Monday, April 27, 2015

ஓ காதல் கண்மணி!

'எனக்குக் கல்யாணம் ஆகவில்லை. ஆனால், நிச்சயதார்த்தம் நடந்தது!'

இது இத்தாலியில் அதிகப் பெண்கள் சொல்லும் வசனம். நிச்சயதார்த்தம் என்றவுடன், திருமணத்திற்கு முன் நடக்கும் நிகழ்வு என்று நினைக்காதீர்கள். திருமணத்திற்குப் பதில் நடக்கும் நிகழ்வுதான் இது. ஒரு நிச்சயதார்த்தம் பிடிக்கவில்லையென்றால், அவரை விட்டுவிட்டு நீங்கள் மற்றொருவரிடம் நிச்சயதார்த்தம் செய்து கொள்ளலாம். ஆக, எத்தனை பேருடன் வேண்டுமானாலும் நிச்சயதார்த்தம் நடக்கலாம். நிச்சயதார்த்தம் நடந்தவுடன் இந்த இருவரும் கூடி வாழ்வதற்கு இத்தாலிய சட்டம் அனுமதிக்கிறது.

இப்போது 'ஓ காதல் கண்மணி!' நம் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. 'அலைபாயுதே' போல இருக்கிறது என்று ஒரு சிலர் கமெண்ட் அடிக்க நொறுங்கிப் போனார் மணிரத்னம்.

'தாலி கட்டிவிட்டு வேறு வேறு வீட்டில் வாழ்ந்தால் அலைபாயுதே',

'தாலியே கட்டாமல் ஒரே வீட்டில் வாழ்ந்தால் ஓ காதல் கண்மணி!'

என்றும் எஃப்.பியில் கமெண்டுகள் வந்தன.

'ஃப்ரெண்ட்ஸ் வித் பெனஃபிட்ஸ்' (Friends with Benefits) என்ற ஆங்கிலப்படத்தின் தழுவல்தான் என்பது ஆங்கிலப்படம் பார்த்த எல்லாருக்கும் தெரியும். ஆனால் இதை நம்ம மணி ஏற்க மறுக்கிறார். சரி! கதைக்கு வருவோம்!

அலைபாயுதே பார்த்த நம் தலைமுறை தாலி கட்டி வேறு வேறு வீடுகளில் வாழ்ந்தது. இதைப் போல புதிய தலைமுறையும் இனி தாலியே கட்டாமல் சேர்ந்து வாழத் தொடங்கிவிடுமோ என்று பயப்படுகிறார்கள் சிலர். இன்னும் சிலர் தாலி அறுப்பு, தாலி மறுப்பு போன்ற போராட்டங்களையும் நடத்திக் கொண்டிருக்கின்றனர். இதையெல்லாம் யோசித்த மணி கடைசியாக திருமணத்தை உள்ளே கொண்டு வருகின்றார். தன் தாய் தந்தையின் திருமணம் நிலைக்காததால் திருமணம் என்ற நிறுவனத்தின் நம்பகத்தன்மையை மறக்கும் கதாநாயகி எப்படி இறுதியில் இதற்கு சம்மதிக்கிறார் என்ற கேள்விக்கு திரைப்படத்தில் பதில் இல்லை. அல்சைமர் நோயில் தவிக்கும் கணவருக்கு மனைவிதான் பாதுகாப்பு என்றும், ஆகவே திருமணம் செய்வீர் என்றும் சொல்லப்படுகிறது. அல்சைமருக்கு திருமணம் தேவையில்லையே. நல்ல மருத்துவரோ, நர்ஸோ உடனிருந்தால் போதுமே.

'உலகத்துல நடக்குறத தான் காட்டினேன்!' என்கிறார் மணி.

'நீ காட்டுவதைப் பார்த்துதான் உலகம் நடக்கிறது!' என்கிறார்கள் மக்கள்.

என்ன செய்வதென்று கண்மணிக்கும் தெரியவில்லை. காதலுக்கும் தெரியவில்லை.

இதற்கிடையில் மற்றொரு பக்கம் ராகவா லாரன்ஸின் காஞ்சனா, முனி-3 பேயாட்டம் போடுகிறது.

கடைசியல பஞ்ச் லைன் இதுதான்...

நம்ம கண்மணியோடு காஞ்சனாவுக்குப் போறதா?

அல்லது

நம்ம காஞ்சனாவோட கண்மணிக்குப் போறதா?






3 comments:

  1. எதைக் கொடுத்தாலும் ஜீரணிக்கும் மக்கள் இருக்கும் வரையில் கல்லையும்,மண்ணையும் கூட நம் வாய்க்குள் நுழைத்துவிடுவார்கள் நம் சினிமாக்கார்ர்கள்.இதற்கு மணிரத்னமும் சரி,இந்தக் காதல்கண்மணியும் சரி விதிவிலக்கல்ல.தந்தையின் பஞ்ச் லைனுக்குப்பதில்...நீங்கள் கண்மணியோடு காஞ்சனாவுக்கும் போகவேண்டாம்; காஞ்சனாவோடு கண்மணிக்கும் போகவேண்டாம்......தங்களுக்கென்று ஒரு தனி லைன் இருக்குமே அதில் போங்க! என்ன என்மேல் கோபம் வருதா?

    ReplyDelete
  2. Anonymous4/28/2015

    Good evening Yesu. How are you. Take care

    ReplyDelete
  3. Anonymous4/28/2015

    Good evening Yesu. How are you. Take care

    ReplyDelete