந்து புறப்பட்டு ஞானா வந்தோம்.

என் அப்பாவின் இல்லாமையை இருமையாக்க என் தாய்மாமன் என்னுடன் பவனியாக வந்தார். கத்தோலிக்கர் அல்லாத அவருக்கு அது இன்னும் புதுமையான அனுபவமாகத்தான் இருந்திருக்க வேண்டும். என் ஊரிலிருந்து புறப்பட்ட பேருந்தில் வந்த விருந்தினர்கள் பெரும்பாலும் இந்துக்கள் என்பதால், திருப்பரங்குன்றம், மீனாட்சி அம்மன் கோவில், அழகர்கோவில் என்று போய்விட்டு, இறுதியாகத்தான் அரங்கத்திற்குள் வந்தார்கள். 'மாப்ள! கடைசியா மீனாட்சிய பார்த்தது உன் குருப்பட்டம் அன்னிக்குதான்!' என்று அவர்கள் இன்று சொல்லும்போதும் பெருமையாகத்தான் இருக்கிறது. ஆக, இந்து மதத்தினர் வாழ்த்தி நிற்க, கத்தோலிக்கர் அல்லாத தாய்மாமன் உடன்வர, கத்தோலிக்கத் தாய் கண்ணீர் வடிக்க, கத்தோலிக்க முறையில் நிறைவேறியது திருப்பொழிவு சடங்கு.

என் வாழ்வை இரண்டாகப் பிரித்தால் அதை தி.மு., தி.பி. என்றுதான் பிரிப்பேன் - திருப்பொழிவுக்கு முன், திருப்பொழிவுக்குப் பின். நீங்களும் தி.மு., தி.பி. என்று பிரிக்கலாம் - திருமணத்திற்கு முன், திருமணத்திற்குப் பின்.

'நான் உன் குருப்பட்டத்து அன்று எங்கு இருந்தேன்!' என்ற பூர்வ ஜென்ம உறவுகள் என்னைப் பார்த்துக் கேட்கும்போதெல்லாம், என் தங்கை மகள் அவளது அம்மாவின் திருமண ஃபோட்டோவைப் பார்த்து, 'நான் எங்கே இருக்கிறேன்!' என்று கேட்பதையே நினைத்துக்கொள்வேன். இன்று என்னுடன் இருக்கும் உறவுகள் அன்று அதே அரங்கத்தில் தான் இருந்தன. ஆனால், ஒன்றிற்கொன்று அருகருகே இருந்தும் தொட்டுக்கொள்ள முடியாத தண்டவாளங்களாய்தான் அவை அன்று இருந்தன.

திருப்பொழிவு நிகழ்வு, இரவு உணவு, அடுத்த நாள் இராசபாளையத்தில் நான் நிறைவேற்றிய முதல் நன்றித் திருப்பலி என எல்லாம் நன்றாகவே இருந்தன.

அன்பு, ஜூலி, ஃபாத்திமா, லில்லி, கண்ணன், கலா, ஹில்டா, சமா, ஷாரு, ஜெயா, அக்ஸி நான் திருத்தொண்டராக இருந்த இடத்திலிருந்து வந்திருந்த இனியவர்கள், புனேயிலிருந்து வந்திருந்தவர்கள், என் ஊர் மக்கள் என சின்ன வட்டமாக அன்று இருந்த வட்டம் இன்று ரொம்பவே விரிந்து விட்டது.

திருப்பொழிவு நாள் தயாரிப்புக்காக அலைந்த அலைச்சல், பட்ட பணக்கஷ்டம், 'என் பேர் போடல, உன் பேர் போடல' பஞ்சாயத்து, 'நான் வரமாட்டேன், நீ வரல' மனத்தாங்கல்கள், உணவு மற்றும் விருந்தினர் வரவேற்புக்காக இரவு முழுவதும் செய்த வேலைகள், தூக்கமின்மை அனைத்தும் அந்த நொடியில் மறைந்து போனது. வீடியோ வெளிச்சம், கேமராக்களின் ஃப்ளாஷ், பூக்கள் மற்றும் தைலத்தின் நறுமணம், கூட்டத்தின் வெப்பம், ஸ்பரிசம், புன்னகை என எல்லாமே நொடியில் மாறிவிட்டது.

அன்றிலிருந்து இன்றுவரை நான் ரசித்து அனுபவிக்கும், முரண்டு பிடிக்கும், கோபப்படும், சண்டை போடும் மதுரை உயர்மறைமாவட்டத்தை நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன். இந்தத் தளத்தின் பேராயர்கள், சகோதர குருக்கள், அருள்நிலை மற்றும் பொதுநிலை உறவுகள் தாம் இன்று என்னோடு உடன் நிற்கின்றன.

முன்னால எல்லாம் 'ஏன்டா இந்த வாழ்க்கைக்கு வந்தோம்!' என்று அடிக்கடி நினைக்கத் தோன்றும். 'ஏன்டா கல்யாணம் முடிச்சோம்னு!' நாம சில நேரங்களில் கேட்கிறோம்ல அப்படித்தான்.

இந்த நன்னாளில் நான் நினைவுகூறுவது பின்வரும் மூன்று இறைவாக்குப் பகுதிகள் தாம்:

'இந்தச் செல்வத்தை மண்பாண்டங்கள் போன்ற நாங்கள் கொண்டிருக்கிறோம்.
இந்த ஈடு இணையற்ற வல்லமை எங்களிடமிருந்து வரவில்லை.
அது கடவுளுக்கு உரியது.
நாங்கள் எல்லாச் சூழ்நிலைகளிலும் இன்னலுற்றாலும் மனம் உடைந்து போவதில்லை.
குழப்பமுற்றாலும் நம்பிக்கை இழப்பதில்லை.
துன்புறுத்தப்பட்டாலும் கைவிடப்படுவதில்லை.
வீழ்த்தப்பட்டாலும் அழிந்துபோவதில்லை.'
(2 கொரிந்தியர் 4:7-9)

'அறிமுகமில்லாதோர் எனத் தோன்றினாலும் எல்லாரும் எங்களை அறிவர்.
செத்துக் கொண்டிருப்பவர்கள் எனத் தோன்றினாலும் நாங்கள் வாழ்ந்துகொண்டு இருக்கிறோம்.
கொடுமையாகத் தண்டிக்கப்பட்டோர் எனத் தோன்றினாலும் நாங்கள் கொல்லப்படவில்லை.
துயருற்றோர் எனத் தோன்றினாலும் நாங்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கிறோம்.
ஏழையர் எனத் தோன்றினாலும் நாங்கள் பலரைச் செல்வராக்குகிறோம்.
எதுவும் இல்லாதவர் எனத் தோன்றினாலும் நாங்கள் எல்லாவற்றையும் பெற்றிருக்கிறோம்!'
(2 கொரிந்தியர் 6:9-10)

'அன்பு பிள்ளை திமொத்தேயுவே, உன் மீது என் கைகளை வைத்து திருப்பணியில் அமர்த்தியபோது உனக்குள் எழுந்த கடவுளின் அருட்கொடையினைத் தூண்டு எழுப்புமாறு நினைவுறுத்துகிறேன் - கடவுள் நமக்குக் கோழையுள்ளத்தினை அல்ல, வல்லமையும், அன்பும், கட்டுப்பாடும் கொண்ட உள்ளத்தையே வழங்கியுள்ளார்!' (2 திமொத்தேயு 1:6-7)

என் பயணத்தில் உடன் வரும் அன்பு உறவே உனக்கு என் வணக்கம். நன்றி!


8 comments:

  1. இனிய குருத்துவ அருட்பொழிவு நாள் நல்வாழ்த்துக்கள். இன்றைய பதிவை வசிக்கும்போது அந்த நிகழ்வில் நான் இல்லை என்றாலும் அந்த உன்னதமான நிகழ்வில் பங்குபற்றியது போன்ற உணர்வு; அத்தனை அழகாக உங்கள் திருப்பொழிவு நிகழ்வை கூறினீர்கள்.

    ஆவியின் வரம் நிறைவாகப் பெற்று இறைவார்த்தை எடுத்துரைத்து சக குருக்களின் நண்பனாக, இளைஞரின் வழிகாட்டியாக மக்களின் தந்தையாகத் திகழ்ந்து மக்களின் மனதை இறைபக்கம் ஈர்க்க இறையாசி என்றும் உம்மோடிருக்க வாழ்த்துகிறேன். இறைஇயேசுவின் ஆசீரும், தூய ஆவியின் வல்லமையும், மரியாளின் அரவணைப்பும், சகல புனிதர்களின் காவலும், காலம் முழுவதும் உங்களோடு இருப்பதாக. உங்கள் பணி தொடர எம் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. அன்பிற்கினியவரே,

      வணக்கம்.

      நலம். நாடுவதும் அதுவே.

      தங்களின் பின்னூட்டத்திற்கும், அன்புநிறை வாழ்த்துகளுக்கும் நன்றி.

      இறைவன் நம்மை நிறைவாக ஆசீர்வதிப்பாராக.

      Delete
  2. தந்தையே! தங்கள் குருத்துவ வாழ்வின் 6ம் ஆண்டைத்தொடும் இன்று தங்களையும்,தங்களோடு பயணிக்கத் தொடங்கிய அனைத்து நண்பர் குருக்களையும் வாழ்த்துவதோடு இறைவனின் திருக்கரம் என்றென்றும் தங்களைத் தாங்கி நிற்குமாறு செபிக்கிறேன்.அதே அரங்கத்தில் நானும் இருந்தும் தொட்டுக்கொள்ள முடியாத தண்டவாளமாய் இருந்தது குறித்து எண்ணும் போது வலிக்கத்தான் செய்கிறது.ஆனாலும் அங்கு இருந்இருக்கிறேன் என்பதே ஒரு ஆறுதல்தான்.தங்களது திருப்பொழிவுக்காகத் தாங்கள் பட்ட கஷ்டம் அனைத்தும் திருப்பொழிவு பெற்றவுடனே சூரியனைக் கண்ட பனியாய் மறைந்துபோனதை மலரும் நினைவுகளாய் சொல்லியிருக்கும் விதம் உம்மோடு சேர்ந்து எம்மையும் பெருமையும்,பேருவகையும் கொள்ள வைக்கிறது.2 கொரிந்தியரிலிலிருந்து தாங்கள் கோடி காட்டியிருக்கும் வரிகளும்,அன்புப்பிள்ளை திமோத்தேயுவுக்கு சொல்லப்பட்ட வரிகளும் ஒரு அருட்பணியாளரின் 'மேன்மையைக்' காட்டுவதோடு கண்களைப்பனிக்கவும் செய்கின்றன. இந்நாளில் மட்டுமல்லாமல் எந்நாளுமே தங்களுக்காக செபிப்பதோடு இறைவன் தங்களைத் தன் கண்ணின் கருவிழியாய் கரம் பிடித்து வழிநடத்த வாழ்த்துகிறேன்.இறைவனின் ஆசீரும்,தங்கள் தந்தையின் நினைவுகளும் என்றென்றும் தங்களை வழி நடத்தட்டும்.வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  3. அன்பிற்கினிய அம்மா,

    தங்களின் உச்சிமுகர் வாழ்த்துகளுக்கு நன்றி.

    இறைவன் நம்மை நிறைவாக ஆசீர்வதிப்பாராக.

    ReplyDelete
  4. Rev Father,

    "CONGRATULATIONS AND PRAYERS ON YOUR ORDINATION TO SERVE AS A PRIEST"

    GOD HAS CALLED YOU TO A SPECIAL VOCATION,
    WHICH YOU LIVE WITH REVERENCE,KINDNESS,LOVE AND JOY.
    PRAYERS FOR YOUR HEALTH,HAPPINESS AND GROWTH IN HOLINESS.

    MAY CHRIST IN HIS SACRED HEART REFRESH YOUR PRIESTLY ZEAL
    AND REWARD YOU WITH MANY HAPPY YEARS!!!!

    ReplyDelete
    Replies
    1. Thanks a lot for the wishes and prayers. God bless us. Love.

      Delete
  5. i wish you congratulations... Indeed i go through your reflection in AVE Maria... well
    i wish and pray that you shine as the stars in sky...

    ReplyDelete
  6. இன்று தான் கண்டேன்,
    இனிமை கொண்டேன்
    இல்லையில்லை,

    இதயத்தில் கொண்டேன்

    தங்களின் எழுத்துருக்களை நேசிக்கும்,

    கஸ்மீர் ரோச்.

    ReplyDelete