Thursday, April 23, 2015

யாரு...செல்வம் மகனா?

'போறது யாரு...செல்வம் மகனா?'

இந்த வார்த்தைகள் நான் என் கிராமத்திற்குள் நுழையும்போது என் காதில் அடிக்கடி விழுந்திருக்கின்றன.

'ஆரோக்கியசாமி பேரனா?' 'கலைஞர் மகனா?' என்றும் சிலர் கேட்டிருக்கிறார்கள்.

நம் சொந்த ஊரில் நம் அடையாளம் பெரும்பாலும் நம் பெற்றோரை அல்லது பெற்றோரின் பெற்றோரை வைத்தே இருக்கின்றது. ஏனெனில் ஒவ்வொரு கிராமமும் வாழையடி வாழையாக வளர்ந்து கொண்டே இருப்பதால், அங்கே வேர்களை வைத்தே கிளைகள் அடையாளம் சொல்லப்படுகின்றன.

கொஞ்சம் நகரத்துக்குள் வந்தால், நம் அடையாளம் மாறிவிடுகிறது.

நாம் செய்யும் வேலை - ஆடிட்டர், டாக்டர், வக்கீல், டீச்சர், வாத்தியார். சிஸ்டர், ஃபாதர், ரிக்ஷாக்காரர், நாம் பேசும் மொழி அல்லது இனம் - மலையாளி, தெலுங்கன், நாம் படிக்கும் படிப்பு, நாம் அணிந்திருக்கும் சட்டை அல்லது கண்ணாடி - ஏய்...வெள்ளை சட்டை போட்ட தம்பி...என்றும், 'அந்த கறுப்பு கலர் டீசர்ட் இருக்கிற டேபிளுக்கு தண்ணி வை!' என்று ஹோட்டலில் அடையாளம் காட்டப்பட்டதும் உண்டு - இவைகள் தாம் நகரத்தில் நம் அடையாhளங்களாகின்றன.

நம்மை முன்பின் தெரியாத ஒரு ஊருக்குச் செல்லும்போது நம் உடலின் நிறம் அல்லது தலைமுடியின் நிறம், நாம் பேசும் மொழி நமக்கு அடையாளமாகிறது.

கொஞ்சம் நாடு விட்டு நாடு வந்தவுடன் இந்த அடையாளம் எப்படி ஆகிவிடுகிறதென்றால், நாம் வெளிநாட்டில் எண்களை வைத்தே அடையாளம் சொல்லப்படுகிறோம். நம்ம ஊருல ஜெயில் கைதிகளுக்கு கொடுக்கப்படும் நம்பரைப் போலத்தான் இது.

நாட்டுக்கு நாடு இது மாறுபடுகிறது. அமெரிக்க ஐக்கிய நாடுகளில் சோஸியல் செக்யூரிட்டி எண், ஜெர்மனியில் தேசிய அடையாள எண், பிரான்சில் சமூக அங்க எண் என இதன் பெயர்கள் மாறுபட்டாலும், இது சொல்லும் அடையாளம் ஒன்றுதான்.

ஒரு தனிநபர் வெறும் எண்ணாக மட்டுமே பார்க்கப்படுவது வருத்தமாக இருந்தாலும், வசதிக்காக இதைப் பயன்படுத்துகிறோம் என்றே நாம் கருதுவோம்.

'து ஆய் கோதிச்சே ஃபிஸ்காலே?'

(உன்னிடம் பணப் பரிமாற்ற எண் இருக்கிறதா?)
சிம் கார்ட் வாங்கும்போது வோடஃபோன் ஸ்டோரில் சிகப்பு கலர் கோட், சிகப்பு கலர் ஷார்ட்ஸ் அணிந்திருந்து அமர்ந்திருந்த அந்த இளவல் கேட்ட என்னிடம் கேட்ட முதல் டாக்குமெண்ட் இதுதான்.

எண்ணும் எழுத்தும் கொண்ட 16 இலக்கம் தான் கோதிச்சே ஃபிஸ்காலே. இங்கே நாம் எந்தவொரு பொருள் வாங்கினாலும், எந்த சேவையைப் பயன்படுத்தினாலும் (மருத்துவம், பயணம்), வங்கியில் பணப்பரிமாற்றம் செய்தாலும் இந்த எண் அவசியம்.

நம்ம ஊரில் இதை பான் கார்டு என்று சொன்னாலும், பான் கார்டு பணப்பரிவர்த்தனை செய்ய மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. இப்போது கொஞ்சம் கொஞ்சமாக பயன்பாட்டிற்கு வருகின்ற ஆதார் எண்ணை இதற்கு நெருக்கமாகச் சொல்லலாம்.

இந்த எண் எனக்குச் சொல்வது இதுதான்:

தனிநபர் அடையாளம்.

ஐஃபோனை அடையாளப்படுத்த வார்த்தைகள் தேவையில்லை. ஐஃபோன் மட்டுமே போதும். அப்படியென்றால் என்னை நான் அடையாளப்படுத்துவது எப்படி?


1 comment:

  1. 'Identity'.... ஒரே வார்த்தையில் ஒருவருடைய பின்புலத்தையே புட்டு வைக்கும் வார்த்தை.முகம் மலரவும் வைக்கலாம்; முகத்தைச் சுருக்கவும் வைக்கலாம்.நாம் என்னதான் சமூகத்தில் சாதிப்பவர்களாக இருப்பினும் நம்மைப் பெருமைப்பட வைப்பது இன்னார் மகன்/ மகள் என்று சொல்லும்போதுதான்.அதுதான் தந்தையின் மொழியில் வேர்களுக்கும்,கிளைகளுக்குமுள்ள பந்தம்.நாளை நம் கிளைகள் தம் வேர்களை நினைத்துப் பெருமைப்படக்கூடிய வாழ்க்கை வாழ்கிறோமா? யோசிப்போம்.ஆமாம் தந்தைக்கென்ன அப்படியொரு obsession இந்த ஐஃபோன் மீது? நாளை இதற்கு மேல் ஒன்று வரின் இதன் மவுசும் ஒரு டேபிள் வெய்ட் அளவுதான்.( இது தாங்கள் சொன்னதுதான்!)....

    ReplyDelete